அடி செய்த உதவி.. ஆஸ்கர் விழாவில் நடிகர் ஸ்மித்திடம் அறை வாங்கிய தொகுப்பாளர் கிறிஸ் ராக்கிற்கு இனிப்பான செய்தி!

0
154

அடி செய்த உதவி.. ஆஸ்கர் விழாவில் நடிகர் ஸ்மித்திடம் அறை வாங்கிய தொகுப்பாளர் கிறிஸ் ராக்கிற்கு இனிப்பான செய்தி!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா சாஸ்டைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது. ‘தி பவர் ஆஃப் தி டாக்’ திரைப்படத்தை இயக்கியதற்காக ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். கோடா சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவின் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து நகைச்சுவைக்காக கிண்டலாக கிறிஸ் ராக் பேசினார். கோபமான வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ் ராக்கை ஓங்கி பளார் என அறைந்தார். இது காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பின்னர் நிகழ்ச்சி மேடையிலேயே வில் ஸ்மித் மன்னிப்புக் கேட்டிருந்தார்.

வில் ஸ்மித்தின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், பலரும் உருவக்கேலிக்கு எதிரான நடவடிக்கையாக இதனைப்பார்த்து பாராட்டியுள்ளனர். இந்நிலையில், அன்பு நிறைந்த இந்த பூமியில் வன்முறைக்கு இடமில்லை. இந்த செயலுக்கு மிகவும் வருந்துகிறேன் என வில் ஸ்மித் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக வில் ஸ்மித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு விழா மேடையில் நகைச்சுவை என்பது இயல்பானது தான். ஆனாலும், என்னுடைய மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. காதல் உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்ய வைக்கும்.

https://www.instagram.com/p/CbqmaY1p7Pz/

அன்பு நிறைந்த இந்த பூமியில் வன்முறைக்கு இடமில்லை. இந்த செயலுக்கு மிகவும் வருந்துகிறேன். எனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும், நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சி வழியாக பார்த்த பார்வையாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் அடி வாங்கிய சம்பவத்தை தொடர்ந்து, அவர் நடத்தும் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு சட்டென அதிகரித்துள்ளது வியப்படைய வைத்துள்ளது.

அந்த நிகழ்ச்சிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை $46 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பின் அது $341 டாலராக அதிகரித்துள்ளது. அவர் வில்பர் தியேட்டரில் இந்த மேடை நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.