அப்போலோ மருத்துவமனை, 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு இதய நோய் சிகிச்சையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது!

0
231

அப்போலோ மருத்துவமனை, 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு இதய நோய் சிகிச்சையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது!

சென்னை,

சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை இதய நோய் சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க மாபெரும் சாதனையை எட்டியுள்ளது. அதாவது 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. இந்த மைல்கல் சாதனை, ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சையில் ஒரு முன்னோடி மருத்துவமனையாக அப்போலோவின் முக்கியத்துவத்தையும், நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. நோயாளிகளின் நலனை மட்டுமே மையமாகக் கொண்ட சிகிச்சையை வழங்குவதில் அப்போலோ மருத்துவமனை காட்டி வரும் அதன் உறுதிப்பாட்டை இது நிரூபிக்கிறது. இந்த மைல்கல் சாதனை, குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சைத் துறையில் அப்போலோ மருத்துவமனையின் நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இதய நோய்கள் உள்ளவர்களுக்கு எளிதில் குணமடையும் வாய்ப்பை இது கணிசமாக மேம்படுத்துகிறது.

ரோபோடிக் உதவியுடன் செய்யப்படும் இதய அறுவை சிகிச்சையானது, ஸ்டெர்னோடோமி அல்லது மார்பில் பெரிய அளவில் துளையிட்டு சிகிச்சை செய்யாமல் துல்லியமான சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் இதயப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பம், சிறிய கீறல்கள் மூலம் சிக்கலான நடைமுறைகளைச் செய்ய வகை செய்கிறது. இதில் சிறிய ரோபோ கைகள், உயர் வரையறை 3டி கேமரா ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இது பாரம்பரிய முறையில் செய்யப்படும் திறந்த இதய அறுவை சிகிச்சையை விட பல வகையான மேம்பட்ட நன்மைகளை வழங்குகிறது. டாக்டர் எம்.எம்.யூசுப் தலைமையிலான குழு, கரோனரி தமனி பைபாஸ் கிராஃப்ட் சர்ஜரி (சிஏபிஜி), இதய வால்வு சிகிச்சை / மாற்று சிகிச்சை, சிக்கலான இதய நோய் சிகிச்சைகள் உள்ளிட்ட பெரிய அளவிலான சிகிச்சை நடைமுறைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது.

குறுகிய காலத்தில் குணம் அடைந்து நலம் பெறுதல், நோயாளிகளுக்குக் குறைந்த வலி, குறைந்த இரத்த இழப்பு, ஸ்டெர்னோடோமி இல்லாததால் தொற்றுநோய்க்கான ஆபத்து இல்லாமை ஆகிய முக்கிய பலன்கள் இதில் நோயாளிகளுக்குக் கிடைக்கிறது.  பல நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாளே நடக்கத் தொடங்குகின்றனர். 3 முதல் 4 நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியும். பாரம்பரிய இதய அறுவை சிகிச்சையில், முழு அளவில் குணம் அடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப, 3 முதல் 6 மாதங்கள் தேவைப்படும். அத்துடன் இம்முறையை ஒப்பிடும்போது இந்த நவீன சிகிச்சை முறையில், பொதுவாக 2 முதல் 3 வாரங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பி, அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். நீண்ட கால அடிப்படையில், கரோனரி தமனி பைபாஸ் ஒட்டுதல் (சிஏபிஜி) நடைமுறைகளின் போது கால் நரம்புகளுக்கு பதிலாக உள்புற தொராசிக் தமனிகளைப் [internal mammary arteries] பயன்படுத்துவது சிறந்த நீண்டகால விளைவுகளை வழங்குகிறது. இது எதிர்கால அடைப்புகளின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி [Dr. Prathap C Reddy, Founder-Chairman, Apollo Hospitals Group] இது குறித்துக் கூறுகையில், “அப்போலோ மருத்துவமனை, சுகாதார சேவைகளின் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் 500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகள் எங்கள் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் இதய நோய் சிகிச்சையிலும் ஒரு மைல்கல்லாகும். இத்தகைய மேம்பட்ட நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம், குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறைகளை வழங்கி, எங்களிடம் வரும் நோயாளிகள் குணமடைந்து விரைவில் நலம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்வதோடு,  அதையே எங்களது நோக்கமாகவும் கொண்டுள்ளோம்.” என்றார்.

அப்போலோ மருத்துவமனையின் ரோபோடிக் மற்றும் குறைந்தபட்ச ஊடுருவல் இதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.எம்.யூசுப் [Dr. M.M. Yusuf, Consultant Robotic and Minimally Invasive Cardiac Surgery, Apollo Hospitals] இது குறித்துக் கூறுகையில், “500 ரோபோடிக் இதய சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் ஒரு மைல்கல்லை எட்டுவது என்பது நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் திறன்களுக்கும், எங்களிடம் வரும் நோயாளிகள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் ஒரு சான்றாகும். ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை மூலம், நாங்கள் விரைவாக குணம் அடைதல், குறைந்த வலி ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் நோயாளியின் சிகிச்சை அனுபவம் உண்மையிலேயே சிறப்பாக மாறுகிறது. இந்த இதய சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும்  இந்த முன்னேற்றம் குறிப்பாக 30 முதல் 60 வயதுடைய நோயாளிகளுக்குக் அதிக அளவில் பயன் அளிக்கும். அவர்கள் விரைந்து தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிப் பணிகளை மேற்கொள்ளலாம். பாரம்பரிய அறுவை சிகிச்சையை விட கணிசமாக, மிக துரிதமாக குணமடையும் பலனையும் இது வழங்குகிறது.” என்றார்.

சென்னை அப்போலோ மருத்துவமனை, மருத்துவ தொழில்நுட்பத்திலும் நோயாளிகள் பராமரிப்பிலும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சுகாதார சேவைகளில் சிறப்புக்கான வரையறைகளை இந்த மருத்துவமனை உருவாக்கி வருகிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சையின் ஆரம்ப செலவு பாரம்பரிய முறைகளை விட அதிகமாக இருக்கும். ஆனாலும், குறைந்த காலமே மருத்துவமனையில் தங்கியிருப்பது, விரைவான முறையில் குணம் அடைதல் ஆகியவை, நோயாளிகளுக்குப் பயன் அளிக்கும். இவை பொருளாதார ரீதியாக நோயளிகளுக்குப் பயன் அளிப்பதால் இந்த நடைமுறை அவர்களின் விருப்பத் தேர்வாக அமைகிறது. அப்போலோ மருத்துவமனை அதன் ரோபோடிக் அறுவை சிகிச்சைத் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், மருத்துவப் புதுமைக்  கண்டுபிடிப்புகளில் புதிய மைல் கல்லை எட்டுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.