இறுதியாக மனைவி முகத்தைப் பார்க்க பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்

0
289

இறுதியாக மனைவி முகத்தைப் பார்க்க பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘ஆர்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று இரவு அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மனைவியின் உடலுக்கு, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கவச உடை அணிந்தபடி வந்து அஞ்சலி செலுத்தினார். அவர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதை பார்த்து அருகில் இருந்தவர்கள் மனமுடைந்து போயினர்.

திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செத்தியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “நேர்த்தியான இயக்குனர் – நுட்பமான திரைக்கலைஞர் சகோதரரர் அருண்ராஜா காமராஜ்அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்” என்று நேரில் மரியாதை செய்ததோடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் சிவகார்த்திகேயனும் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அருண்ராஜா காமராஜ் பிபிஇ கிட்டுடன் தனது மனைவியின் முகத்தை கடைசியாகப் பார்க்க வந்த அந்தப் படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.