மாமன் சினிமா விமர்சனம் : மாமன் குடும்ப உறவுகளை அரவணைக்கும் பாசத்தால் கட்டிப்போடும் முடி சூடா மாமன்னன் | ரேட்டிங்: 4/5

0
747

மாமன் சினிமா விமர்சனம் : மாமன் குடும்ப உறவுகளை அரவணைக்கும் பாசத்தால் கட்டிப்போடும் முடி சூடா மாமன்னன் | ரேட்டிங்: 4/5

லார்க் ஸ்டுடியோஸ்  சார்பில் கே.குமார் தயாரித்து, ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் வெளியீட்டிருக்கும் மாமன் படத்தை எழுதி இயக்க​pயிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.

இதில் சூரி – இன்பா, ராஜ்கிரண் – சிங்கராயர், ஐஸ்வர்யா லெட்சுமி – ரேகா, ஸ்வாசிகா கிரிஜா, பாபா பாஸ்கர் – ரவி, மாஸ்டர். பிரகீத் சிவன் (அறிமுகம்) – நிலன், பால சரவணன் – பூங்காவனம், ஜெய பிரகாஷ் – ரேகா அப்பா, விஜி சந்திரசேகர் – பவுன், கீதா கைலாசம் – இன்பா அம்மா, சாயா தேவி – இன்பா முறைப்பெண், நிகிலா சங்கர் – அகிலா ஆகியோர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் : கதை – சூரி, ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன், இசை -ஹேஷாம் அப்துல் வஹாப், படத்தொகுப்பு – கணேஷ் சிவா, கலை – ஜி. துரை ராஜ், சண்டை – மேத்யூ மகேஷ் , நடனம் – பாபா பாஸ்கர், பாடல் வரிகள் – விவேக், ஏக்நாத், பெர்னாண்டோ எஸ் மனோகரன், விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக், மக்கள் தொடர்பு – யுவராஜ்

இன்பா(சூரி) திருமணமான தன் அக்கா கிரிஜா (ஸ்வாசிகா) மீது அதீத அன்பை வைத்திருக்கிறார். திருச்சியில் ஒரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் இன்பா என்றாலும் தன் அக்காவிற்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் கழித்தும் குழந்தை இல்லை என்ற மனக்குறை தெரியாமல் பார்த்துக் கொண்டாலும், ஊரார், குடும்பத்தினர் ஏச்சு பேச்சுக்கு அளவில்லாமல் அக்கா கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறார். இந்நிலையில் உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் கிரிஜா வாந்தி எடுக்க, அவருக்கு கர்ப்பம் ஆனதை உறுதி செய்து கொள்ள மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கே துணை டாக்டராக பணி புரியும் ரேகா (ஐஸ்வர்யா லெட்சுமி) இவர்களுக்கு உதவி செய்கிறார். மாதந்தோறும் பரிசோதனைக்கு அக்காவுடன் செல்லும் தம்பி இன்பாவின் நடவடிக்கைகள், பெண்களுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து டாக்டர் ரேகாவிற்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதன் பின் கிரிஜா மற்றும் ரவிக்கு (பாபா பாஸ்கர்) ஆண் குழந்தை பிறக்கிறது. தனது மருமகனான நிலன் எனப்படும் லட்டு (பிரகீத் சிவன்) மீது இன்பா மிகுந்த அன்பான மாமாவாக பழகுகிறார். லட்டுக்கும் விளையாடுவது, ஊர் சுற்றுவது, பள்ளிக்கு செல்வது, தூங்குவது என்று எப்பொழுதும் இன்பாவுடனே லட்டு இருக்கிறான். இன்பாவும் ரேகாவும் காதலிக்க தொடங்கி ஐந்து வருடங்கள் கடந்த பிறகு திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களின் திருமணம் இன்பா பெருமதிப்பு வைத்திருக்கும் வயதான குடும்ப உறவினர் சிங்கராயர் (ராஜ்கிரண்) மற்றும் அவரது மனைவி பவுனு (விஜி சந்திரசேகர்) ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் ரேகா முதலில் லட்டுவின் அதிகப்படியான அன்பு இன்பாவிடம் இருப்பதை உணர்ந்து அனுசரித்து செல்கிறார். ஆனால் புதுமண தம்பதியை தனிமையில் இருக்க விடாமல் லட்டு செய்யும் குறும்புகள் பெரிய தலைவலியாக உருவெடுக்கிறது. புதுமணத் தம்பதிகளுக்கிடையே விரிசல் உண்டாகும் நிலைமைக்கு இட்டுச் செல்கிறது. சிறு சலசலப்பு பெரிய சண்டையாக மாறி ரேகா தன் தாய் வீட்டிற்கு செல்லும் நிலைமைக்கு ஆளாகிறார். கிரிஜா மற்றும் ரேகாவிற்கும் நடக்கும் சண்டை, இன்பாவை பாதிக்கிறது. மதுரைக்கு வேலையை மாற்றிக் கொண்டு ரேகா இன்பாவை அழைத்துச் செல்கிறார். அவர்களின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் ஏற்படுகிறது. இன்பாவின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் லட்டு நாளடைவில் சமாதானமடைந்து இயல்பு நிலைக்கு வருகிறான். அதே சமயம் அக்கா, தம்பி இருவருக்குமிடையே பெரிய இடைவேளி ஏற்பட்டு பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கின்றனர்.இந்நிலையில் ரேகா கர்ப்பம் தரிக்க, தன் சொந்தங்களை பார்க்கவும், உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள திருச்சி வருகிறார் இன்பா. ஆனால் பழையபடி இன்பா லட்டுவிடம் பழக முடியாதவாறு பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் அக்கா, தம்பி இருவரும் ஒன்றாக பாசத்துடன் இணைந்தார்களா? கிரிஜா ரேகா இருவரும் சமாதானமானார்களா? மாமன் மருமகன் பாசம் வென்றதா? அனைவரும் சண்டையை மறந்து ஒற்றுமையாக இணைந்தார்களா? என்பதே படத்தின் சுபமான முடிவு.

சூரி கதையின் நாயகனாக படம் முழுவதும் தன்னுடைய இயல்பான நடிப்பு, வசன உச்சரிப்பாலும் வசீகரிக்கிறார். அக்காவிடம் பாசம், தாயிடம் உரிமையோடு சண்டையிடுவது, மாமாவிடம் அன்பு, லட்டுவிடம் காட்டும் பேரன்பு, காதல் மனைவியிடம் ஊடல், நெருக்கம், ஆக்ஷன் காட்சிகளில் லாவகமாக வளைந்து சண்டையிடுவது, ராஜ்கிரணின் அறிவுரையை எடுத்துக் கொள்வது, அவரை இழந்து தவிக்கும் காட்சிகளிலும், அக்கா தம்பி பாசத்தின் வெளிப்பாட்டிலும், கணவன் மனைவி உறவின் உன்னதத்தையும் உணரும் வண்ணம் உணர்ச்சிகளின் குவியலாக இறுதி வரை தேர்ந்த பண்பட்ட நடிப்பு படத்திற்கு பலம் மட்டுமல்ல அவரின் அபரிதமான உழைப்பால் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சூரி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது தனக்கு தானே நல்லதை தேர்வு செய்து செதுக்கி கொள்ளும் சிற்பி போல் மிளிர்கிறார். குடும்பங்கள் கொண்டாடும் நிரந்தர நாயகனாக வெற்றி பாதையில் பயணிக்கும் சூரிக்கு பாராட்டுக்கள்.

கிரிஜாவாக ஸ்வாசிகா ஒவ்வொரு காட்சியிலும் பாசத்துடன் அக்கா-தம்பி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார். மகனை தம்பியின் அரவணைப்பில் விட்டு விட்டு ஆனந்தப்படுவதும்,  திருமணத்திற்கு பிறகு மகனை தம்பியிடமிருந்து பிரிக்க முடியாமல் தவிப்பது, அதற்காக எடுக்கும் முடிவு, தம்பி மனைவியை வெறுப்பேற்றி கோபத்தை தனித்து கொள்வது, தன் மகனின் நடவடிக்கையை குறை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பது, மகனுக்காக தம்பியை மறக்க எடுக்கும் செயல் அதன் பின் தாயிடம் உடைந்து அழுவது, பின்னர் இறுதிக் காட்சியில் தம்பியின் குழந்தையை பார்க்க அனைவரின் காலில் விழுந்து கதறுவது என்று அழுத்தமான நடிப்பால் அதகளம் செய்துள்ளார்.

டாக்டர் ரேகாவாக ஐஸ்வர்யா லெட்சுமி காதல் கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதும், பின்னர் கணவனின் மருமகன் பாசத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்வதும், ஒரு அளவுக்கு மேல் கணவனின் அரவணைப்பு கிடைக்காமல் போவதை உணர்ந்து வெகுண்டெழுந்து அதற்கான தீர்வு வழியை கண்டுபிடித்து செல்வது, கணவனின் அன்பிற்காக ஏங்கும் பெண்ணாக, கணவன் ஊதாசினப்படுத்தும் போதெல்லாம் தட்டிக் கேட்கும் தைரியமிக்க மனைவியாக படத்தின் அனைத்து காட்சிகளில் உணர்ச்சி பொங்க நடித்துள்ளார். இவரின் பார்வையில் எடுக்கும் அத்தனை முடிவுகளும் சிந்தித்து பார்க்கும் அளவிற்கு சரியாக உள்ளது.முக்கோண கதாபாத்திரங்களான சூரி, ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லெட்சுமி இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் படத்தை மேலும் மெருகேற்றியிருக்கிறது.

இயக்குனரின் மகனாக நிலன் (எ) லட்டுவாக சிறுவன் பிரகீத் சிவன் படத்தின் முக்கிய புள்ளியாக இருந்து காட்சிகளில் கலகலப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி விடுகிறார்.

வயதான உறவினர் தம்பதியராக சிங்கராயர் (ராஜ்கிரண்) மற்றும் அவரது மனைவி பவுனு (விஜி சந்திரசேகர்) இரண்டாம் பாதியில் முதிர்ந்த காதலை அழகாக பிரதிபலித்து க்ளைமேக்ஸ் காட்சியில் கண் கலங்க வைத்து விடுகின்றனர். சூரியின் அம்மாவாக கீதா கைலாசம் திட்டு வாங்கினாலும் உண்மையை யதார்த்தத்தை மகள், மகனுக்கு உணர்த்த துடிக்கும் தாயுள்ளம்.

அக்கா வீட்டுக்காரர் மாமன் ரவியாக பாபா பாஸ்கர் மகன் மீது தன் மனதில் புதைத்து வைத்திருக்கும் பாசத்தை கொட்ட காத்திருக்கும் அமைதியான உள்ளம், சைலன்டாக வந்து போவது போல் தெரிந்தாலும், அவரின் மௌன மொழி ஒராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கி வெளிப்படுத்த துடிக்கும் முகபாவனைகள், மகன் பிறந்தவுடன் கையிலேந்த இருக்கும் நேரத்தில் அவரை தள்ளிவிட்டு வாங்கிச் செல்லும் மச்சானை பார்த்து அதிர்ச்சியாவது, அனைத்து காட்சிகளிலும் பொறுமையை கடைபிடித்து, அமைதி அழுத்தம் நிறைந்த மாமனிதராக வாழ்ந்துள்ளார். இவரின் பார்வையில் கதைக்களம் சொல்லப்பட்ட விதம் வித்தியாசமாக இவரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புன்முறுவல் பூக்க வைக்கும் பால சரவணன், ஜெயபிரகாஷ், சாயா தேவி, நிகிலா சங்கர் மற்றும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் காட்சிகளில் நிறைந்து குடும்ப பாங்கான அழகை சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா, கலை இயக்குனர் ஜி. துரை ராஜ், சண்டை – மேத்யூ மகேஷ், நடனம் – பாபா பாஸ்கர், என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் குடும்ப உறவுகளின் மேன்மையையும் பிணைப்பையும் இயல்பாக காட்சிப்படுத்தி காட்சிக் கோணங்களில் அசர வைத்துள்ளனர்.

அக்கா தம்பி பாசம், கணவன் மனைவி பாசம், மாமன் மச்சான் பாசம், வயதான தம்பதிகளின் பாசம், தந்தை மகன் பாசம், மாமனார் மருமகன் பாசம், அத்தை மருமகள் பாசம், தாய் மகள் பாசம் என்று வகைவகையான பாசத்தை சென்டிமெண்ட் கலந்து சூரி கதை எழுத அதை திறம்பட இயக்கியுள்ளார் பிரசாந்த் பாண்டியராஜ். இதுமட்டுமில்லாமல் இயக்குனரின் மகன் பாசம் வேறு படத்தில் நிறைந்துள்ளது. முதல் பாதி மாமன் மருமகனின் உறவை வெளிப்படுத்த, இரண்டாம் பாதி குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல், ஒற்றுமையை நிலை நாட்ட எடுக்கும் முயற்சிகளில் அதிக சென்டிமென்ட் கலந்து கனத்த இதயத்துடன் மறந்த பாசத்தை நினைத்து ஏக்கத்துடன் குடும்பங்கள் புதுப்பித்துக் கொள்ளும் வண்ணம் மலரும் நினைவலைகளை ஞாபகப்படுத்தும் விதமாக உணர்ச்சிகளின் பிம்பமாக படத்தை கொடுத்து கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ். வெல்டன்

மொத்தத்தில் லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் தயாரித்திருக்கும் மாமன் குடும்ப உறவுகளை அரவணைக்கும் பாசத்தால் கட்டிப்போடும் முடி சூடா மாமன்னன்.