அப்சரா ரெட்டியின் ஹூமானிடேரியன் விருதுகள் -2023 வழங்கும் விழாவில், இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான நிதி ரஸ்தான், குழந்தைகள் பெற்றோரிடம் எந்த பிரச்சனையையும் வெளிப்படுத்த தயங்க வேண்டியதில்லை என்கிற நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டியின் மனிதாபிமான விருதுகள் ( ஹூமானிடேரியன் அவார்ட்ஸ் ) விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி ( HYATT REGENCY ) நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களின் உரிமைக்காகவும், பாதுகாப்பான வாழ்விற்காகவும் சேவை ஆற்றி வரும் நபர்களுக்கு, 13 பிரிவுகளிலும், ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
கல்வி மேம்பாட்டிற்கான விருதை பூவிழி என்பருக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். கார்கி திரைப்பட இயக்குனர் கௌதம் ராமச்சந்திரனுக்கு சினிமாவுக்கான விருது வழங்கப்பட்டது. முனைவர் ஶ்ரீமதிகேசனுக்கு அறிவியல் பிரிவிலும், மாலினி ஜீவரத்தினம் என்பவருக்கு பாலின சமத்துவத்துக்கும், ஶ்ரீ வத்சன் சங்கரனுக்கு மேபாட்டிற்கான விருதும் வழங்கப்பட்டது.அதேபோல, நம்பிக்கையை மேம்படுத்துதல் பிரிவில் லலிதா ராமானுஜன், மருத்துவத்துறை பிரிவில் விநாயக் விஜயகுமார், சிறந்த செயற்பாட்டாளர் பிரிவில் சிரில் அலெக்சாண்டர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
குழந்தைகளை போதை பழக்கத்தில் இருந்து மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர் அருள் ராஜுக்கு சௌமியா அன்புமணி விருது வழங்கினார், சமூக செயற்பாட்டாளர் பிரிவில் மதுமிதா கோமதிநாயகம், மறுவாழ்வு அளிப்பதில் சிறந்து விளங்கிய சர்மிளா அருணகிரி, கிராமப்புற மாணவர்களின் கல்வி வழங்குவதில் சிறந்து விளங்கிய டாக்டர் இளஞ்செழியன், இலக்கியப் பிரிவில் பேராசிரியர் முகமத் அப்துல் காதர் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர்.
ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், மதுரையில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் நாகராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதனை அவரின் மருமகனும் ஐ ஏ எஸ் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் ஜெகநாதன் குடும்பத்தினருடன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, NDTV யில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த புகழ் பெற்ற பத்திரிகையாளர் நிதி ரஸ்தான், குழந்தைகள் பெற்றோரிடம் எந்த பிரச்சனையையும் வெளிப்படுத்த தயங்க வேண்டியதில்லை என்கிற நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசிய பாலிவுட் நடிகை மிர்ணாளி தாகூர் ,குழந்தைகள் நம் எதிர்காலங்கள் என்றும் குழந்தைகள் ஏதாவது பிரச்சினைகளை தெரிவித்தால் அவர்களை நம்பி பாதுகாப்பு அளிப்பது நமது கடமை என்றார். ஒரு நடிகை என்கிற முறையில் குரளற்றவர்களின் குரலாக இயங்க சிறு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி எனவும், குழந்தைகள் நலனுக்கு பாடுபட்ட சூப்பர் ஹீரோக்களுக்கு இது போன்ற விருதுகள் வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என்றும் அவர் தெரிவுத்தார்.
பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்றும் அவர்களின் பாதுகாப்பான வாழ்விற்கு பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு பங்கு உண்டு என்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சௌமியா அன்புமணி உரையாற்றும் போது,காலநிலை மாற்றம் என்றாலும், போர் என்றாலும் பாதிக்கபடகூடியவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாக தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்ததோடு, தன் மகளுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் இந்த நிகழ்ச்சி மூலம் அக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பது குறித்து சிந்திப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான அப்சரா ரெட்டி குறிப்பிடும்போது, குழந்தைகள் பாதுகாப்பில் இந்த சமூகம் இன்னும் தீவிரமாக இயங்க வேண்டும் என்றும், அது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் கூறினார்.
இந்த விருது விழாவின்போது நடைபெற்ற இசைக்கச்சேரி மற்றும் ஃபேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த விருது விழாவில் நடிகர்கள் ஷாம், பின்னணி பாடகர்கள் நரேஷ் ஐயர், விஜய் ஜேசுதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான், பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் மகளும் மருத்துவருமான கமலா செல்வராஜ், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், வட சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி, உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.