ஆடைகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவின் புதிய தலைவராக நரேந்திர கோயங்கா பொறுப்பேற்றார்
புதுதில்லி,
ஆடைகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவின் (ஏஈபிசி) புதிய தலைவராக திரு. நரேந்திர குமார் கோயங்கா பொறுப்பேற்று கொண்டார். பத்மஸ்ரீ டாக்டர்.ஏ. சக்திவேல் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இன்று நடைபெற்ற அதன் செயற்குழு கூட்டத்தில் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கோயங்கா, “ஆடைகள் ஏற்றுமதியில் வலுவான வளர்ச்சியை நாம் கண்டு வருகிறோம். ஏற்றுமதி ஆர்டர்கள் கைவசம் இருப்பதால், இந்த நேர்மறையான போக்கு மேலும் அதிகரிக்கும்”, என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “2020 டிசம்பரில் 1.20 பில்லியன் டாலராக இருந்த ஆடை ஏற்றுமதி 2021 டிசம்பரில் 22% அதிகரித்து 1.46 பில்லியன் டாலராக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இது 11.13 பில்லியன் டாலராக இருந்தது, ஏப்ரல்-டிசம்பர் 2020-ல் 8.22 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 35% வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த போக்கு வலுவடைந்து வருகிறது,” என்றார்.
மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மிகவும் திறமையான நிர்வாகத்தாலும், இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களின் தொழில்முனைவு திறனாலும் ஆடை ஏற்றுமதியில் இந்த பெரிய திருப்பம் சாத்தியமானது என்று திரு கோயங்கா கூறினார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் தேவை ஆகியவற்றில் பல இடையூறுகள் இருந்தபோதிலும், இந்திய ஆடைத் துறையானது பெருந்தொற்றுக்கு முந்தைய வளர்ச்சிப் பாதைக்கு படிப்படியாகத் திரும்புவதன் மூலம் அதன் உறுதியை வெளிப்படுத்தியது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள், புதிய இலக்குகளை நிர்ணயிப்போம், என்றார் அவர்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஏஈபிசியுடன் கோயங்கா தொடர்புடையவர் ஆவார். இதன் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களின் உச்ச அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார்.
ஏஈபிசி என்பது ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்களின் அதிகாரப்பூர்வ அமைப்பாகும். இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள்/சர்வதேச கொள்முதலாளர்களுக்கு மதிப்புமிக்க உதவிகளை இது வழங்குகிறது.