ரெட்ரோ சினிமா விமர்சனம் : ரெட்ரோ நவீனயுக ஆயிரத்தில் ஒருவன் | ரேட்டிங்: 4/5

0
849

ரெட்ரோ சினிமா விமர்சனம் : ரெட்ரோ நவீனயுக ஆயிரத்தில் ஒருவன் | ரேட்டிங்: 4/5

2 டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் சார்பில் ஜோதிகா – சூர்யா தயாரித்திருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இதில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், விது, கருணகரன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுனர்கள்:- இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர்: ஸ்ரேயாஸ் கிருஷ்ண​h, படத்தொகுப்பு : ஷாஃபிக் முகமது அலி, பாடல்: விவேக், அருண்ராஜா கமராஜ் 808 கிருஷ்ணா, ஸ்டண்ட்: கெச்சா காம்ஃபக்டி, நடனம்: ஷெரிஃப் எம், ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா, ஆடை: சுப்பியர், கலை: ஜாக்கி – மாயபண்டி ,கோ இயக்குனர்: சீனிவாசன் ,வண்ணம்: சுரேஷ் ரவி , கலவை: சுரேன் ஜி, தலைமை இணை ஆசிரியர்: நித்தின் ஜே.பி., இணை ஆசிரியர்: கேசவ் பி ராஜ், உதவி ஆசிரியர்: வைணவ் டி, விளம்பர வடிவமைப்பாளர்: துனே ஜான், ஸ்டில்ஸ்: தினேஷ் எம், வெளியீடு: சக்தி பிலிம் ஃபக்டரி, மக்கள் தொடர்பு:- யுவராஜ் – சதிஷ் (எஸ் 2)

தூத்துக்குடியில் 1960 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அனாதை குழந்தையாக இருக்கும் பாரிவேல் கண்ணன் (சூர்யா) ஒரு பெரிய தாதாவான திலகனின் (ஜோஜு ஜார்ஜ்) மனைவி சந்தியாம்மாவால் தத்தெடுத்து திலகனின் எதிர்ப்பையும் மீறி வளர்க்கிறார். சிறு வயதிலிருந்தே சிரிப்பு என்பதை அறியாமல் இறுக்கமான முகத்துடன் பாரி இருக்கிறார். சந்தியாம்மா பாரியை தனது சொந்த மகனாக நினைத்து வளர்க்க திலகன் அவரை ஒருபோதும் ஒரு மகனாக ஏற்றுக் கொள்ளவில்லை. திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு சந்தியாம்மா இறந்து விட, அவரின் இறுதிச் சடங்கு காசியில் நடக்க, அங்கே தாயை இழந்த ருக்மிணியை (பூஜா ஹெக்டே) சந்திக்கிறார். அவரின் தாய்க்கும் இறுதிச் சடங்கில் பாரி உதவி செய்ய, இருவரும் பேசிக் கொண்டு பின்னர் பிரிந்து செல்கின்றனர்.  தாயின் மரணத்திற்கு பிறகு, பாரி திலகனின் நிழலில் வளரும் போது இரயில் பயணத்தில் தந்தை திலகனின் உயிரை காப்பாற்றுகிறான் பாரி. அன்றிலிருந்து பாரியின் மேல் பாசத்துடன் பழகும் திலகன், தன்னுடைய தாதா தொழிலை கவனிக்கும் பொறுப்பையும் கொடுக்கிறார். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ருக்மணியை பாரி எதிர்பாராத விதமாக சந்திக்கும் போது இணைய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். பாரி தனது குற்ற வாழ்க்கையை  விட்டுவிட்டு தன்னுடன் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று சத்தியம் வாங்குகிறார் ருக்மணி. அவளுக்காக பாரி விட்டுவிடுவதாக உறுதியளிக்கிறார்.இதனிடையே, திலகன் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு கடத்தப்பட்ட பல கோடிகள் விலைமதிப்பு மிக்க ‘கோல்ட் ஃபிஷ் கன்டெயினரில் இருக்கும் பொருள் காணாமல் போனதாக தகவல் வர அரசியல்வாதி தலையீடு இருக்கும் அந்த பொருள் பற்றி விசாரிக்க,பாரியின் திருமண நாளில் ‘கோல்ட் ஃபிஷ்’ இருக்கும் இடத்தை பாரி வெளிப்படுத்த வேண்டும் என்று திலகன் கேட்கிறார். பாரி மறுக்கும்போது நடக்கும் மோதலில் திலகன் ருக்மணியை கொல்ல முயற்சி செய்ய அவளைப் பாதுகாக்க பாரி திலகனின் கையை துண்டாக்குகிறார். இதனால் பாரி சிறைக்கு செல்ல, ஏமாற்றமடைந்த ருக்மிணி விலகி அந்தமானுக்கு செல்கிறாள்.பாரி சிறையிலிருந்து கொண்டே ருக்மணி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார். சிறையிலிருந்து விடுபட கிங் மைக்கேல்(விது) என்ற கேங்ஸ்டரிடம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல சம்மதிக்கிறான். சிறையிலிருந்து தப்பிக்கும் போது, கிங் மைக்கேலை ஏமாற்றி விட்டு அந்தமானுக்கு சிரிப்பு வைத்தியர் என்ற போர்வையில் ஜெயராமுடன் தப்பித்து செல்கிறான். அந்தமானில் உள்ள அந்த தீவை ரப்பர் தொழிற்சாலைகளை நடத்தும் ராஜவேல் (நாசர்) மற்றும் அவரது மகன் மைக்கேல் (விது) ஆளுகிறார்கள் என்பதை பின்னர் அறிந்து கொள்கிறான். அந்த தீவின் மக்கள் கொத்தடிமைகளாக வாழ்வதும், அவர்களை காப்பாற்ற புனித திரிசூல வடிவ அடையாளத்தை தாங்கிய ஒருவர் வந்து காப்பாற்றுவார் என்று தீவு மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதை அறிகிறான் பாரி. இந்த ஆபத்தான தீவில் நடக்கும் மூடநம்பிக்கை, அடிமை மனிதருக்குள் சண்டையை மோத விட்டு சூதாட்டத்தில் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தை பாரிவேல் காண்கிறான். அதன் பின் பாரி எடுக்கும் முடிவு என்ன? தீவுவாசிகளின் நம்பிக்கை நட்சத்திரம் யார்? அவர்களை காப்பாற்றினாரா? கோல்ட் ஃபிஷ் இருக்கும் இடத்தை திலகன் கண்டுபிடித்தாரா? அது என்ன? இறுதியில் கோல்ட் ஃபிஷ் யார் கைக்கு கிடைத்தது? பாரியின் காதல் கை கூடியதா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சூர்யா பாரிவேல் என்ற கதாபாத்திரத்தில் முழுமையான பங்களிப்பை கொடுத்து படம் முழுவதும் தன் தோளில் சுமந்து உயிர் கொடுத்துள்ளார். சிரிப்பை மறந்த பாலகனாக தோன்றும் போது, அதற்கான அர்த்தம் படத்தின் இறுதிக் காட்சியில் தீவுவாசிகளின் இறுக்கமான முகத்தில் தென்படுவதின் அர்த்தம் தெரிகிறது. எண்ணற்ற சண்டை காட்சிகளில் விதவிதமாக சண்டையிட்டு அதகளம் செய்துள்ளார். காதலிக்காக நல்லவனாக மாற நினைத்து சேரும் போதெல்லாம் ஏதாவது தடங்கல் ஏற்பட்டு பிரியும் போது தென்படும் சோகம், பின்னர் சிரிப்பதற்கு எடுக்கும் முயற்சிகள், அதற்காக சிரிப்பு வைத்தியராக தீவிற்கு வந்து படும் அவதிகள், அன்பை கொடுக்கும் மயிலிறகு கிருஷ்ணனாக, சிரிக்கும் புத்தராக, தர்மத்தில் கர்ணனாக பல அவதாரங்கள் எடுத்து தன் இன தீவுவாசிகளை காத்திட எடுக்கும் இரும்பு கையாக இருந்து பலத்துடன் மோதி வெல்லும் காட்சிகள் அற்புதம்.

கால்நடை மருத்துவர் காதலி ருக்மணியாக சிறு வயதில் சிரித்தால் அழகாக இருப்பாய் என்று சொல்லும் வசனத்தை வளர்ந்த பிறகு சந்திக்கும் நேரத்தில் சொல்லும் போது படத்தில் எதிர்பாராத எற்படும் காதல் தருணமும், பின்னர்  பாரியின் நிலைமையை புரியாமல் பிரிந்து சென்று பல தடைகளை கடந்து சேரும் போது சோகம், துக்கம், மகிழ்ச்சி கலந்த நடிப்பு கவனிக்க வைத்துள்ளது.

வளர்ப்பு தந்தை வில்லனாக ஜோஜு ஜார்ஜ், தனக்கு உதவி செய்யும் போது மகன் என்றும், உபத்திரம் செய்யும் போது மகன் இல்லை என்று குத்திக் காட்டும் தந்தையாக, மகனையே கொல்ல பல வழிகளில் முயலும் மிரட்டும் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார்.

சிரிப்பு வைத்தியராக ஜெயராம், தீவை ஆளும் சர்வாதிகாரி தந்தையாக நாசர், கொள்ளை போன பொருளை கேட்டு மிரட்டும் அரசியல்வாதியாக பிரகாஷ் ராஜ், ஸ்டைலிஷ் தோற்றத்துடன் தெனாவெட்டு பேச்சுடன், நயவஞ்ச வலை விரிக்கும் வில்லனாக விது, கருணகரன், தந்தையாக தமிழ், கஜராஜ், சிங்கம்புலி, ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பங்காற்றியுள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஏற்கனவே ஹிட் லிஸ்ட்டில் உள்ள விவேக், அருண்ராஜா கமராஜ் 808 கிருஷ்ணா எழுதிய பாட்டுக்களாக உருவெடுத்ததை தன்னுடைய பின்னணி அதிரும் இசையாலும் இளையராஜாவின் பாடல்களை கலந்து கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டு திக்குமுக்காட வைத்துள்ளார்.

1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும், தாதாவின் வாழ்க்கையும், தூத்துக்குடி சம்பந்தப்பட்ட காட்சிகள், அந்தமானின் அழகு, சண்டைக் காட்சிகள் தீவின் அழகை வித்தியாசமான கோணத்துடன் உயிரோட்டத்துடன் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. பாடல், நடனம், காரசாரமான உரையாடல் மற்றும் பதட்டமான சூழ்நிலை உள்ளடக்கிய 15 நிமிட சிங்கிள்-ஷாட் காட்சி வடிவமைப்பு கை தட்டல் பெறுகிறது.

இரண்டாம் பாதி காட்சிகளில் சில இடங்களில் கத்திரி போட்டிருக்கலாம் படத்தொகுப்பாளர் ஷாஃபிக் முகமது அலி.

சூப்பர் ஃபாஸ்ட் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பை தக்க வைப்பதில் ஜெயித்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா காம்ஃபக்டி.

ரெட்ரோ படத்தில் தன் புது முயற்சியை கையாண்டு சூர்யாவை எப்படி சித்தரிக்க முடியுமா அத்தனையையும் பரீட்சித்து பார்த்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். நான் லீனியர் பாணியில் கதை பயணிக்க, காதல், சிரிப்பு, போர், ஒருவன் என்று பல அத்தியாயங்களாக பிரித்து கொடுத்து 1960 முதல் 1990 வரையிலான காலகட்டங்களை நம் கண் முன்னே நிறுத்தி அசத்தியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த தைரியமான பரிசோதனையில் முதல் பாதி பாரியின் காதல், பிரிவைப் பற்றியும் இரண்டாம் பாதி ரப்பர் தொழிற்சாலை, கருந்தீவின் அடக்குமறை வாழ்க்கை, அடிமைத்தனம், சண்டை என்று முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கதை பயணிப்பதில கவனம் செலுத்தி விறுவிறுப்பாக கொடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

மொத்தத்தில் 2 டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் சார்பில் ஜோதிகா – சூர்யா தயாரித்திருக்கும் ரெட்ரோ வித்தியாசமான புதிய கோணத்தில் திரைக்கதை, தேர்ந்த நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் களமிறங்கி காதல் மலர நகைச்சுவை மிளிர எடுக்கும் முயற்சியில் வெல்லும் நவீனயுக ஆயிரத்தில் ஒருவன்.