அசுரனை ஆட்கொண்ட முருகப்பெருமான்… திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்… !

0
116

அசுரனை ஆட்கொண்ட முருகப்பெருமான்… திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்… !

திருச்செந்தூரில் பக்தர்களின் வெள்ளத்தில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.

கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்சி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 2 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. செந்தூர் கடற்கரையில் முருகப் பெருமானான சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்வதற்காக வெண்பட்டு உடுத்தி, வெட்டிவேர் மயில் தோகை மாலை அணிந்து கடற்கரைக்கு வருகை தந்தார். நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில், தாயார் பார்வதியிடம் இருந்து வெற்றிவேலை பெற்றிருந்த முருகப்பெருமான், சூரனை வதம் செய்தார்.

சூரசம்ஹார விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் கூடினர். திருச்செந்தூர் கடற்கரையில், தரகாசூரன், சிங்கமுகாசூரன் மற்றும் சூரபத்மனை தனது வேல் கொண்டு முருகப்பெருமான் வதம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருச்செந்துர் சஷ்டி மண்டபத்தில் இருந்து கடற்கரைக்கு வீரபாகுதேவர், வீரகேசரி என நவ வீரர்களுடனும் வேலோடும் ஜெயந்தி நாதர் புறப்பட்டார்.

முதலில் போரிட வந்த யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவதாக சிங்கமுகனையும், மூன்றாவதாக தன் முகம் கொண்ட சூரனையும் ஜெயந்தி நாதர் வதம் செய்தார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சூரபத்மனை அழித்த வேலனை கண்டு பூரிப்படைந்த பக்தர்கள், விண்ணை முட்டும் அளவுக்கு அரோகரா..அரோகரா.. பக்தி முழக்கமிட்டு மகிழ்ந்தனர். சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

இதனால், கோயில் கடற்கரையில் கூடிய கூட்டங்கள் அலையா? கடல் அலையா? என கேட்கத் தோன்றியது. இதனையடுத்து கந்த சஷ்டிக்கு விரதம் இருந்த பக்தர்கள், திருச்செந்தூரில் தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்பு மற்றும் கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.