‘உயிரின் உயிரே பிரிந்துவிட்டாயே- பாடகர் கேகே மறைவுக்கு ஹாரிஸ் முதல் யுவன் வரை இரங்கல்

0
100

‘உயிரின் உயிரே பிரிந்துவிட்டாயே- பாடகர் கேகே மறைவுக்கு ஹாரிஸ் முதல் யுவன் வரை இரங்கல்

மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு பிரதமர் மோடி, இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது. பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பல உணர்ச்சிகளை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

என் “உயிரின் உயிரே” பிரிந்து விட்டதாக ஹாரிஸ் ஜெயராஜ் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். “என் “உயிரின் உயிரே” மறைந்தது. லெஜண்ட் படத்தில் கடைசியாக அவர் பாடிய பாடலான “கொஞ்சி கொஞ்சி” பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, இப்படியொரு அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன், அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “சித்து மூஸ் வாலாவை தொடர்ந்து இப்போது கே.கே! நம் நாட்டின் இசை சமூகத்திற்கு இது ஒரு சோகமான வாரம். வாழ்க்கை கணிக்க முடியாதது & அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாதது. உங்களை மிஸ் செய்கிறோம் கேகே.” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது இரங்கல் பதிவில், “இளைப்பாருங்கள் நண்பரே. இது பயங்கரமான இழப்பு. கே.கே.யின் மாயாஜாலக் குரலும் இசையும் என்றென்றும் நம்மிடையே எதிரொலிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று பல்வேறு தலைவர்களும், திரைபிரபலங்களும் பாடகர் கே. கே.-வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் ஏராளமான ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கே.கே.வின் பாடல்களை பதிவிட்டு, தங்களது சோகத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.