பில்லியனர் வென்ச்சர் நிறுவனம் டி.பி.எஸ். வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
சென்னையைச் சேர்ந்த பில்லியனர் வென்ச்சர் இன்குபேஷன் (Billionaire Venture Incubation) நிறுவனம் டி.பி.எஸ். வங்கியுடனான (DBS Bank) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (14 செப். 2022) கையெழுத்தானது. இதன் மூலம் அதிவேகமான வளர்ச்சியை எட்டி வரும் ஸ்டார்ட் அப் (Startups) நிறுவனங்களில் முதலீடு செய்ய சிறப்பு முதலீட்டுத் திட்டத்தைச் (எஸ்.பி.வி.) செயல்படுத்த இவ்விரு நிறுவனக் கூட்டணியும் வழியேற்படுத்தியுள்ளது.
இது குறித்து பில்லியனர் வென்ச்சர் இன்குபேஷன் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு உறுப்பினர் டாக்டர் சுபாஷ் சுகுமார் (Dr. Subash Sukumar) கூறுகையில், “புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டணி மூலம் 200 மில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ. 1,600 கோடி) டி.பி.எஸ். வங்கி மூலமாக தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மூலதன உதவி வழங்க முதல் கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் பல வட இந்திய மாநிலங்களில் விரிவுபடுத்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் முதல் கட்டமாக உருவாகும் அதே சூழலில், இந்தக் கூட்டு மூலம் பல இளம் தொழில்முனைவோர் ஸ்டார்ட் அப்களைத் தொடங்கவும் அதன் மூலம் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வரும் ஆண்டுகளில் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து டி.பி.எஸ். வங்கியின் பிராந்தியத் தலைவர் திரு. சரண் குமார் (Mr. Charan Kumar) கூறுகையில், “இந்தக் கூட்டணி மூலம் நாட்டில் பொதிந்துள்ள அறிவு வளத்தை சரியாகக் கண்டறிந்து அதன்மூலம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை ஐ.ஐ.டி. பட்டதாரிகள் உள்ளிட்ட பிறர் நடத்தும் ஸ்டார்ட் அப் வாயிலாக உருவாக்குவதே நோக்கமாகும். ஸ்டார்ட் அப் உருவாக்கத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அதிகபட்ச ஆதரவை மானிய உதவி வாயிலாக அளிப்பதால் இத்துறையில் புதிதாக மேலும் பலர் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
மூலதன உதவி வழங்குவதற்கென முதல் கட்டமாக 16 முக்கியத் துறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கூட்டணி அத்தகைய வாய்ப்புள்ள துறைகளில் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப்கள் குறிப்பாக பின்டெக், எஜூடெக் மற்றும் பிற துறைகளுக்கும் மூலதன உதவி அளிக்கும்.
மேலும் அவர் கூறுகையில், “இரு நிறுவனங்களின் கூட்டணி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மூலதன உதவி வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் நிறுவனங்களில் இருந்து டிவிடெண்ட் பெறுவதற்கு முழுவதுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். செயல்பாடுகளில் பிரச்சினை ஏற்பட்டால், வெற்றிகரமாக செயல்படும் பிற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மாற்றப்படும். எஞ்சிய காலத்தில் இதிலிருந்து ஈட்டப்படும் லாபம் பகிர்ந்து அளிக்கப்படும். இத்தகைய பாதுகாப்பு வசதி ஆரம்ப காலத்தில் அளிக்கப்படுவதால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியிலிருந்து மீட்டெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
புதிய நிறுவனங்களுக்கான புதிய துறைகள் கண்டறிந்து அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டத்தை பில்லியனர் வென்ச்சர் மற்றும் டி.பி.எஸ். வங்கி கூட்டணி வரும் காலங்களில் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
பில்லியனர் வென்ச்சர் இன்குபேஷன் நிறுவனம் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் புதிய தொழில்முனைவோர்களைக் கண்டறிந்து தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகளைத் திரட்ட உரிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்பு மூலம் இதை செயல்படுத்தி வருகிறது.
டிபிஎஸ் வங்கியானது ஆசிய அளவில் மிகப் பெரிய நிதிச் சேவை நிறுவனமாக 18 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளதோடு அந்நாட்டு பங்குச் சந்தையிலும் இது பட்டியலிடப்பட்டுள்ளது.
டி.பி.எஸ். வங்கி சீனா, தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசிய பிராந்தியங்களின் வளர்ச்சியில் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த வங்கி கடன் வழங்குவதில் ஏ.ஏ. (AA) மற்றும் ஏ.ஏ.1 (AA1) ரேங்கிங்கைப் பெற்றுள்ளது. இது உலக அளவில் மிகவும் உயரிய மதிப்பீடாகும். நுகர்வோரின் தேவைகள், தொழில்முனைவோரின் அனைத்து தேவைக்கான சேவையை குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர (எஸ்.எம்.இ.) துறை நிறுவனர்களுக்கு அளித்து வருகிறது.