அமெரிக்க வாழ் – இந்திய முதியவருக்கு சிக்கலான மகாதமனி, இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி, சிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சாதனை!

0
142

அமெரிக்க வாழ் – இந்திய முதியவருக்கு சிக்கலான மகாதமனிஇதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்திசிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சாதனை!

  • துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராஃப்டிங் செய்துஅதைத் தொடர்ந்து மகாதமனியில் ஸ்டென்டிங்கும் செய்துஅவரது உயிரைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல்அவரது வாழ்க்கைத் தரமும் மேம்படுத்தப்பட்டது!

 சென்னை – வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஐ.சி.ஏ.டி. (Institute of Cardiac and Aortic Disorders – ICAD) நிறுவன மருத்துவர்கள் குழு, 66 வயது அமெரிக்க வாழ் – இந்திய முதியவருக்கு இதயம் சார்ந்த அரிய காரணத்தால் ஏற்பட்ட குரல் கரகரப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றுக்கு சிக்கலான அறுவை சிகிச்சைகள் மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தது. ஐ.சி.ஏ.டி.  இயக்குநர் மற்றும் மூத்த மருத்துவ ஆலோசகருமான டாக்டர் வி.வி. பாஷியின் (Dr. V V Bashi) தலைமையிலான மருத்துவர் குழு, துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் கிராஃப்டிங் (Coronary Artery Bypass Grafting – CABG) சிகிச்சையை மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்து மகாதமனியில் (Aorta) ஸ்டென்டிங் (Stenting) செய்யப்பட்டதன் மூலம் நோயாளியின் ஆயுள் கூட்டப்பட்டது மட்டுமல்லாமல், அவரது வாழ்க்கைத்  தரமும் உயர்த்தப்பட்டது. மூத்த இதய மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அஜூ ஜேக்கப் (Dr. Aju Jacob), இன்டர்வென்ஷனல் ரேடியலஜிஸ்ட் டாக்டர் கே. முரளி (Dr. K. Murali), இதய மற்றும் தொராசிக் அறுவை சிகிச்சை டாக்டர் முகமது இத்ரீஸ் (Dr. Mohammed Idhrees), இதய மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அருண்குமார் (Dr. Arunkumar) ஆகியோர் இந்த அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவில் இடம்பெற்ற மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

நோயாளியின் பின்னணி மற்றும் வழங்கப்பட்ட சிகிச்சை முறை:

பெங்களூருவைச் சேர்ந்த 66 வயதான ஒரு அமெரிக்க குடிமகன், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் குரல் கரகரப்புத் தன்மைக்காக பரிசோதிக்கப்பட்டார். காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரிடம் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனால் நுரையீரல் நிபுணரிடம் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டார். சுவாசத் தடை நோய்க்கான (COPD) ஆரம்பப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட மார்பு எக்ஸ்-ரே அசாதாரணமான ஒரு நிழலைக் காட்டியது. இதனால் மார்பு சி.டி. ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. அதில் மகாதமனி 7 செ.மீ. வீக்கத்தைக் காட்டியது.

மகாதமனி வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதால், உயர் ஆய்வு மற்றும் மேலாண்மைக்காக எங்களிடம் அவர் அனுப்பப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் இருந்ததால், அவரது இதயத்தையும் மதிப்பீடு செய்ய முடிவு செய்தோம். இதய தசையில் அவருக்கு மிதமான செயலிழப்பு இருப்பதை எக்கோ கார்டியோகிராம் (Echo Cardiogram) பரிசோதனை காட்டியது. இதைத் தொடர்ந்து கரோனரி ஆஞ்சியோகிராம் (Coronary Angiogram) செய்ய முடிவு செய்தோம். அதில் இதய தசைக்கு ரத்தம் வழக்கும் அனைத்து தமனிகளிலும் கடுமையான அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

முதல்கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்த நோயாளிக்கு இரண்டு சிகிச்சை முறைகள் தேவை என்று முடிவு செய்தோம் – ஒன்று, கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்டிங்; மற்றொன்று, மகாதமனி வீக்கத்துக்கான சிகிச்சை. இரண்டையும் ஒருங்கிணைந்த செயல்முறையாக ஒரே நேரத்தில் செய்தால், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

ஒருபுறம், முதலில் சி.ஏ.பி.ஜி.-ஐச் செய்தால், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய காலகட்டத்தில் மகாதமனி வீக்கம் வெடிக்கும் அபாயம் ஏற்படலாம், இது மரணத்தை கொண்டுவரக்கூடியது. மறுபுறம், மகாதமனி வீக்கத்துக்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளும்போது, அவருக்கு ஆபத்தான இதயம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படலாம். இது மட்டுமில்லாமல் அவரது சிறுநீரக செயலிழப்பும் கூடுதல் சிக்கலைச் சேர்த்தது.

இந்த நோயாளியின் சிக்கல்களை எடுத்துரைத்து, .சி..டி. இயக்குனர் – மூத்த ஆலோசகரான டாக்டர் வி.விபாஷி கூறுகையில், “மேற்கண்ட சவால்கள் மற்றும் நோயாளியின் மருத்துவ சிகிச்சையின் சிக்கலான நிலையை மனதில் கொண்டு, எங்கள் அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள் குழு, படிப்படியான சிகிச்சை முறையை மேற்கொள்ளத் திட்டமிட்டது. நோயாளியின் உறவினர்களிடம் சம்மதத்தைப் பெற்ற பிறகு, படிப்படியான சிகிச்சை முறைக்கு செல்ல முடிவெடுத்தோம். கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஒன்றன் பின் ஒன்றாக சிகிச்சை மேற்கொள்ள முற்பட்டோம். துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் சி.ஏ.பி.ஜி.-யை ஒரு குழுவாக முதலில் செய்து, பின்னர் மகாதமனியில் ஸ்டென்டிங் செய்ய முடிவு செய்தோம்.

சி.ஏ.பி.ஜி.-யின்போது இதய-நுரையீரல் கருவிகளைப் பயன்படுத்துவது மகாதமனி வீக்கம் வெடிப்பதற்கான கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தியது. இந்த நோயாளியைப் போல இதய தசை சேதமடைந்த நோயாளிகளுக்கு சி.ஏ.பி.ஜி. அறுவை சிகிச்சை செய்வதற்கு பலூன் ஆதரவு தேவைப்படுகிறது. இதில் இதயத்தை ஆதரிக்க மகாதமனியில் ஒரு பலூன் பொருத்தப்படும். துரதிர்ஷ்டவசமாக, வீக்கமடைந்த மகாதமனியின் காரணமாக இது அவருக்குச் சாத்தியப்படவில்லை. ஏனெனில் பலூனை வைப்பது மகாதமனி வீக்கம் வெடிப்பதற்கு வழிவகுக்கும். எனவே, மிகுந்த கவனத்துடன் இதய-நுரையீரல் கருவி, பலூன் பம்ப் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல், துடிக்கும் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம்.

இந்த சிகிச்சை முறையின் மூலம், அவரது ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம். அறுவை சிகிச்சை, முறையான மருந்துகளுடன் ஆறு வாரங்களுக்குப் பின் அவர் குணமடைந்தார். பின்னர்  அவரது மகாதமனி வீக்க சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவரது மகாதமனியில் ஸ்டென்டிங் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. அதை அவரது இதயம் சிறப்பாக ஏற்றுக் கொண்டது. இன்று, இரண்டு நடைமுறைகளிலிருந்தும் அவர் மீண்டு வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறோம். சரியான நேரத்தில் நோயறிதல், படிப்படியான சிகிச்சையே அவர் குணமடைய காரணமாக இருந்தது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

சுவாசிப்பதில் ஏற்படும் சிரமங்கள் அனைத்தும் நுரையீரல் நோய்களால் மட்டும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. வெளித் தெரியாத இதய நோயும் காரணமாகவும் இருக்கலாம். எனவே, அதிக ஆபத்துள்ள நபர்கள், முதுமையில் இருப்பவர்கள், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வழக்கமான மாஸ்டர் ஹெல்த் செக்அப் அவசியம் தேவை. இவை தவிர, மகாதமனி வீக்கம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களும் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஸ்.ஆர்.எம்குழுமத்தின் தலைவர் முனைவர் ரவி பச்சமுத்து கூறுகையில், “இதுபோன்ற மிகவும் சிக்கலான-ஆபத்தான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், விரிவான சிகிச்சைகள் மற்றும் மருத்துவ பராமரிப்புக்காக மாடுலர் தியேட்டர்கள், கேத் லேப் (Cath Lab) உட்பட அதிநவீன தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இந்த வசதிகளுடன் ஐ.சி.ஏ.டி. இயக்குநர், மூத்த ஆலோசகரான டாக்டர் வி.வி. பாஷியின் வழிகாட்டுதலுடன் அர்ப்பணிப்புள்ள அவரது குழுவின் மூலம் படிப்படியான நடைமுறைகளை வெற்றிகரமாக எங்களால் செய்ய முடியும். நாட்டின் மிகவும் சிக்கலான நோய்களுக்கு சிம்ஸ் மருத்துவமனையில்  வெற்றிகரமாக நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம். இது எங்கள் மருத்துவப் பயணத்தில் மற்றொரு மைல் கல்லாகும். இது போன்ற நேர்மறையான முடிவுகள், எதிர்காலத்தில் மேம்பட்ட இதய சிகிச்சை தேவைப்படும் பல நோயாளிகளுக்கு உதவ எங்களை ஊக்குவிக்கும்” என்றார்.