ஃபில்டர் கோல்டு விமர்சனம் : திருநங்கைகளின் அசத்தும் மறுபக்கம்
ஆர்.எம்.நானு தயாரிப்பில் ஃபில்டர் கோல்டு திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜயபாஸ்கர்.
இதில் விஜயபாஸ்கர், டோரா ஸ்ரீ, சுகுமார் சண்முகம், வெற்றி, சிவஇலங்கோ, நட்ராஜ், சாய் சதீஷ், வல்லவன், ஷீதல் நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை- ஹ_மர் எழிலன், ஒளிப்பதிவு-எம்.பரணிகுமார், எடிட்டிங்-கிங் டேவிட், பாடல்கள்-சு.ப.முத்துக்குமார், நடனம்-சிவசங்கர், மக்கள் தொடர்பு- ஏய்ம் சதீஷ்.
விஜி, டோரா, சாந்தி மூன்று பேரும் திருநங்கைகள் மட்டுமல்ல நல்ல நண்பர்களும் கூட. விஜி தைரியசாலி என்பதால் அடிதடி, கொலை என்று துணிச்சலாக செய்யக்கூடியவர். மர கிடங்கு வைத்திருக்கும் ஆச்சாரி சொல்லும் கொலை, கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்து பணம் சம்பாதிக்கிறார் விஜி. இவருடன் டோரா பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருக்கிறார். ஆச்சாரியின் மகனை விரும்புகிறார் டோரா. இதற்கி;டையே விஜியின் தோழி சாந்தி மர்மமான முறையில் இறக்கிறார். இதற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிக்கும் விஜி அரசியல்வாதியின் மகன் என்பதை அறிந்தும் கொலை செய்கிறார். அதன் பின் தலைமறைவாக விஜியும், டோராவும் பல ஊர்களுக்கு செல்கின்றனர். அந்த சமயத்தில் ஆச்சாரியின் மகன் டோராவை கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் ஆத்திரமடையும் ஆச்சாரி டோராவை போட்டுத்தள்ள காத்துக் கொண்டிருக்க இன்னொருபுறம் அரசியல்வாதி விஜியை கண்டுபிடித்து பழிக்கு பழி வாங்க தேடிக் கொண்டிருக்கிறார். இரண்டு திருநங்கைகளும் இவர்களிடம் சிக்கினார்களா? விஜி டோராவை கொன்றவர்களை பழி தீர்த்தாரா? இறுதியில் நடந்தது என்ன என்பதே ரத்தமும் சதையுமாக கொடுத்திருக்கும் மீதிக்கதை.
விஜியாக இயக்குனர் விஜயபாஸ்கார் அச்சு அசல் திருநங்கையாக வாழ்ந்திருக்கிறார். திருநங்கைகளின் வாழ்க்கை அவலத்தை அவர் பேசும்; வசனத்திலேயே அறிந்து கொள்ளலாம். அந்த அளவு திருநங்கைகளுக்கு குரல் கொடுப்பவராக, ஆபத்துக்கு உதவுபவராக, நட்புக்கு மதிப்பு கொடுப்பவராக, நடை, உடை, பாவனை பேசும் வசனங்கள் கூர்நோக்கு பார்வை, தைரியத்தோடு துணிந்து துவம்சம் பண்ணுவதில் வல்லவராக, வம்புக்கு இழுப்பவர்களை குரல் கொடுத்து அதட்டுவது ஆகட்டும் என்று படம் முழுவதும் தன் நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார். இவரின் கதாபாத்திரம் முற்றிலும் புதுமையாக எப்போழுதும் பார்க்கும் திருநங்கைகளின் வாழ்க்கையை போல் இல்லாமல் வித்தியாசமாக காட்சிப்படுத்தி இருப்பதிலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.
இவருடன் ரியல் திருங்கை டோராஸ்ரீ, சுகுமார் சண்முகம், வெற்றி, சிவஇலங்கோ, நட்ராஜ், சாய் சதீஷ், வல்லவன், ஷீதல் நாயக் ஆகியோர் பங்களிப்பு படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் முத்திரை பதித்து மனதில் நிற்கின்றனர்.
இசை- ஹ_மர் எழிலன், ஒளிப்பதிவு-எம்.பரணிகுமார் இவர்களின் பங்கு படத்திற்கு முக்கிய பங்களிப்போடு காட்சிக் கோணங்களில் திறமையை வெளிப்படுத்தி பளிச்சிடுகின்றனர்.
திருநங்கைகளை கேலிப் பொருளாகவும், ஒரு பாட்டிற்கு நடனம் ஆடுபவர்களாகவும், போகப் பொருளாகவும், சொந்தங்களாளேயே வெறுத்து ஒதுக்கப்படும் மனிதர்களாகவும், மிரட்டி பணம் பறிப்பவர்களாகவும் பார்க்கும் சமூகத்தில் ஒரு திருநங்கை துணிச்சலுடன் பல துன்பங்களையும், தடைகளையும் தாண்டி ஒடுக்கப்படும் தன் இன மக்களுக்கு குரல் கொடுத்து. தைரியமாக சமூகத்தை எதிர்கொண்டு, வாழ்வாதாரத்திற்காக கூலிக்காக கொலை செய்து சம்பாதிக்கும் நிலைமையிலும் தன்னை பற்றி கவலைப்படாமல், தன் தோழிகளுக்காக அர்ப்பணித்து கடைசி வரை அஞ்சாநெஞ்சமுடன் தில்லாக நின்று சமாளிப்பதை சிறப்பாகவும், சமூகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை பற்றி நெத்தியடியுடன் வன்மம் கலந்து ரத்தக்களறியுடன் இயக்கியிருக்கிறார் விஜயபாஸ்கர். திருநங்கைகளின் வாழ்வியலை வேறு ஒரு கோணத்தில் கண் முன்னே வித்தியாசமாக மனதை நெகிழும்படி கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் விஜயபாஸ்கர்.
மொத்தத்தில் ஆர்.எம்.நானு தயாரிப்பில் ஃபில்டர் கோல்டு திருநங்கைகளின் அசத்தும் மறுபக்கம்.