இந்திய பிளாஸ்டிக் தொழில் துறை, ஐந்து ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வர்த்தகத்தைத் தொடும்!
அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் !
“இந்திய பிளாஸ்டிக் தொழில்துறை விரைவான வளர்ச்சியைக் காணும். 2027-ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அளவுக்கு, அதாவது ரூ. 10 லட்சம் கோடி வர்த்தகத்தைத் தொடும். இறக்குமதிக்கு பதிலீடான (Import Substitution) உற்பத்தி என்கிற அம்சம் இந்தத் தொழில் துறைக்கு பெரிய வளர்ச்சி வாய்ப்பை வழங்குகிறது” என்று இந்தியாவின் பிளாஸ்டிக் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான தொழில் அமைப்பாகிய அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் (All-India Plastics Manufacturers Association) தெரிவித்துள்ளது.
ஏ.ஐ.பி.எம்.ஏ.-வின் (AIPMA) அரவிந்த் மேத்தா தொழில்நுட்பம் – தொழில் முனைவோர் மையம் (AMTEC), பிளாஸ்டிக் தொழில் வளர்ச்சிக்கான 5-ஆவது தொழில்நுட்ப மாநாட்டை சென்னையில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்தியது. மேக் இன் இந்தியா முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பதிலீட்டை ஊக்குவிக்கும் வகையிலும் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், நாடு முழுவதிலும் இருந்து நிபுணர்கள், தொழில் துறை பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள், அரசு அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள்.
முன்னதாக, வரவேற்புரை ஆற்றிய ஏ.ஐ.பி.எம்.ஏ.-வின் தலைவர் திரு. மயூர் டி. ஷா (Mr. Mayur D. Shah) கூறுகையில், “பிளாஸ்டிக் உற்பத்தித் துறையானது உள்நாட்டு சந்தைக்கு ஏற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நல்ல நிலையில் உள்ளது மட்டுமில்லாமல், உலகளாவிய பிளாஸ்டிக் விநியோக மையமாகவும் உருவெடுத்து, இந்திய பிளாஸ்டிக் தொழில் துறை தன் திறன்களை நிரூபித்துள்ளது. மொத்தம் ரூ. 37,500 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்படும் 553 பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதிக்கு பதிலீடாக, இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய ஏ.ஐ.பி.எம்.ஏ. கண்டறிந்துள்ளது.
இறக்குமதிக்கு பதிலீட்டை நோக்கிய நகர்வு, நாட்டில் 5 லட்சம் கூடுதல் வேலைகளை உருவாக்கும். உலகளாவிய பிளாஸ்டிக் விநியோகஸ்தராக இந்திய பிளாஸ்டிக் தொழில் துறையை உருவாக்கும் வகையில் அதன் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கவும், உரிய சூழலை உருவாக்கவும் அரசாங்கமும், தொழில் துறையும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதில் இந்திய பிளாஸ்டிக் உற்பத்தித் துறை முக்கியப் பங்காற்றும்” என்று கூறினார்.
ஏ.ஐ.பி.எம்.ஏ. அமைப்பின் கவர்னிங் கவுன்சில் தலைவரும், ஏ.ஐ.பி.எம்.ஏ.-வின் அரவிந்த் மேத்தா தொழில்நுட்பம் – தொழில் முனைவோர் மையத்தின் (AMTEC) தலைவருமான திரு. அரவிந்த் மேத்தா (Mr. Arvind Mehta) கூறுகையில், “இந்திய பிளாஸ்டிக் தொழில் துறை விரைவான வளர்ச்சிக்கு தயாராக உள்ளது. பிளாஸ்டிக் தொழில் துறையின் அளவு 2022-23-ல் ரூ.3.5 லட்சம் கோடியிலிருந்து 2027-28-ல் ரூ.10 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் ஏற்றுமதி ரூ. 40,000 கோடி முதல் ரூ. 1 லட்சம் கோடியைத் தொடும் என்பது, இந்திய தயாரிப்புகளின் உலகளாவிய ஏற்றுக்கொள்ளும் தன்மையை பிரதிபலிக்கிறது. இந்திய தொழில் துறைக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், அதை நாம் அதிகம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார்.
உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே நேரடி உரையாடலுக்கான தளமாக இந்தத் தொழில்நுட்ப மாநாடு செயல்பட்டது. இறக்குமதிக்கு பதிலீட்டை எளிதாக்குவதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகள் இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டன. ஆத்ம நிர்பார் பாரத் (Atmanirbhar Bharat) மற்றும் வோகல் ஃபார் லோக்கல் (Vocal for Local) போன்ற முயற்சிகளை ஊக்குவிப்பதில் பிளாஸ்டிக் துறையின் பங்கை மாநாட்டில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜி இன்ஸ்டிட்டியூட்டின் டைரக்டர் ஜெனரல் (CIPET) பேராசிரியர் டாக்டர் ஷிஷிர் சின்ஹா (Prof Dr. Shishir Sinha), ‘பிளாஸ்டிக் தொழில் துறையின் வளர்ச்சிக்கு உதவும் கொள்கை’ என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் 2-ஆவது சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நேஷனல் பிளாஸ்டிக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அலோக் பராக் (Mr. Alok Parakh), ‘இந்தியத் தொழில் துறை எவ்வாறு பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதிக்கு பதிலீடாகத் தயாரிக்கும் பணியை ஓர் இயக்கம் போல் மேற்கொள்ளலாம்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.\
மாநாட்டில் மூலப்பொருள் & விநியோகச் சங்கிலியின் தேவை, புதுமையான பிளாஸ்டிக் உற்பத்தித் தொழில்நுட்பங்களின் தேவை, டூலிங் தேவை, டைஸ் & ஜிக்ஸ் ஃபிக்சர்ஸ் ஆகிய அமர்வுகள் இடம்பெற்றன. இந்த அமர்வுகள், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், பிளாஸ்டிக் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்தமாக நாட்டின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் பங்களிப்பதற்கான வழிகளை ஆராய்வதை வலியுறுத்தின.
இந்த மாநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தியாவில் இந்தத் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப மற்றும் வணிக வரைபடத்தை பிளாஸ்டிக் தயாரிப்பு துறைக்கு இம்மாநாடு வழங்கியது. அடுத்த மாநாடு இறுதிப் பகுதி கொல்கத்தாவில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.