இறுதிக்கட்ட படப்பிடிப்பு : மும்பையில் சிம்பு, கௌதம் வாசுதேவ மேனன்!
வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இதற்காக சிம்பு, கௌதம் உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர்.
ஐசரி கணேஷின் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இரு படங்களில் நடிக்க சிம்பு ஒப்பந்தமானார். முதல் படமாக கௌதம் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படம் வெளியாகும் என்றனர். பட அறிவிப்பும் வெளிவந்தது. இந்நிலையில், தனுஷ் அசுரனில் நடித்தது போன்று ஒரு படம் நடிக்க ஆசைப்பட்டார் சிம்பு. இதற்காக, நதிகளிலே நீராடும் சூரியனை தள்ளி வைத்து, ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு அவரது திரைக்கதையில் வெந்து தணிந்தது காடு படத்தை ஆரம்பித்தனர். திருச்செந்தூரில் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ச்சியாக பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தினர்.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக சிம்பு உள்ளிட்ட படக்குழு மும்பை சென்றுள்ளது. மும்பையில் கௌதம் படப்பிடிப்புக்கான லொகேஷன்கள் பார்த்து வருகிறார். மும்பை ஷெட்யூல்டுடன் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுவிடும் என படக்குழு கூறியுள்ளது.
சிம்பு இதுவரை ஏற்காத வித்தியாசமான வேடத்தில் இதில் நடித்துள்ளார். படத்துக்கு ரஹ்மான் இசையமைக்க, தாமரை பாடல்கள் எழுதுகிறார். இந்தப் படம் முடிந்ததும் கௌதம் இயக்கத்தில் நதிகளிலேநீராடும் சூரியன் படத்தில் சிம்பு நடிப்பார் என கூறப்படுகிறது. இதற்கு முன் சிம்பு – கௌதம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தனர். வெந்து தணிந்தது காடு இவர்கள் இணையும் மூன்றாவது படமாகும்.