ஆரம்பத்தில் பயமாக இருந்தது…. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

0
129

ஆரம்பத்தில் பயமாக இருந்தது…. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’.

கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

வரும் நவ-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சத்யஜோதி தியாகராஜன், சித்ரா லட்சுமணன், எஸ்.ஆர்.பிரபு, கே.ராஜன், தனஞ்செயன், விநியோகஸ்தர் சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப்படம் பண்ணலாம் என சிம்புவிடம் இருந்து அழைப்பு வந்தபோது இவ்வளவு பெரிய படத்தை நம்மால் பண்ண முடியுமா என ஆரம்பத்தில் பயமாக இருந்தது. ஆனால் படம் முடிந்து பார்த்தபோது சிம்பு என்னிடம் ஒப்படைத்த வேலையை நூறு சதவீதம் சரியாக செய்திருக்கிறேன் என்கிற திருப்தி கிடைத்தது. உக்கம்சந்த், திருப்பூர் சுப்பிரமணியன் போன்றவர்கள் ஆதரவுடன் எந்தவித தடங்கலும் இல்லாமல் படத்தை முடித்து விட்டோம்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்..நாதன் இந்திப்படம் போல காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவுக்கு எப்படி காதலுக்கு மரியாதை படம் ஒரு கம்பேக் படமாக இருந்ததோ, அதேபோல யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த மாநாடு படம் இருக்கும். எஸ்ஜே.சூர்யா கூட, இது இன்டர்நேஷனல் சப்ஜெக்ட்.. ஹிந்தி ரீமேக் நல்லா போகும் என்றார். தெலுங்கிலும் கூட அவரே டப்பிங் பேசியுள்ளார்” என்றார்.