அஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்!
ஆக்ஷன் த்ரில்லராக தயாராகி வருகிறது அஜித்தின் வலிமை திரைப்படம். ஹெச்.வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தையும், கொரோனா சூழல் பாதித்துள்ளது.
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் ஹெச்.வினோத். அடுத்து அஜித்திடம் கதை சொல்லி, அவரது சம்மதத்தையும் பெற்றார். அந்த நேரத்தில் போனி கபூருக்கு படம் பண்ணித்தர வேண்டியிருந்ததால், இந்தி பிங்கின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். இயக்குநருக்கு ஏன் அலைய வேண்டும் என்று பிங்க் தமிழ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பை வினோத்திடம் அளித்தார். நேர்கொண்ட பார்வையாக அப்படம் வெளியானது. இதையடுத்து மீண்டும் போனி கபூர், அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் வலிமை படத்தின் வேலைகளை தொடங்கப்பட்டது. தற்போது வலிமை படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆகஸ்டில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வலிமையின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐரோப்பா செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகளை பல நாடுகள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் கிளைமாக்ஸை உள்ளூரிலேயே எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமை மாறும் என்று காத்திருப்பதா இல்லை உள்ளூரிலேயே கிளைமாக்ஸை எடுப்பதா என்ற ஊசலாட்டத்தில் உள்ளது படக்குழு.
வலிமையில் ஹுமா குரோஷி நாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கார்த்திக்கேயா வில்லனாக நடித்துள்ளார்.