கிழக்கு கடல்சார் வழித்தடம் குறித்து சென்னையில் இந்தியா- ரஷ்யா பயிலரங்கு: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்

0
103

கிழக்கு கடல்சார் வழித்தடம் குறித்து சென்னையில் இந்தியா- ரஷ்யா பயிலரங்கு: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் இன்று (12.09.2023) ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். கிழக்கு கடல்சார் வழித்தடம் (ஈ.எம்.சி) குறித்து சென்னையில் நடைபெறும் இந்தியா-ரஷ்யா பயிலரங்கில் பங்கேற்க அப்போது அவர் ரஷ்ய கடல்சார் துறையினருக்கு அழைப்பு விடுத்தார். ரஷ்ய துறைமுக நகரமான விளாடிவோஸ்டோக் மற்றும் இந்திய துறைமுக நகரமான சென்னைக்கு இடையே மாற்று வர்த்தக பாதையாக ஈ.எம்.சி.யை விரைவாக செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அமர்வில் திரு சர்பானந்தா சோனோவால் உரையாற்றினார். இது தொடர்பான பயிலரங்கத்தை 2023 அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கிழக்கு கடல்சார் வழித்தடம் (ஈ.எம்.சி) செயல்பாட்டுக்கு வருவது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தக உறவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா- ரஷ்யா இடையிலான வலுவான உறவை மேலும் மேம்படுத்த இந்தியா உறுதியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் சென்னையில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் பயிலரங்கம் ஒன்றை நடத்த வேண்டும் என்பதை முன்மொழிவதாக அவர் கூறினார். இதில் கிழக்கு கடல்சார் வழித்தடம் குறித்து கலந்துரையாடவும், விவாதிக்கவும் அழைப்பு விடுப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவின் முக்கிய கடல்சார் திட்டமான சாகர்மாலா குறித்து பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், 2015 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். சாகர்மாலா திட்டத்தின் கீழ் 2035 க்குள் 65 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டில் 802 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இதில், 14.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 228 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். 27 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 260 திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் 5 நாள் அரசு முறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். நாளை, அவர் தனது ரஷ்ய கப்பல் துறை அமைச்சர் திரு விட்டாலி சவேலிவ் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். நாளை விளாடிவோஸ்டோக் துறைமுகத்தையும் அவர் பார்வையிட உள்ளார்.