வரலாற்றில் முதல் முறை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்தியிருக்கும் மாபெரும் சாதனை!
ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் மோடி தலைமையிலான அரசு, பாஜக ஆளாத, காலூன்ற முடியாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அம்மாநில அரசுகளுக்கு தொல்லைக் கொடுக்கும் வேலைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அரசை முடக்கும் நோக்கில் அம்மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் இருந்து வந்தது.
தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார்.
மாநில அரசின் கொள்கைகளை விமர்ச்சிக்கும் வகையில் பல பொய்யான கருத்தை வெளியிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை ஆளுநர் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டுக் காலம் தாழ்த்தி வந்திருக்கிறார்.
குறிப்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
குடியரசுத் தலைவரும் இந்த மசோதாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வந்தன.
இதனை எதிர்த்தும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலை கண்டித்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8ஆம் தேதி (08.04.2025) தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், சட்டமன்றத்தில் இருமுறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை, பொதுவான விதிப்படியும், மாநில அரசின் ஆலோசனையின்படியும் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும் என்று கூறின. மேலும் மாநில அரசுக்கு ஆளுநர் வீண் தடைகளை ஏற்படுத்தக் கூடாது; அது மக்கள் நலன்களை பாதிக்கும். மாநில அரசுக்கு வழிகாட்டுபவராக ஆளுநர் இருக்க வேண்டுமே தவிர, அரசியல் எதிரி போல் செயல்படக் கூடாது. தன் விருப்பம்போல் ஆளுநர் செயல்பட முடியாது, தனக்குசிறப்பு அதிகாரம் இருப்பதாக கருதுவது தவறு. அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் 10 மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது, 2வது முறையாக குடியரசுத் தலைவருக்கு அவர் மசோதாக்களை அனுப்பி வைத்தது செல்லாது, அரசியல் சாசன பிரிவு 142ன் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது, இந்த மசோ தாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.
உச்ச நீதிமன்றம் கொட்டியதால் வெளியில் தலைக்காட்டாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது பதுங்கி இருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி நாடுமுழுவதும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கடிவாளம் உச்ச நீதிமன்றம் போடப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
142-வது சட்டப்பிரிவு மூலம் தனது சிறப்பு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தி தீர்ப்பு வழங்கியது குறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
“சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்ப்பட்டிருக்கிறது
ஆனால் அரசியலமைப்பை மீறும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார், குடியரசுத் தலைவரும் அந்த மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்தார். இவைகள் அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து மீண்டும் ஆளுநருக்கு அந்த மசோதாக்கள் மீது முடிவெடுங்கள் என்று அனுப்பி உத்தரவிட்டாலும், சட்டப்பிரிவு 361-ன் படி ”அரசியலமமைப்புச் சட்டத்தின் படி தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டேன் என்று கூட ஆளுநர் சொல்லுவார்” என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.
அதோடு அரசியல் சாசனப் பிரிவு 142-ன் மூலம் மசோதாவுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. முன்னதாக தமிழ்நாடு அமைச்சரவை பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என அளிக்கப்பட்ட கோப்பில் ஆளுநர் கையெழுத்திட மறுத்துவிட்டார். இதனால் பல வருடம் பேரறிவாளன் சிறையில் இருந்தார்.
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை வழக்கில், 142வது சட்டப்பிரிவு மூலம் அவருக்கு விடுதலை வழங்கியது உச்ச நீதிமன்றம். இந்த சிறப்பு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் சில வழக்குகளில் மட்டுமே பயன்படுத்தும். தற்போது ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசின் வழக்கிலும் 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 18.11.2023 அன்றில் இருந்து ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என தமிழ்நாடு அரசிதழில் தெரிவித்திருக்கிறது!