உத்ரா சினிமா விமர்சனம்: திகில் த்ரில் இரண்டும் கலந்த பேய்ப்பிரியர்களுக்கான படம்
ரேகா மூவிஸ் சார்பில் ஆ.சக்கரவர்த்தி தயாரிப்பில் உத்ரா திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் நவீன் கிருஷ்ணா.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு :ஏ.ரமேஷ், இசை : சாய் .வி, படத்தொகுப்பு – எஸ்.பி.அஹமது, நடனம் : ராதிகா, வசனம்: டி.ஜெ.குமார், பாடல்கள்- அ.வெண்ணிலா, அய்யப்ப மாதவன், தமிழ்செல்வி, வடிவரசு, கதை : ராஜ்குமார் .சி, பிஆர்ஒ-பிரியா
வட்டப்பாறை மலை கிராமத்தில் அமானுஷ்ய சக்தி நடமாட்டத்தை அறிந்து தங்கள் பாட ஆராய்ச்சிக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கின்றனர். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, மரண பயத்தால் திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது திருமணம் நடந்தாலும் அந்த புது மண தம்பதி அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். இது மூட நம்பிக்கை என்று கல்லூரி மாணவர்கள் நிரூபிக்க தங்களுக்குள் ஒரு ஜோடியை தேர்வு செய்து திருமணம் நடத்தி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று அந்த ஊர் மக்களை நம்ப வைக்கின்றனர். அதை நம்பும் கிராம மக்கள் தங்கள் ஊர் ஜோடி ஒன்றுக்கு திருமணம் செய்து வைக்க திருமணமான புதுமண தம்பதி அன்றிரவே அரூபத்தால் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த ஊர் மக்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடிக்கிறது? அதன் பின்னணி மர்மம் என்ன? உத்ரா யார்? அவர் கொடுத்த சாபம் என்ன? உத்ரா அந்த ஊர் மக்களை விட்டு செல்ல என்ன வேண்டும் என்று கேட்டார்? என்பதே மீதிக்கதை.
உத்ராவாக நாயகி ரக்ஷா ராஜ் துள்ளனான நடிப்பும், பொங்கி எழும் வசனமும், இறுதிக் காட்சியில் அவமானப்படும் போது தனக்கு ஊர் மக்கள் உதவாத காரணத்தால் அம்மன் முன் எடுக்கும் சபதம் என்று அசத்தலான துடிப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார், பரிதாப்படவைக்கிறார்.
நடிகை கௌசல்யா முக்கியமான இறுதிக்காட்சியில் அமைதியான அழகான அம்மனாக உத்ராவிடம் கண்டிப்பு காட்டி புரிய வைக்கிறார்.
ஹீரோயின் கதை கரு என்பதால், ஹீரோவுக்கு பெரிதாக வேலையில்லை.ஊர்ப் பெரிய மனிதராக நடித்திருக்கும் தவசி, நாயகியின் பாட்டி மற்றும் நாயகியின் உறவுக்காரரான நிக்கோலஸ், வில்லன் மாசி ஆகியோர் தங்களது பங்களிப்பை நடிப்பின் மூலம் கொடுத்திருக்கிறார்கள்.கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த கதை இடம் கொடுக்கவில்லை.
மலை நிலப்பரப்பின் அழகிய அழகை உணரும் வகையில் படம்பிடித்திருக்கும் ஏ.ரமேஷ்ஷின் ஒளிப்பதிவு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.
சாய்தேவின் பின்னணி இசை திரைக்கதைக்கு உயிர் கொடுக்கிறது.
லாஜிக் இல்லா திரைக்கதையில் வித்தியாசமான பேய்க் கதை, உத்ராவின் கதையை சொல்ல ஆரம்பிக்கும் போது தான் சுவாரஸ்யம் ஏற்படுகிறது அதன்பின் முடிந்த வரை முயற்சி செய்து அழுத்தமான பேய் கதையை மிரட்டலாக கொடுக்க நினைத்திருப்பதற்காக இயக்குனர் நவீன் கிருஷ்ணாவை பாராட்டலாம்.
மொத்தத்தில் ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரித்துள்ள உத்ரா திகில் த்ரில் இரண்டும் கலந்த பேய்ப்பிரியர்களுக்கான படம்.