எனிமி படம் திரையிட தியேட்டர்கள் கிடைக்கவில்லை – தயாரிப்பாளர் வினோத் புகார்
அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் தீபாவளி தினத்தில் போதிய திரையரங்குகள் தங்கள் திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை என எனிமி திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் கதறல் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தில் திரைக்கு வர உள்ளது. நயன்தாரா, மீனா ,கீர்த்தி சுரேஷ், குஷ்பூ என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை விநியோகம் செய்யும் பொறுப்பை கவனித்து வருகிறது. இதன் காரணமாக தீபாவளி தினத்தில் வெளியாகும் பிற திரைப்படங்களுக்கு போதிய எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என பரவலாக பேசப்படுகிறது.
சிம்புவின் மாநாடு திரைப்படம் தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அண்ணாத்த திரைப்படத்திற்கு வழிவிட்டு போட்டியிலிருந்து மாநாடு திரைப்படம் விலகியது. இந்நிலையில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஆர்யா விஷால் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டு இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் எனிமி திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பிய குரல் பதிவு ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அண்ணாத்த திரைப்படம் அதிக திரையரங்குகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் தனது திரைப்படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என கதறும் தயாரிப்பாளர் வினோத் உரிய திரையரங்குகளை ஒதுக்கித் தருமாறு தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டுள்ளார். அண்ணாத்த திரைப்படம் மட்டுமே ஒரே நாளில் வெளியானால் அது ரசிகர்களுக்கு போதுமானதாக இருக்காது என்றும் தமிழகத்தில் மொத்தமுள்ள 900 திரையரங்குகளில் 250 திரையரங்குகளையாவது தங்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும் எனவும் வினோத் வலியுறுத்தியுள்ளார்.