லெவன் சினிமா விமர்சனம் : லெவன் வித்தியாசமான த்ரில்லர் கதைக்களத்துடன் திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் கலந்த புலனாய்வு பதிவு| ரேட்டிங்: 3/5
ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா ஹரி தயாரித்திருக்கும் லெவன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லோகேஷ் அஜ்ல்ஸ்.
இதில்; அரவிந்தனாக நவீன் சந்திரா, சாந்தியாக அபிராமி, போலீஸ் அதிகாரியாக ஷஷாங்க், மனோகராக திலீபன், தாராவாக ரித்விகா, சஞ்சனாவாக ரேயா ஹரி, சந்திரசேகராக ஆடுகளம் நரேன், தீரனாக அர்ஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள் : இசையமைப்பாளர் – டி.இமான், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – பிரபு சாலமன், இணை தயாரிப்பாளர் – கோபாலகிருஷ்ணா.எம், ஒளிப்பதிவு இயக்குனர் – கார்த்திக் அசோகன், எடிட்டர் – ஸ்ரீPகாந்த்.என்.பி, கலை இயக்குனர் – பி.எல். சுபேந்தர், அதிரடி இயக்குனர் – பீனிக்ஸ் பிரபு, ஆடை வடிவமைப்பாளர் – கிருத்திகா சேகர், பாடல் வரிகள் – கபிலன், விஷ்ணு எடவன், லோகேஷ் அஜ்ல்ஸ், பாடகர்கள் – மனோ, ஆண்ட்ரியா ஜெரேமியா, ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜோனிதா காந்தி, ஒலி வடிவமைப்பாளர் – எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், தயாரிப்பு நிர்வாகி – ஹக்கீம் சுலைமான், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
சென்னை ஆவடியில் எரிந்த நிலையில் கிடக்கும் உடல், தடயங்கள் எதுவும் கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. அதே வேளையில் வங்கி கொள்ளை, போதை மாத்திரை கிடங்கை கண்டுபிடிப்பது என்று துரிதமாக கண்டுபிடித்து தன் பணியை செய்து நற்பெயர் பெற்று வருகிறார் துணை போலீஸ் ஆணையர் அரவிந்த் குமார் (நவீன் சந்திரா). இன்னொருபுறம் எரிந்த நிலையில் கண்டெக்கப்படும் உடல்கள் என்று சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி ரஞ்சித் (ஷஷாங்க்) நியமிக்கப்படுகிறார். ரஞ்சித் விசாரணையை மேற்கொள்ளும் போது விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க ரஞ்சித்திற்கு பதில் அரவிந்திடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் உயர் போலீஸ் ஆணையர் சந்திரசேகர் (ஆடுகளம் நரேன்). காணாமல் போனவர்களின் பட்டியலில் இந்த இறந்த நபர்களின் வயதிற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் தாரா (ரித்விகா) கடத்தப்பட்டதாக ஒரு மனநலம் பாதித்த நபரின் வாக்குமூலத்தின் பேரில் விசாரிக்க தொடங்கும் அரவிந்திற்கு தொடர்ச்சியாக திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. கடத்தப்பட்டதாக சொல்லப்படும் தாரா வீட்டில் இருப்பதை உறுதி செய்கிறார் அர்விந்த். தீவிர விசாரணையில் இரட்டையர்களை குறி வைத்தே கொலை செய்யப்படுவதை அறிந்து அவர்களின் விவரங்களை சேகரிக்கிறார். டிவின் பேர்ட்ஸ் பள்ளியில் பதினோரு இரட்டையர்களும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதால் அந்த பள்ளியின் முதல்வர் சாந்தியை(அபிராமி) சந்திக்கிறார் அர்விந்த். அனைவரின் சந்தேகமும் பெஞ்சமின் என்ற மாணவனை சுற்றியே நகர்கிறது. இறுதியில் யார் இந்த பெஞ்சமின்? அரவிந்தால் பெஞ்சமினை கண்டுபிடிக்க முடிந்ததா? தொடர் கொலைகளை செய்த சைக்கோ யார்? என்ன காரணம்? என்பதே படத்தின் திருப்புமுனை க்ளைமேக்ஸ்.
ஏசிபி அரவிந்தனாக நவீன் சந்திரா அழுத்தமான மனநிலையுடன், முகபாவனையில் ஒரு இறுக்கம், பேச்சில் கண்டிப்பு, நடவடிக்கைகள் மிரட்டல், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுப்பது என்று போலீஸ் அதிகாரியாக வருவதன் அர்த்தம் அவரின் மனநிலையை படம் இறுதியில் அதற்கான காரணத்தை உணர்த்தியுள்ளார். இவரின் கதாபாத்திரம் யூகிக்கமுடியாத அளவிற்கு படத்தின் காட்சிகளில் தனது தனித் திறமையை காட்டி அசத்தியுள்ளார்.
இரட்டையர்கள் சம்பந்தப்பட்ட கதைக்களம் என்பதால் பாதிக்கப்படும் நபர்களாக வரும் நாயகி சஞ்சனாவாக தயாரிப்பாளர் ரேயா ஹரி, தாராவாக ரித்விகா, தீரனாக அர்ஜய் என்று படத்தில் முக்கிய காட்சிகளுக்கு துணை நிற்கின்றனர்.
உயர் போலீஸ் ஆணையர் சந்திரசேகராக ஆடுகளம் நரேன்,எஸ் ஐ மனோகராக திலீபன், போலீஸ் அதிகாரியாக ஷஷாங்க் மிடுக்கான தோற்றத்துடம் தடம் பதித்துள்ளனர்.
கதையின் மையப் புள்ளியாக, படத்தின் முக்கிய ஃபிளாஷ்பேக் சம்பவங்களை விவரிக்கும் காட்சிகளில் வரும் டிவின் பேர்ட்ஸ் பள்ளி முதல்வர் சாந்தியாக அபிராமி தாயன்போடு மனித நேயமிக்க பெண்மணியாக மிளிர்கிறார்.
கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு, இமானின் பின்னணி இசையுடன் கலை இயக்குனர் – பி.எல். சுபேந்தர், அதிரடி சண்டை- பீனிக்ஸ் பிரபு ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் குற்ற புலனாய்வு கதைக்களத்தில் வரும் சம்பவங்கள், இரட்டை மாணவர்கள் படிக்கும் பள்ளி, அவர்களின் போட்டி பொறாமைகள், அடிதடி சண்டைக் காட்சிகள் என்று தங்களது பங்களிப்பின் மூலம் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளனர்.
எடிட்டர் ஸ்ரீகாந்த்.என்.பி படத்தின் கவனத்தை திசை திருப்பாமல் கச்சிதமாக தொகுத்துள்ளார்.
இரட்டையர்களை குறிவைக்கும் தொடர்ச்சியான கொலைகள் குழந்தை பருவ அதிர்ச்சி பின்னணி சம்பவங்களை கொண்ட பழிவாங்கும் சைக்கோ கொலைகாரணை கண்டுபிடிக்க புலனாய்வு செய்யும் காவல்துறை என்ற கதைக்களத்தை வித்தியாசமான கோணத்தில் புதுமையான சிந்தனை கலந்து சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்புடன் கொடுத்து எதிர்பாராத திருப்பங்களுடன் இறுதி வரை கட்டிப்போட்டு த்ரில்லிங் அனுபவத்துடன் அழுத்தமான படைப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் அஜ்லஸ்.
மொத்தத்தில் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா ஹரி இணைந்து தயாரித்துள்ள லெவன் வித்தியாசமான த்ரில்லர் கதைக்களத்துடன் திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் கலந்த புலனாய்வு பதிவு.