ஜவுளி உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவின் நிலையை உயர்த்த நடவடிக்கை!
PIB Chennai: இந்திய ஜவுளிகளை உலகச் சந்தையில் பிரபலப்படுத்தவும், மேம்படுத்தவும், மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. நவீன, ஒருங்கிணைந்த, உலகத்தரம் வாய்ந்த ஜவுளி உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வகையில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜவுளி உற்பத்தியில் மாபெரும் போட்டித் தன்மையை ஊக்குவிக்கும் வகையில் செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் துணி வகைகள், ஆயத்த ஆடைகள், தொழில்நுட்பம், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, மேம்பாடு, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு அடிப்படையிலான திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டு வளர்ச்சிக்கான பட்டு சமக்ரா-2 திட்டம், அதன் விநியோகச் சங்கிலியின் ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தறித் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டம், கைவினைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக தேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டம், விரிவான கைவினைப் பொருட்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தையும் ஜவுளி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் கீழ், சந்தைப்படுத்துதல், திறன் மேம்பாடு, குழும மேம்பாடு, கைவினைஞர்களுக்கு நேரடி பயன், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்றவற்றுக்கு இத்திட்டங்கள் உதவும்.
பருத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும் விலை குறையும் போது விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயித்து அவரகளது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இதனைத் தெரிவித்துள்ளார்.