மையல் சினிமா விமர்சனம் : மையல் மயக்கவில்லை | ரேட்டிங்: 2.5/5

0
299

மையல் சினிமா விமர்சனம் : மையல் மயக்கவில்லை | ரேட்டிங்: 2.5/5

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி சார்பில் அனுபமா விக்ரம் சிங் மற்றும் வேணுகோபால்.ஆர் தயாரித்து மையல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஏபிஜி. ஏழுமலை

இதில் சேது, சம்ரித்தி தாரா, பி.எல். தேனப்பன், மறைந்த சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா, சி.எம். பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் : கதை, திரைக்கதை, வசனம- ஜெயமோகன், இசை-அமர்கீத். எஸ், ஒளிப்பதிவு – பாலா பழனியப்பன், எடிட்டர் -வெற்றி சண்முகம், பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர்

திருட்டு தொழிலை செய்து வரும் சேது ஒரு கிராமத்தில் இரவு நேரத்தில் ஆடு திருட செல்கிறார். எதிர்பாராத விதமாக கிராமத்து மக்களிடம் சிக்கும் சேது, அங்கிருந்து தப்பி கிணற்றுக்குள் குதித்து பதுங்கிக் கொள்கிறார். அந்த கிணற்றின் அருகே ஊரே ஒதுக்கி வைத்திருக்கும் மந்திரக்கிழவியின் வீடு இருப்பதால் கிராம மக்கள் பயந்து திரும்பி சென்று விடுகின்றனர். அதே நாள் இரவில் அந்த கிராமத்து ஜமீன்தார் பி.எல்.தேனப்பன் வாரிசுகள் இல்லாத சித்தப்பா, சித்தியை சொத்துக்கு ஆசைப்பட்டு அடியாட்களை வைத்து கொலை செய்து விடுகிறார். ஆடு திருட்டு சம்பவத்தையும், கொலை சம்பவத்தையும் இன்ஸ்பெக்டர் ஆர்.பி.பாலா விசாரணையை மேற்கொள்கிறார். இந்நிலையில் கிணற்றில் விழுந்த சேதுவை மந்திரக்கிழவியின் பேத்தி சம்ரித்தி தாரா காப்பாற்றி முதலுதவி செய்து அடைக்கலம் கொடுக்கிறார். போலீஸ் கெடுபிடி, கிராமத்துமக்கள்​ நடமாட்டம் இருப்பதால் சேது அந்த குடிசையிலேயே தங்கி வைத்தியம் செய்து கொள்கிறார். சம்ரித்தி சேதுவை பார்த்தவுடன் காதலிக்க தொடங்க முதலில் திருடன் என்று சொல்லி மறுக்கும் சேது பின்னர் சம்மதம் தெரிவிக்கிறார். நன்கு குணமானவுடன் சொந்த ஊருக்கு சென்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி மந்திரக் கிழவி உதவியுடன் இரவில் பஸ்ஸில் தப்பித்து சென்று விடுகிறார்.  இந்நிலையில் கொலை சம்பவத்திற்கு காரணம் ஜமீன்தார் தேனப்பன் தான் என்று கண்டுபிடிக்கும் இன்ஸ்பெக்டர், அவரை கைது செய்ய முடிவு செய்கிறார். இதனை அறிந்து கொள்ளும் ஜமீன்தார் இன்ஸ்பெக்டர் பாலாவிற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, தன் அடியாட்கள் இருவரை குற்றவாளியாக கைது செய்து என்கவுண்டர் செய்யச் சொல்கிறார். அந்த இரு அடியாட்களை கைது செய்ய செல்லும் இன்ஸ்பெக்டரால் ஒருவரைத்தான் சுட முடிந்தது, மற்றொரு நபர் தப்பித்து மலைப்பகுதியில் சென்று மறைந்து கொள்கிறார். அவனை தேடி போலீஸ் படை செல்கிறது. இந்த இடைப்பட்ட நாட்களில் ஊருக்கு செல்லும் சேது திருட்டு தொழிலுக்கு முழுக்கு போட்டு விட்டு புது வாழ்க்கை வாழ வீட்டை விற்று நகை, புடவை வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்ள காதலி ஊருக்கு வருகிறார். அந்த நேரத்தில் என்கவுண்டர் ஆளை தேடிக் கொண்டிருக்கும் போலீஸ் கண்ணில் பட, தப்பிக்க நினைக்கும் சேதுவை கைது செய்து அவன் திருடன் என்பதையறிந்து கொலைப்பழியை சேது மேல் போட திட்டமிடுகிறார் இன்ஸ்பெக்டர் பாலா. போலீஸ் நிலையத்தில் துன்புறத்தப்படும் சேது பொய்யான கொலை பழியை ஏற்றுக்கொண்டாரா? அங்கிருந்து தப்பித்து காதல் திருமணம் செய்து கொண்டாரா? நடந்தது என்ன? என்பதே படத்தின் முடிவு.

சேது ஏற்கனவே மைனா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக முத்திரை பதித்தவர். இப்பொழுது கதாநாயகனாக களமிறங்கியிருக்கும் சேது ஆட்டுத்திருடனாக இரவில் பதுங்கி திருட எடுக்கும் முயற்சிகள், காதலில் விழுவது, புது வாழ்க்கை கிடைக்கப்போவதை நினைத்து சந்தோஷப்படுவது, போலீசிடம் சிக்கி சித்தரவதை அனுபவிப்பதும், பின்னர் வெகுண்டெழுந்து விரோதிகளை துவம்சம் செய்யும் காட்சிகள், காதலியின் முடிவை நினைத்து பதறி துடிப்பது என்று அழுத்தமான நடிப்பால் கவர்கிறார்.

காதலியாக சம்ரித்தி தாரா அல்லி கதாபாத்திரத்தில் துடுக்கான பேச்சு, கேலி, கிண்டல், காதல், பரிதவிப்பு, தப்பிக்க எடுக்கும் சோக முடிவு என்று யதார்த்தமாக நடித்துள்ளார்.

வில்லன்களாக பி.எல்.தேனப்பன், இன்ஸ்பெக்டராக சி.எம்.பாலா, சூனியக் கிழவியாக ரத்னகலா, போலீஸ் ஏட்டாக மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர் படத்தில் முக்கிய பங்கு வகித்து நேர்த்தியாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பாலா பழனியப்பன் கிராமத்து மண் மணம் மாறாமல் இயற்கை எழிலுடன் காட்சிக் கோணங்களை கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் அமர்கீத். எஸ் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம்.

எடிட்டர் வெற்றி சண்முகம் கவனம் செலுத்தி ஷார்பாக கொடுத்திருக்கலாம்.

எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் கிராமத்தில் நடக்கும் திருட்டு, கொலை, அதை விசாரிக்க வரும் போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம், அப்பாவிகள் தண்டிக்கப்படலாம் என்பதை திரைக்கதையமைத்து திருந்தி வாழ நினைக்கும் இளைஞனின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அவனின் உரிமைகள் பறிக்கப்பட்டு நிர்கதியாக நிற்கும் அவலத்தையும், பறி போன காதல், பழி வாங்குதல் என்பதை மையமாக வைத்து இயக்கியிருந்தாலும் சுவாரஸ்யம் இல்லாமல் தோய்வோடு கொடுத்துள்ளார் இயக்குனர் ஏபிஜி. ஏழுமலை.

மொத்தத்தில் ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி சார்பில் அனுபமா விக்ரம் சிங் மற்றும் வேணுகோபால்.ஆர் இணைந்து தயாரித்திருக்கும் மையல் மயக்கவில்லை.