பி.எஸ்.அப்துர்ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் 11-வது பட்டமளிப்பு விழா
சென்னை, பி.எஸ்.அப்துர்ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட்டெக்னாலஜியின் 11-வது பட்டமளிப்பு விழா அதன் வளாகத்தில்a நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் 52 பிஎச்டி மாணவர்கள், 454 முதுகலை மாணவர்கள் மற்றும் 1876 இளங்கலை மாணவர்கள் உள்பட மொத்தம் 2382 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்.
முதலிடம் பெற்ற 41 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இதில் இளங்கலை மாணவர்கள் 26 பேரும், முதுகலை மாணவர்கள் 15 பேரும் அடங்குவர்.
தற்போதைய தொற்று நோய் காரணமாக தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த பாதுகாப்பு நெறிமுறைகளின் படி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கட்டுப்பாடுகள் காரணமாக 93 மாணவர்கள் மட்டுமே நேரில் பட்டம் பெற்றனர். 2289 மாணவர்கள் ஆன்லைன் மூலம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். Zoho Corp. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் திரு. ஸ்ரீதர் வேம்பு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வேந்தர் திரு. ஆரிப்புஹாரிரஹ்மான், இணைவேந்தர் திரு. அப்துல் காதர் ரஹ்மான் புஹாரி, துணைவேந்தர் டாக்டர். ஏ.பீர்முகமது, பதிவாளர் டாக்டர். ஏ.ஆசாத் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Zoho Corp. இன் CEO மற்றும் இணை நிறுவனர் திரு. ஸ்ரீதர் வேம்பு தனது உரையில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை வாழ்த்தி நமது தேசத்தை வளர்ப்பதில் அவர்களின் பங்கு குறித்து கருத்து தெரிவித்தார். ’கடந்த 30 ஆண்டுகளில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற வளர்ந்த நாடுகளை போல் அடுத்த 10 மடங்கு நிலைகளை எவ்வளவு விரைவில் அடைவோம் என்பதே இப்போதைய நோக்கம்’ என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை வேந்தர் டாக்டர். ஏ.பீர்முகமது, அவர்கள், “இவ்விழாவில் தத்தம் துறைகளில் படித்தேறி பட்டம் பெறும் அனைத்து மாணவர்களையும் நான் உளமாறப்பாராட்டி வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். கிரசண்ட் கல்வி நிறுவனம் எப்போதும் கற்பித்தல்-கற்றல் எனும் சூழலை உருவாக்குவதற்கும் முன்னணியில் இருப்பதற்கும் தகுந்தவற்றைச் செய்து வருகிறது என்பதில் நான் பெருமையடைகிறேன். நீங்கள் பெற்ற கல்வியை வருவாய் ஈட்டுவதற்கு மட்டுமே அல்லாமல், நன்மைக்காகவும், பிறருக்கு உங்கள் நல்லறிவைப்பகிர்வதற்கும் பயன்படுத்துங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் நீங்கள் பெற்ற கல்வியின் நல்லறிவு பிரதிபலிப்பதாக இருக்கட்டும்” என்று கூறினார்.
பின்னர் பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு தேசிய கீதத்தை தொடர்ந்து பட்டமளிப்பு விழா நிறைவு பெற்றது.