ஷிபௌரா மெஷின் இந்தியா நிறுவனம் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க ரூ. 225 கோடி முதலீட்டில் புதிய ஆலை தொடக்கம்!
- ஜப்பானைச் சேர்ந்த ஷிபௌரா மெஷின் நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய ஷிபௌரா மெஷின் இந்தியா, சர்வதேச அளவில் உயர் துல்லிய இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரங்கள், டை காஸ்டிங் இயந்திரங்கள், ஆழ்துளை இயந்திரங்கள், மெஷின் டூல்ஸ், உயர் துல்லிய மெஷின் டூல்ஸ், குறு வடிவ இம்பிரின்ட் இயந்திரங்கள், உயர் துல்லிய கண்ணாடியிழை மோல்ட் பிரஸ் இயந்திரங்கள், தொழில்துறை ரோபோட்டுகள், எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் காஸ்டிங் உள்ளிட்டவற்றை தயாரிக்கிறது.
- புதிய முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம், தற்போதுள்ள ஆண்டுக்கு 1,200 இயந்திர உற்பத்தி என்ற அளவானது 4,000 என்ற அளவுக்கு அதிகரிக்கும்.
சென்னை, ஜப்பானின் ஷிபௌரா மெஷின் (Shibaura Machine) நிறுவனத்தின் துணை நிறுவனமாகிய ஷிபௌரா மெஷின் இந்தியா (Shibaura Machine India – SMI) நிறுவனம், உயர் துல்லிய இன்ஜெக்ஷன் மோல்டிங் (High-precision Injection Moulding) இயந்திரங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள இந்நிறுவன ஆலையில் 2-ஆவது பிரிவின் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக ரூ. 225 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கத்தில் செயல்படும் எஸ்.எம்.ஐ. (SMI) ஆலை ஆண்டுக்கு 1,200 இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரங்களையும் அதன் உதிரி பாகங்களையும் தயாரிக்கிறது. இந்நிறுவன இயந்திரங்கள் ஆட்டோமோடிவ் (Automotive), எலெக்ட்ரிகல் (Electrical), வீட்டு உபயோகம் மற்றும் பர்னிச்சர் (Household & Furniture), பொருள்களைக் கையாள்வது (Material Handling), மருத்துவம் (Medical), பேக்கேஜிங் (Packaging), பிரிபார்ம்ஸ் (Preforms), பி.வி.சி. (PVC), பொம்மை (Toys), எழுது பொருள் (Writing Instruments) மற்றும் பிற துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இது தவிர வட அமெரிக்காவில் 45 நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், தெற்காசிய நாடுகள் உள்ளிட்டவற்றிலும் இந்நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். புதிய விரிவாக்க நடவடிக்கை மூலம் எஸ்.எம்.ஐ. நிறுவனம் படிப்படியாக தனது ஆண்டு உற்பத்தித் திறனை 4,000 ஆக உயர்த்திக் கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.
லார்சன் அண்ட் டூப்ரோ (Larsen & Toubro) நிறுவனம் 1990-ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வந்த பிளாஸ்டிக் இயந்திர உற்பத்தி ஆலையை 2012-ஆம் ஆண்டு எஸ்.எம்.ஐ. நிறுவனம் வாங்கியதன் மூலம் இந்தியாவில் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. ஏற்கெனவே இந்த ஆலை செயல்பட்டு வரும் பகுதிக்கு அருகில் 11 ஏக்கர் பரப்பளவில் புதிய விரிவாக்க ஆலைக்கான கால்கோள் நடும் விழா 2022-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் எஸ்.எம்.ஐ. நிறுவனம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தனது பணியாளர் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள உள்ளது. இத்துடன் 50-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இந்நிறுவனத்தின் உற்பத்தி அதிகரிப்பு தேவைக்கான உதிரி பாகங்களை தொடர்ந்து சப்ளை செய்ய உள்ளன.
விரிவாக்கம் செய்யப்பட்ட 2-ஆவது பிரிவு ஆலையில்
- தொழில்நுட்ப விளக்க மையம் – இந்நிறுவனம் தயாரிக்கும் இயந்திரங்கள் வாடிக்கையாளர்களின் மோல்டுகளுடன் இயங்கும் நிலையைக் காட்சிப்படுத்துதல்.
- சுத்தமான மற்றும் குளிரூட்டப்பட்ட இந்த ஆலை, சமீபத்திய தொழில்நுட்பத்துடன்கூடிய எலெக்ட்ரிக் இன்ஜெக்ஷன் மோல்டு இயந்திரங்களை உருவாக்கவல்லது.
- பசுமை சான்று பெற்ற, மேற்கூரையில் சூரிய மின்னுற்பத்தி வசதி கொண்டது.
- மிகவும் உயர் தரத்தில் அதேசமயம் மனித உயிர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான பெயிண்டிங் பிரிவு.
- மிகவும் உயரத்தில் அமைந்துள்ள மேற்கூரை காரணமாக அதிக உயரமான இன்ஜெக்ஷன் மோல்ட் இயந்திரங்களை தயாரிக்க முடியும். அதிகபட்சமாக 3,500 டன் வரையான உயர் எடை கொண்ட இன்ஜெக்ஷன் மோல்ட் இயந்திரங்களைத் தயாரிக்க இயலும்.
- மிகவும் எளிமையான, நெகிழ்வுத் தன்மை கொண்டிருக்கும் இந்த ஆலை வெறும் இன்ஜெக்ஷன் மோல்ட் இயந்திரம் தயாரிப்பது மட்டுமின்றி பல்வேறு தரப்பட்ட இயந்திரங்களை மாறிவரும் சந்தையின் சூழலுக்கேற்ப தயாரித்து அளிக்கும் திறன் கொண்டது.
தொழிற்சாலையின் 2-ஆவது பிரிவு தொடக்கம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஷிபௌரா மெஷின் குழுமத்தின் தலைவர் திரு. ஷிகெடோமோ சகமோடோ (Mr. Shigetomo Sakamoto) கூறுகையில், “எங்களது உத்திசார் அணுகுமுறையில் முதலீட்டுக்கு ஏற்ற மிகச் சிறந்த நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த நாட்டில் முதலீடு செய்வதைத் தாண்டி திறன் மிகு பணியாளர்கள் இங்கு கிடைப்பது மற்றும் மிகவும் பயனுள்ள கூட்டாளிகள் கிடைப்பதும் மிக முக்கியமான காரணமாகும். அத்துடன் எங்களது தயாரிப்புகளுக்கு தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது. இதன் வெளிப்பாடாக எஸ்.எம்.ஐ. நிறுவனம் தொடர்ந்து உற்பத்தி பொருள்களில் கவனம் செலுத்துவதோடு உற்பத்தி அதிகரிப்பிலும் கவனம் செலுத்துகிறது. அத்துடன் சந்தைக்கு ஜப்பானிய தொழில்நுட்பத்தை உடனுக்குடன் விரைவாகக் கொண்டு வர முடிகிறது. எஸ்.எம்.ஐ. நிறுவனம் தனது சிறப்பான செயல்பாடு மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கத்திற்காக ஷிபௌரா தலைவர் விருதைப் பெற்றுள்ளது. இந்தியப் பிரிவு மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை இவ்விருதை பெற்றுள்ளது.
இந்தியப் பிரிவின் குழுவினர் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் சேவையை எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக செய்வர் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. அத்துடன் இந்திய அரசின் பிரதான இலக்கான ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை செயல்படுத்துவதிலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறது. எங்கள் நிறுவனத்தின் 2-ஆவது பிரிவு மூலம் உற்பத்தி திறன் இரட்டிப்பாக உயரும். இங்கு இந்திய தொழிற்சாலைகளில் அடுத்த 3 ஆண்டுகளில் பயன்படுத்தப்படவிருக்கும் மேம்பட்ட தொழில்நுட்பம், பொருள் தொழில் நுட்பம், கட்டுப்பாடு மெகடிரானிக்ஸ் (Mechatronics) மற்றும் ஐ.ஓ.டி. (IoT) நுட்பம் ஆகியவற்றை தயாரித்து அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்” என்று கூறினார்.
எஸ்.எம்.ஐ. நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. எம். குமார் கூறுகையில், “நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு தொடக்க விழாவை சிறப்பாகக் கொண்டாடி வரும் நேரத்தில் எங்களது தாய் நிறுவனமான ஷிபௌரா மெஷின் நிறுவனம் எஸ்.எம்.ஐ. நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவையும் அளித்து வருவதைப் புரிந்து கொள்ளலாம். 2012-ஆம் ஆண்டு இந்நிறுவனத்தைக் கையகப்படுத்தியதிலிருந்து எஸ்.எம்.ஐ. நிறுவனம் தொடர்ந்து உற்பத்தி நடைமுறைகளில் நுட்பங்களை புகுத்தி ஆண்டு உற்பத்தி அளவை 600-லிருந்து 1,200 ஆக அதிகரித்ததோடு விற்பனை வருமானமும் மும்மடங்காக உயர்ந்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு மிகவும் ஸ்திரமான வளர்ச்சியை எட்டி வருகிறோம். இதனால் 2019-ஆம் ஆண்டில் 10,000-ஆவது இயந்திரத்தையும், 2023 அக்டோபரில் 14,000-ஆவது இயந்திர உற்பத்தி அளவையும் எட்டியுள்ளோம். புதிய முதலீடு மூலம் உற்பத்தி அதிகரிப்பதோடு பணியாளர் எண்ணிக்கையும் உயரும். புதிய பொருள்களைத் தயாரித்து எங்களது வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுபடுத்துவதோடு மிகவும் கடினமான தரக்கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை தொடர்ந்து தரமாக சப்ளை செய்யும் என்ற கடந்த கால வரலாறு சாதகமான அம்சமாகும்” என்று குறிப்பிட்டார்.
ஷிபௌரா மெஷின் குழுமம் 1938-ஆம் ஆண்டு ஷிபௌரா மெஷின் டூல் நிறுவனமாக ஷிபௌரா இன்ஜினீயரிங் வொர்க் (இப்போது தோஷிபா கார்ப்பரேஷன்) நிறுவனத்திடமிருந்து நிதி உதவி பெற்றது. 1938-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்ட இந்நிறுவனம் 1961-ஆம் ஆண்டில் தோஷிபா மெஷின் கம்பெனி லிமிடெட் (Toshiba Machine Co., Ltd) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர் 2020 ஏப்ரலில் இந்நிறுவனத்தின் பெயர் ஷிபௌரா மெஷின் கோ லிமிடெட் என்று பெயர் மாற்றப்பட்டது. 2017-ஆம் ஆண்டு தோஷிபா குழுமத்திலிருந்து விலகி சுதந்திரமான நிறுவனமாக செயல்படுகிறது. உலகிலேயே மிகவும் துல்லியமான இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரங்கள் தயாரிப்பில் சந்தையில் முன்னணி நிறுவனமாக இது திகழ்கிறது. இந்நிறுவனத் தயாரிப்புகளில் டை காஸ்டிங் இயந்திரங்கள், ஆழ்துளை இயந்திரங்கள், மெஷின் டூல்ஸ், அதிக துல்லிய மெஷின் டூல்ஸ், மைக்ரோ பேட்டர்ன் இம்பிரின்டிங் இயந்திரம், துல்லிய பிரிசிஷன், கண்ணாடியிழை கண்ணாடி மோல்ட் பிரஸ் இயந்திரம், தொழில் துறை ரோபோட்டுகள், எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் காஸ்டிங்ஸ் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கிறது.
ஷிபௌரா மெஷின் நிறுவனம் இந்தியாவில் 2012-ஆம் ஆண்டு எல் அண்ட் டி பிளாஸ்டிக் மெஷினரி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 100 சதவீத பங்குகளை வாங்கி கையகப்படுத்தியது. அப்போது இந்நிறுவனம் ஹைட்ராலிக் இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திரங்கள் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணியில் திகழ்ந்தது. இந்நிறுவனம் தோஷிபா மெஷின் சென்னை பிரைவேட் லிமிடெட் என பெயர் மாற்றப்பட்டது. 2020-ஆம் ஆண்டு ஷிபௌரா மெஷின் இந்தியா பிரைவேட் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பெட்ரோ ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பதனிடும் தொழில் துறையில் புதுமையான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக 2010-ஆம் ஆண்டு மத்திய ரசாயன மற்றும் உர அமைச்சம் 10-ஆவது ஆண்டு தேசிய விருதை வழங்கியது. பன்முக வண்ணத்தில் இன்ஜெக்ஷன் மோல்டிங் இயந்திர உருவாக்கி போலிகள் தயாரிப்பதை தடுக்க வழிவகுத்ததற்காக விருது வழங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்காக எஸ்.எம்.ஐ. நிறுவனத்துக்கு ஷிபௌரா மெஷின் நிறுவனத்தின் தலைவர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவன சமூக பொறுப்புணர்வை செயல்படுத்துவதில் எஸ்.எம்.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக இந்நிறுவனம் தொடர்ந்து அடிப்படை பயிற்சியை அளிக்கிறது. இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற உதவுகிறது. இதுவரையில் 100-க்கும் அதிகமான மாணவர்கள் தொழிற்சாலையில் நேர்முகப் பயிற்சியை பெற்று தேசிய அப்ரன்டிஸ்ஷிப் சான்றிதழைப் பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டித் தருவது, கிராமங்களில் மேல் நிலை குடிநீர் தொட்டி கட்டுவது மற்றும் சாலை வசதிகளுக்கான நிதி உதவிகளையும் இந்நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்துகிறது.