10,000-இல் ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய்! 45 வயதுக்குப் பிறகு பரிசோதனை அவசியம்!
இந்தியாவில் 10 ஆயிரத்தில் ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதாகவும், அறிகுறிகள் இல்லாவிடிலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் 10 ஆயிரத்தில் ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதாகவும், அறிகுறிகள் இல்லாவிடிலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு ஜீரண மண்டல மருத்துவா்கள் அறக்கட்டளை தலைவா் டாக்டா் கே.ஆா்.பழனிசாமி தெரிவித்தாா்.
பெருங்குடல் புற்றுநோய் தொடா்பான விழிப்புணா்வு, மருத்துவ மேம்பாடு, சிகிச்சை நுட்பங்கள் குறித்த சா்வதேச மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் சனிக்கிழமை (மாா்ச் 22) தொடங்குகிறது. அப்பல்லோ மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு ஜீரண மண்டல மருத்துவா்கள் அறக்கட்டளை சாா்பில் நடைபெறும் இந்நிகழ்வு தொடா்பான செய்தியாளா் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருங்குடல் புற்று நோய்: செய்தியாளா் சந்திப்பில் அப்பல்லோ மருத்துவக் குழும மேலாண் இயக்குநா் சுனிதா ரெட்டி பேசியதாவது: பொருளாதாரம், உற்பத்தித் துறைகளில் இந்தியா வேகமான வளா்ச்சியை ஒருபுறம் அடைந்து வந்தாலும், மற்றொருபுறம் நோய்களும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோய் பரவலாகக் காணப்படுகிறது. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் அத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. அதைக் கருத்தில்கொண்டு இக்கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக டாக்டா் கே.ஆா்.பழனிசாமி பேசியதாவது: நமது பெருங்குடலின் உட்புறத்தில் சிறு திரள் கட்டிகள் (பாலிப்) உருவாகும்போது அதுகுறித்த எந்த அறிகுறிகளும் நமக்கு தெரியாது. ஒரு கட்டத்தில் அது புற்றுநோயாக உருவெடுத்த பிறகே பலா் பரிசோதனை மேற்கொள்கின்றனா்.
பத்தாயிரத்தில் ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அதில் மூன்றில் இரண்டு போ் பாதிப்பு கண்டறியப்பட்ட ஓராண்டிலேயே இறந்துவிடுகின்றனா். அதற்கு காரணம் இறுதி நிலையில் பரிசோதனைகளை மேற்கொண்டு நோயைக் கண்டறிவதுதான். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மலத்தில் ரத்தம் வருதல், எடையிழத்தல், ரத்த சோகை உள்ளிட்டவை அதன் அறிகுறிகள்.
பரிசோதனை அவசியம்: பொதுவாக 45 வயதைக் கடந்த அனைவரும் ‘கொலோனோஸ்கோபி’ எனப்படும் பெருங்குடல் பரிசோதனையை மேற்கொண்டால் புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறவோ அல்லது வருமுன் தடுக்கவோ முடியும்.

இது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், சா்வதேச அளவிலான மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இதில், பன்னாட்டு மருத்துவ நிபுணா்கள், இந்திய ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்க உள்ளனா் என்றாா் அவா்.
இந்நிகழ்வின்போது முதுநிலை ஜீரண மண்டல எண்டோஸ்கோபி நிபுணா் மோ தௌஃபீக், அப்பல்லோ மருத்துவ நிபுணா்கள் ஷியாம் வரதராஜுலு, பி.பாசுமணி, காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பெருங்குடல் புற்றுநோய் கருத்தரங்கு 2025
இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் உலகெங்கும் எல்லா வகை புற்று நோய்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பெருங்குடல்/ மலக்குடல் புற்று நோயும் ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளது.
வளர்ந்த மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் குடல் புற்றின் பாதிப்பு குறைவு என்றாலும், மாறிவரும் நம் வாழ்வியல் பழக்கங்களால் சமீப காலமாக நம் நாட்டிலும் இதன் பாதிப்பு அதிகமாகி வருகிறது. சாதாரணமாய் 50 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பாதிக்கும் இந்நோய் நம் நாட்டில் 40 -45 வயதுள்ளவர்களைக் கூட தாக்குகிறது என்பது கவலை அளிக்கும் புள்ளி விவரம் ஆகும்.
குடல் புற்று நோய் (கோலான் கேன்சர்) நம்மில் பத்தாயிரம் பேரில் ஒருவரை பாதிக்கும் சாத்தியம் உள்ளது. நோய் கண்டறியப்பட்ட பிறகு மூன்றில் இரண்டு பங்கு பேர் அந்த ஆண்டிலேயே உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. அதன் காரணம் இந்நோய் தாமதமாய் முற்றிய நிலையில் கண்டறியப் படுவதுதான்.
அபாயத்தைத் தவிர்க்கும் உபாயம் என்ன?
புற்று நோயாய் வலுக்கும் முன்னே பல ஆண்டுகளாய் இது பெருங்குடல் உள்பக்கம் சிறு மரு(பாலிப்) போல் தோன்றி மெல்ல வளரும். இந்த மரு நிலையில் அது நமக்கு எந்த வித உபாதையும் தராது. எனவே அந்த நிலையிலேயே அதைக் கண்டுபிடிக்க மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையாக பெருங்குடல் உள்ளே பார்க்கும் பரிசோதனை (கோலனாஸ்கோப்பி) செய்தால் மட்டுமே சாத்தியப்படும்.
பாலிப்/ பெருங்குடல் புற்று வராமல் தடுக்கும் வாழ்வியல் முறைகள்;
- உடல் எடை பெருக்காமல் சரியான எடை அளவில் பராமரித்தல்.
- முறையான தொடர் உடற்பயிற்சி.
- புகையிலை தவிர்ப்பு
- அதிக மது அருந்தாமல் இருத்தல்
- மாமிச உணவு குறைத்தல்
- பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தவிர்த்தல்
- அதிக பழங்கள், காய்கறிகள் உண்ணுதல்
இவற்றையும் மீறி நம்மில் சிலருக்கு பாலிப் உருவாகி பின் அது வளர்ந்து கேன்சராய் மாறலாம். அதனால் சிலருக்கு முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் அவசியம்.
யார் யாருக்கு முன்னெச்சரிக்கை கோலனாஸ்கோப்பி செய்வது அவசியம்?
- உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் கோலான் கேன்சர் குறிப்பாய் 50 வயதுக்கு முன்னதாகவே பாதித்திருந்தால்
- குடும்பத்தினருக்கு மர்பகம், தையாராய்டு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு இருந்தால்
- உங்களுக்கு நாட்பட்ட குடல் அழற்சி ( கோலைட்டிஸ் இருந்தால்
- நீங்கள் கல்லீரல்/ சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்று அதற்கான மருந்துகளை வருடக்கணக்கில் உட்கொண்டிருந்தால்
சில சமயம் இந்த முன்னெச்சரிக்கை சோதனைக்காக மலத்தில் மறைந்து இருக்கும் இரத்த சோதனை, சி. டி ஸ்கேன் போன்றவையும் தேவைப்படலாம்.
கோலான் கேன்சர் வந்தால் சீக்கிரம் கண்டறிவது எப்படி ?
உங்களின் மலப்பழக்கம் அண்மையில் மாறி இருந்தால் , அது சில வாரங்கள் நீடித்தால், அதைப் பற்றி கூச்சப்படாமல் பேசி, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
கோலான் கேன்சருக்கான நோய்க்குறிகள்;
- புதிதாய் அடிக்கடி, பேதியாய் மலம் கழிப்பது
- மலத்தின் வடிவம் மெலிதாய், கடினமாய் மாறி வருவது
- மலத்தில் இரத்தம் கலந்து வருவது
- அவசரமாய் கழிக்க வேண்டும் என்ற உணர்வு
- கழிவறை சேரும் முன்னே காலோடு மலம் வழிவது
- இவற்றோடு உடல் சோர்வு, எடைக் குறைவு
- வயிறு வலி, உப்புதல்
- தூக்கம் கலைந்து இரவில் எழுந்து மலம் கழிப்பது
இந்த வகை நோய்க்குறிகள் குறிப்பாய் 40 வயதுக்கு மேல் வந்தால், சில வாரங்கள் நீடித்தால் உடன் மருத்துவரை அணுக வேண்டும்.
இரத்த பரிசோதனைகள் செய்யும்போது எதேச்சையாய் ஹீமோக்ளோபின் குறைவாய் இருந்தால் – இரத்த சோகை/ அனிமியா – அது குடல் வழி கண்ணுக்குத் தெரியாத இரத்த இழப்பால் இருக்கலாம். இரத்த விருத்தி மருந்துகள் எடுத்துக் கொள்ளும் முன்பு, அனிமியாவின் காரணம் அறிய மருத்துவ ஆலோசனை அவசியம்.
மருத்துவர்கள் எப்போது கொலானாஸ்கோப்பி பரிந்துரைக்க வேண்டும் ?
- 40 வயதுக்கு மேல் மலம் அடிக்கடி பேதியாக வந்தால்
- 40 வயதுக்கு மேல் மலத்தில் இரத்தம் கலந்து வந்தால்
- ஆணுக்கு எந்த வயதிலும் இரும்புச்சத்துக் குறைவு/ அனிமியா வந்தால்
- பெண்ணுக்கு மாதவிடாய் இல்லாத வயதுகளில் இரும்புச்சத்துக் குறைவு/ அனிமியா வந்தால்
- உடல் பரிசோதனையின் போது வயிறு, மலக்குடல் கட்டி தென்பட்டால்
- எக்ஸ்ரே, ஸ்கேன்களில் குடல் கட்டி இருந்தால்
மெல்ல அதிகரித்து வரும் இந்நோய் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரித்து, வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் தேவைப்படும் நேரம் தக்க முன்னெச்சரிக்கை சோதனைகள் செய்வதன் அவசியம் பற்றி பரிந்துரைக்கவும் கருத்தரங்கு, கலந்துரையாடல், சமூக உடகங்கள்/ கையேடுகள் வாயிலாக மக்களுக்கு எடுத்துச் செல்கிறோம்.
இளைதாக முள்மரம் கொல்க ; களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
என்பது வள்ளுவர் வாக்கு. கோலான் பாலிப் வளர்ந்து கேன்சராகி நம்மை வீழ்த்தும் முன்னே வாழ்வியல் மாற்றங்கள் , சரியான நேரத்தில் பரிசோதனைகள் செய்தால் இந்நோயை எளிதாக வெல்லலாம்.