சாம்பல் நீர் எனப்படும் கழிவு நீர் மேலாண்மையில் வழி காட்டும் தமிழ்நாட்டின் பாப்பாங்குழி கிராமம்

0
154

சாம்பல் நீர் எனப்படும் கழிவு நீர் மேலாண்மையில் வழி காட்டும் தமிழ்நாட்டின் பாப்பாங்குழி கிராமம்

சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் வகையில் வீடுகளின் சமையலறைகள் மற்றும் குளியல் பகுதிகளில் இருந்து நிரம்பி வழியும் அல்லது தேங்கி நிற்கும் சாம்பல் நீர் பிரச்சினையைத்  தீர்க்க, தனி நபர் மற்றும் சமூக கழிவு நீர் ஊறவைக்கும் குழிகளை தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள பாப்பாங்குழி கிராமப் பஞ்சாயத்து அமைத்துள்ளது.

இரண்டு குடியிருப்பு பகுதிகளைக் கொண்ட பாப்பாங்குழி கிராமப் பஞ்சாயத்தில் 254 குடும்பங்களில் 1016 பேர் வசிக்கின்றனர். தலா 900 மீட்டர் நீளமுள்ள 13 தெருக்களும், ஒவ்வொன்றிலும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலைத் தொட்டிகளும் இருந்தன.

கடந்த காலத்தில், முறையான சுத்திகரிப்பு செயல்முறை இல்லாத நிலையில், கிராமப்புற வீடுகளில் இருந்து தெருக்கள், காலி நிலங்கள் அல்லது நீர்நிலைகளில் கழிவு நீர் வெளியேற்றப்பட்டதன் விளைவாக நீர் மாசுபடுதல், நிலம் மாசுபடுதல் மற்றும் நீரால் பரவும் நோய்கள் ஏற்பட்டன.

இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் 93 வீடுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத்  திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவு நீர் ஊறவைக்கும் குழிகள்  உருவாக்கப்பட்டன மற்றும் 161 குடும்பங்கள் கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டன.

மேலும், அப்புறப்படுத்தும் இடத்தில் இரண்டு கிடைமட்ட கழிவு நீர் ஊறவைக்கும் குழிகள்  அமைக்கப்பட்டு, வடிகட்டிய நீர் பெரிய ஏரி மற்றும் ராஜந்தாங்கல் ஏரியின் நீர்நிலைகளில் விடப்பட்டது.

இந்த முன்முயற்சிகள் பஞ்சாயத்தின் தூய்மை நடவடிக்கைகளுக்குப்  பெரும் பங்களிப்பை அளித்து, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமமாகவும் பாப்பாங்குழியை ஆக்கியுள்ளன.