எமன் கட்டளை சினிமா விமர்சனம்: எமன் கட்டளை கற்பனைக்கெட்டாத காதல் ஜோடிகளின் நண்பன் | ரேட்டிங்: 3/5

0
292

எமன் கட்டளை சினிமா விமர்சனம்: எமன் கட்டளை கற்பனைக்கெட்டாத காதல் ஜோடிகளின் நண்பன் | ரேட்டிங்: 3/5

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் எஸ்.ராஜசேகர் இயக்கியிருக்கும் படம் எமன் கட்டளை.

இதில் மயில்சாமி மகன் அன்பு கதாநாயகனகாவும், சந்திரிகா, டி பி கஜேந்திரன், அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

தொழில்நுட்ப வல்லுனர்கள்:- என்.எஸ்.கே இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஏ.கார்த்திக் ராஜா. பாடல்கள் சினேகன், நடனம் – ஜாய் மதி, சிவராக் சங்கர், ராதிகா, அபிநயஸ்ரீ , கதை வசனம் வி.சுப்பையன். தயாரிப்பு டாக்டர்.எஸ்.ஏ. கார்த்திகேயன். திரைக்கதை  இயக்கம் எஸ்.ராஜசேகர். மக்கள் தொடர்பு வெங்கட்

சினிமா உதவி இயக்குனர் குரு (அன்பு) வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் இருக்கிறார். தன் நண்பன் அர்ஜுனனுடன் கூட்டு சேர்ந்து சொந்தமாக படமெடுக்க முடிவுசெய்கின்றார். சிறுத்தை சினிமா பாhணியில் பணத்திற்காக கொள்ளையடிக்க திட்டமிட்டு ஒரு திருமண மண்டபத்தில் நுழைந்து கமலி (சந்திரிகா) என்ற மணமகளின் நகை, பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். இதனால் திருமணம் நின்று போக மனமுடைந்த கமலியும், அவளது தந்தையும் (டி பி கஜேந்திரன்) விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதை கேள்விப்படும் குரு தன்னால் இரு உயிர்க​ள் பலியானதாக நினைத்து குற்ற உணர்ச்சியால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறார். எமலோகத்திற்கு செல்லும் குரு அங்கே யமனை(‘நெல்லை’ சிவா) சந்திக்க, விஷம் அருந்திய தந்தையும், மகளும் இறக்கவில்லை என்ற செய்தியை அறிந்து கொள்கிறார். தற்கொலைக்கு தள்ளிய குரு தான் கமலியின் திருமணத்தை 60 நாட்களில் முடிக்க வேண்டும் என்றும், திருமணம் நடைபெற பல நிபந்தனைகளாக, நண்பனிடம் மட்டும் யமலோகத்தில் நடந்ததை கூறலாம் வேறு யாரிடமும் இந்த விஷயத்தை பகிரக்கூடாது, மற்றும் அந்தப் பெண்ணை காதலிக்ககூடாது, அந்தப் பெண் விரும்பியவரையே மணம் முடிக்க வேண்டும் அதுவும் 60 நாட்களில் முடிக்காவிட்டால் குரு தலைவெடித்து  இறக்க நேரிடும் என்று எச்சரித்து, மூன்று ‘ஹெல்ப் லைன்’களை எமன் அளித்து மீண்டும் குருவுக்கு உயிர் கொடுத்து பூமிக்கு அனுப்பி விடுகிறார். உயிருடன் பூமிக்கு வரும் குரு தன்னை காப்பாற்றிக் கொள்ள, கமலியின் வீட்டு மேல் மாடியில் வாடகைக்கு குடி போகிறார். பின்னர் அவர்களுடன் சகஜமாக பழகி, கமலிக்கு மாப்பிள்ளை தேடி அலைகிறார். முறை மாமன் கமலியை திருமணம் செய்து கொள்ள மிரட்டினாலும், கமலிக்கு பிடிக்காததால் அதை தவிர்த்து, வெளி இடங்களில் மாப்பிள்ளை கிடைத்தாலும் ஏதாவது காரணத்தால் தடைபடுகிறது. பணம், நகை இருந்தும் கமலிக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் 59 நாட்கள் கடந்து விடுகிறது. யமனிடம் மீண்டும் மாட்டி இறக்கப்போகிறோம் என்ற பயம் இருக்க, ஒரே ஒரு நாள் மட்டும் இருக்கும் நேரத்தில் கமலிக்கு மாப்பிள்ளை கிடைத்ததா? குரு அதுவும் கமலிக்கு பிடித்த மாதிரியான ஒருவரை எப்படி  கண்டுபிடித்தார்? கமலிக்கு திருமணம் நடந்ததா? குரு தலை தப்பியதா? என்பதே படத்தின் கலகலப்பான க்ளைமேக்ஸ்.

குருவாக மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு தன்னுடைய இயல்பான நடிப்பால் படம் முழுவதும் தன்னுடைய முழு திறனை வெளிப்படுத்தி சிறப்பாக செய்துள்ளார்.

கமலியாக சந்திரிகா முக்கிய கதாபாத்திரத்தில் உணர்ச்சிகரமான காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.

இவர்களுடன் நண்பனாக அர்ஜுனன் அன்புவுடன் பயணித்து ஆங்கங்கே புன்முறுவல் தருணங்களுக்கு வழி வகை செய்துள்ளார். மற்றும் டி பி கஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா மற்றும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் படத்தின் உயிரோட்டமாக காட்சிகளுக்கு நகைச்சுவை கலந்து வலு சேர்த்துள்ளனர்.

சினேகனின் பாடல் வரிகளுக்கு என்.எஸ்.கே இசை, ஏ.கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு, வி.சுப்பையன் கதை வசனம் என தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தின் ஜனரஞ்சகமான காட்சிகளுக்கு கூடுதல் பலத்துடன் பணியாற்றியுள்ளனர்.

பணத்திற்காக தவறு செய்ய நினைக்கும் இளைஞன், தன் தவறை உணர்ந்து மாய்த்துக் கொள்ள, எமனோ அந்த இளைஞனுக்கு தண்டனை கொடுத்து மீண்டும் பூமிக்கு அனுப்பி பரிகாரம் செய்ய வைக்கும் திரைக்கதையில் காதல், காமெடி கலந்து பொழுதுபோக்கு படமாக எந்த ஒரு விரச காட்சிகளோ, அடிதடி இல்லாத புதிய கற்பனையோடு அனைவரும் ரசிக்கும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ். ராஜசேகர்.

மொத்தத்தில் செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் டாக்டர்.எஸ்.ஏ. கார்த்திகேயன் தயாரித்திருக்கும் எமன் கட்டளை கற்பனைக்கெட்டாத காதல் ஜோடிகளின் நண்பன்.