ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘முசாஃபிர்’ மியூசிக் ஆல்பம் வெளியீடு தேதி அறிவிப்பு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘முசாஃபிர்’ மியூசிக் ஆல்பம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்கி வருகிறார். இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பிற்கு ஐதராபாத்திற்கு சென்றபோது, கொரோனா தொற்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தார். இதனால் சில நாட்கள் மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து ‘முசாஃபிர்’ என்ற டைட்டில் கொண்ட இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த மியூசிக் ஆல்பத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ள நிலையில், தற்போது இந்த மியூசிக் ஆல்பம் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் எட்டாம் தேதி யூ-டியூப் சேனலில் இந்த மியூசிக் ஆல்பம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கித் திவாரி இசையமைப்பில் உருவாகிய இந்த மியூசிக் ஆல்பத்தை ‘பே பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித், தெலுங்கில் சாகர் மற்றும் இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் இந்த மியூசிக் ஆல்பத்தை பாடியுள்ளனர்.