எதற்கும் துணிந்தவன் விமர்சனம்: முடியாததை முடித்துக் காட்டும் பெண்களின் பாதுகாப்புக்கு அரணாக விளங்கும் துணைவன் 3.5/5
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.
இதில் சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சூரி, இளவரசு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-ரத்னவேலு, இசை-டி.இமான், பாடல்கள்-சிவகார்த்திகேயன், யுகபாரதி, விக்னேஷ் சிவன், படத்தொகுப்பு- ரூபன், கலை இயக்கம்-ஜாக்கி, சண்டை-ராம்லட்சுமண், அன்பறிவு, ஒலி வடிவமைப்பு-சுரேன், மக்கள் தொடர்பு-யுவராஜ்.
வடநாடு, தென்னாடு என்ற இரண்டு ஊரில் பெண் கொடுத்து பெண் எடுக்கும் பழக்கம் பல தலைமுறைகளாக தொடர்ந்து கடைப்பிடித்து சுமூகமாக வாழும் மக்கள், பெண்களை போற்றும் விழாக்களை நடத்தி பெருமை படுத்தும் வழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் வடநாடு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட தென்னாடு பெண் தற்கொலை செய்து கொள்ள, அதன் பின் பல மரணங்கள் நடக்க இரண்டு ஊர்களிலும் சண்டை ஏற்பட்டு பகையாகின்றனர். அதனால் ஊர் கட்டுப்பாடு விதித்து தென்னாடு பெண்களை வடநாடில் கொடுக்கக்கூடாது என்ற தீர்;மானத்தால் விழாக்களும் நடைபெறாமல் போகிறது. வடநாடில் முக்கிய பெரும்புள்ளியாக திகழும் வினய் தன் தொழில் சம்பந்தமாக பலகோடி ஒப்பந்தங்களை முடிக்க தன் கட்டுப்பாட்டில் ஒரு பெரிய கும்பலை தயார் செய்து காதலிப்பது போல் பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டி பணிய செய்து, அவ்வாறு மறுப்பவர்களை கொலை செய்து தன் அரசியல் அதிகாரத்தால் மூடி மறைத்து காரியத்தை சாதித்து கொள்கிறார். இதைக் கண்டிக்கும் தன் மனைவியையே கொலை செய்து டிரைவருடன் மும்பைக்கு ஒடி விட்டார் என்று கட்டுக்கதை கட்டி மக்களையும். மாமனாரையும் ஏமாற்றுகிறார். இளம் விஞ்ஞானியாக ஆசைப்பட்டு வழக்கறிஞராக மாறும் சூர்யா(கண்ணபிரான்) இந்த கொலைகளுக்கு காரணமானவர்களை தக்க ஆதாரத்துடன் பிடிக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார். வடநாடில் உள்ள பிரியங்கா மோகனை காதலித்து பல எதிர்ப்புகளுக்கு பிறகு சூர்யா கரம் பிடிக்கிறார். வினய்யின் கொலைகளுக்கு ஆதாரங்களை திரட்டும் சூர்யாவை பழி வாங்க சூர்யாவின் குடும்பத்திலேயே பல சிக்கல்களை வினய் ஏற்படுத்துகிறார். இதனால் சூர்யா அதிர்ச்சியானாலும் சமாளித்து எவ்வாறு இதிலிருந்து மீண்டார்? பல பெண்களின் வாழ்க்கை பாழாகாமல் எப்படி காப்பாற்றினார்? அதற்காக செய்த துணிச்சலான தியாகம் என்ன? என்பதே படத்தின் முடிவு.
கண்ணபிரானாக சூர்யா இரண்டு ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் அவருடைய படத்தை மக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் கமர்ஷியல் படமாகவும் சமூக அக்கறை கொண்ட படமாகவும் தந்து இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டிருக்கிறார். கலகலப்பு, நடனம், பாடல், காதல், ஆக்ஷன், பஞ்ச் வசனம், செண்டிமென்ட் என்று நவரசங்களும் கலந்து சும்மா சுர்ரென்று விறுவிறுப்பாக கொடுத்துள்ளார். பெண்களுக்கு புதிய புத்திமதிகளையும், தைரியத்தையும் கொடுத்து பிரச்னைகளை சமாளிக்க கற்றுக்கொள்ளவேண்டும், உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்க கூடாது என்பதை வலியுறுத்தியிருப்பது ஹைலைட். ‘ஆண் பிள்ளைகளை அழக்கூடாது எனச் சொல்லி வளர்ப்பதைவிட, பெண்களை அழ வைக்கக்கூடாது என சொல்லி வளர்க்க வேண்டும்”, ‘ஒரு வீடியோ வெளியானால் அதற்காக வெட்கப்படவேண்டியது அந்த வீடியோவில் இருப்பவர்கள் அல்ல, அதை எடுத்தவர்கள்”, ‘கோட்டு போட்டாதான் ஜட்ஜ், வேட்டி கட்டினா நானே ஜட்ஜ்” என்று தீர்ப்பையும் கொடுத்து பஞ்ச் வசனங்களால் பட்டையை கிளப்பி ரசிகர்களில் கரவொலியில் மாஸ் காட்டுகிறார்.
ஆதினியாக பிரியங்கா மோகன் துறுதுறு காதலியாக, உணர்ச்சிகை வெளிப்படுத்தும் மனைவியாக இரண்டிலும் சரிசமமாக பங்களிப்பை கொடுத்து கை தட்டல் பெறுகிறார்.
இவர்களுடன் அப்பா ஆதிராயராக கண்டிப்பான ஆனால் மகனுக்கு ஒரு கல்தூணாக நின்று ஆதரவளிக்கும் சத்யராஜ், அமைதியான, ஆர்ப்பாட்டமான வில்லன் இன்பாவாக வினய், அம்மா கோசலையாக சரண்யா பொன்வண்ணன், சூளாமணியாக சூரி, கானா மூனாவாக இளவரசு, காவிரி நாடானாக வேல ராமமூர்த்தி, கருப்பையாவாக எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சுமணியாக தேவதர்ஷினி, கோகிலனாக புகழ் மற்றும் பலர் அவரவர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இரண்டு ஊர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்வியலை அழகாக படம்பிடித்து அதில் ஏற்படும் பிரச்னைகளையும், சண்டைகளையும் தன் காமிரா கோணங்களில் கொடுத்து, அதனால் பாதிக்கப்படும் பெண்களின் பரிதாப நிலையை எடுத்துக்காட்டி, வில்லன்களை அடித்து நொறுக்கும் காட்சிகளை மிரட்டலாக, ஆச்சர்யபடும் வகையில் காட்சிக்கோணங்களில் கொடுத்து திறமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ரத்னவேலு.
சிவகார்த்திகேயன், யுகபாரதி, விக்னேஷ் சிவன் ஆகியோர் கொடுத்துள்ள துள்ளல் பாட்டுக்கள், குத்துப்பாடலுடன் பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான்.
படத்தொகுப்பு- ரூபன்,கலை இயக்கம்-ஜாக்கி, சண்டை-ராம்லட்சுமண், அன்பறிவு ஆகியோர் கிராமத்து கதையை தங்களின் கைவண்ணத்தில் அதிரும் சரவெடியாக கொடுத்து அதிர வைத்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த சமூக பிரச்னையை பாலியல் வன்கொடுமையை இரண்டு ஊர்களின் பிரச்னையாக மையப்படுத்தி அதில் பெண்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏமாற்றப்பட்டால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தைரியத்தோடும் துணிந்து தவறு செய்தவர்களை காட்டிக்கொடுத்து தண்டனை கொடுக்க வேண்டும் அதனால் பல பெண்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும், தவறு செய்தவர்கள் பயப்படுவார்கள் என்பதையும், பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், தவறு செய்தால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லி இறுதிக்காட்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க தனிஒரு மனிதன் சுயநலமாக யோசிக்காமல் பொதுநலமாக கருதி எடுக்கும் துணிச்சலான முடிவை சஸ்பென்ஸ் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.
மொத்தத்தில் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் முடியாததை முடித்துக் காட்டும் பெண்களின் பாதுகாப்புக்கு அரணாக விளங்கும் துணைவன்.