இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி ஆக்ஷனில், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ஹரா
தாபரணா கதே திரைப்படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் சாருஹாசன், அதன் பின்னர் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் விஜயஸ்ரீ இயக்கத்தில் ‘தாதா 87’ படத்தில் கதையின் முன்னணி பாத்திரமாக நடித்து வெற்றியும் பெற்றார்.
பெண்களின் அனுமதியின்றி அவர்களைத் தொட்டால் சட்டப்படி குற்றம் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்தியது. இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக படத்திற்கு முன் போடப்படும் டிஸ்கிளைமரிலும் இந்த கருத்து இடம்பெற்றது.
திரையுலகில் 27 வருடமாக தொடர்ந்து வெற்றிகரமாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் நிகில் முருகனை ஒரு நடிகராக காண்பிக்க முடியும் என்று இயக்குநர் விஜயஸ்ரீ தனது அடுத்த படைப்பான் ‘பவுடர்’ மூலம் நிரூபித்தார்.
கலர் சட்டைகளை தனது அடையாளமாக கொண்ட நிகில் முருகனை ‘பவுடர்’ படத்தில் ஒரே ஒரு காக்கி சட்டை அணிந்து நடிக்க வைத்திருக்கிறார் விஜயஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது .
நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தையோ அல்லது மற்ற விவரங்களையோ வெளியிட கூடாது என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் ‘பவுடர்’.
இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என்று அனைவராலும் பாராட்டு பெற்ற நடிகர் மோகனை ‘ஹரா’ என்ற படத்தின் மூலம் இயக்கி ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார் விஜயஸ்ரீ.
நல்ல கதாபாத்திரம் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியோடு இருந்த மோகன், தனக்கு வந்த குணச்சித்திர வேடங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு காத்திருந்தார்.
‘தாதா 87’ திரைப்படம் மற்றும் ‘பவுடர்’ டீசரை பார்த்து விஜயஸ்ரீயிடம் கதை கேட்ட அவர், கதையை கேட்டவுடன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது இத்தனை வருட காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டது என்று பூரித்துப் போனார்.
இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பரவலாகப் பேசப்படும்.
பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும்.
தொழில்நுட்பம் மற்றும் காட்சியமைப்பு மூலம் தனி பாதை அமைத்த மணிரத்னம், பிரமாண்டம் மூலம் தனி அடையாளம் ஏற்படுத்திய ஷங்கர் ஆகியோரை தொடர்ந்து எல்லோருக்கும் தெரிந்த, அறிமுகம் ஆன நபர்களை தனது வித்தியாசமான கோணத்தின் மூலம் தடம் பதிக்க வைக்கும் விஜயஸ்ரீ தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி மணிரத்னம்,ஷங்கர் வரிசையில் இடம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் குறித்த மேலும் பல சுவாரசிய தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும்.