படவா சினிமா விமர்சனம் : படவா கருவேல மரங்களால் ஏற்படும் அழிவை சமூக விழிப்புணர்வுடன் சொல்லும் படம் | ரேட்டிங்: 3/5
ஜே ஸ்டுடியோ இன்டர்நேஷனல் சார்பில் எம்.ஜான் பீட்டர் தயாரித்திருக்கும் படவா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.வி.நந்தா.
இதில் விமல், சூரி, ஸ்ரீதா, கே ஜி எஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், விநோதினி வைத்யநாதன் மற்றும் பலர் நடித்துள்ள படம் படவா.
தொழில்நுட்ப குழுவினர்கள்:- ஒளிப்பதிவு – ராமலிங்கம், இசை – ஜான் பீட்டர், படத்தொகுப்பு – வினோத் கண்ணா, பாடல்கள் – விவேகா, கபிலன் வைரமுத்து, இளைய கம்பன், சொர்ணலதா, ஜான் பீட்டர், மக்கள் தொடர்பு நிகில் முருகன்.
மலேசியாவில் பார் ஒன்றில் வேலை செய்யும் வேலன் (விமல்) பணத்தின் மதிப்பு தெரியாமல் வாழ்கிறார். இந்நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையை இழக்கும் வேலன் சிவகங்கை மாவட்டம் தன் சொந்த மரக்காத்தூர் கிராமத்திற்கு மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயத்தால் என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கிறார். இதற்கான காரணத்தை நண்பனிடம் விவரிப்பது போல் கதைக்களம் தொடர்கிறது. வேலன் தன் நண்பன் உரப்புடன் (சூரி) சேர்ந்து வெட்டியாக பொழுதை கழிப்பது, மாணவர்களை பள்ளிக்கு செல்ல விடாமல் காசு வாங்கிக் கொண்டு சிறு விளையாட்டுக்களில் ஈடுபட வைப்பது, அக்கா மற்றும் மாமாவிடம் ஏமாற்றி பணத்தை வாங்கி மது குடிக்க செல்வது, கிராமத்தில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் அபேஸ் செய்து விற்று செலவு செய்வது என்று கிராம மக்களுக்கு பல விதங்களில் இடையூறு செய்து கொண்டு அனைவரிடமும் கெட்ட பெயர் வாங்கி கொண்டு திரிகின்றனர். மரக்காத்தூரில் பருவமழை இல்லாததால் வறண்ட பூமியில் விவசாயத்தை செய்ய முடியாமல் மக்கள் தவித்து, அங்கிருக்கும் செங்கல் சூலையில் வேலைக்கு செல்கின்றனர். அந்த செங்கல் சூளையை நடத்தி வரும் கேஜிஎஃப் ராம் தன் தொழிலுக்கு அதிக அளவில் விறகுகள் தேவைப்படுவதால் கருவேலமரத்தை அதிக அளவில் விளையும்படி செய்கிறார். அதற்கு வேலன் மற்றும் உரப்பின் உதவியுடன் கருவேல விதைகளை தூவி வர அனுப்பி அதற்கு பணமும் கொடுக்கிறார். அதனால் மரக்காத்தூர் கிராமமே கருவேல மரங்களால் சூழப்பட்டு பொட்டல் காடாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் வேலனின் தொல்லை தாங்க முடியாமல் கிராமமே சேர்ந்து பணம் வசூலித்து மலேசியா செல்ல ஏற்பாடு செய்து அனுப்பி வைத்ததாக வேலன் சொல்ல, நண்பர் வேலனை கிராமத்திற்கு செல்லுமாறும் ராஜ மரியாதை கிடைக்கும் என்று சொல்லி அனுப்புகிறார். மலேசிய நண்பர் கிராமத்தில் இருக்கும் வேலனின் உரப்பை போனில் அழைத்து வேலனுக்கு பத்து கோடி லாட்டரியில் விழுந்திருக்கிறது என்று பொய் சொல்கிறார். கிராமத்திற்கு வரும் வேலனுக்கு ஊர் மக்கள் சேர்ந்து தடபுடல் வரவேற்பு அளித்து ஊர் தலைவராகவும் பதவி கொடுக்கின்றனர். அதன் பின் வேலன் கிராமத்தினருக்காக என்ன செய்தார்? செங்கல் சூளை அதிபர் ராம் செய்யும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா? கருவேல மரங்களை அழித்தாரா? கிராம முன்னேற்றத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்? மீண்டும் கிராமத்தினர் விவசாயம் செய்ய முடிந்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
வேலனாக விமல் செய்யும் அளப்பரைகள், கொடுக்கும் இன்னல்கள், வெட்டியாக ஊர் சுற்றி வம்பு இழுத்துக்கொண்டு கவலையில்லா இளைஞனாக முதல் பாதியும், இரண்டாம் பாதியில் பொறுப்பை உணர்ந்து கிராம மக்கள் நலனுக்காக பாடுபடும் இரு வேறு குணாதியங்களை நன்றாக பிரதிபலித்து நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
விமலுடன் சேர்ந்து உரப்பு கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வந்து செய்யும் அடாவடி செயல்களில் நகைச்சுவை கலந்து இயல்பாக செய்துள்ளார்.
வில்லனாக ராமச்சந்திர ராஜு, கால்நடை டாக்டராக வரும் காதலியாக ஸ்ரீPரிட்டா ராவ், அக்காவாக தேவதர்ஷினி, மாமாவாக நமோ நாராயணன், கலெக்டராக வினோதினி வைத்தியநாதன், மலேசிய நண்பர் ராமர் உட்பட அனைவருமே சிறப்பாக செய்துள்ளனர்.
ஜான் பீட்டர் இசை மற்றும் பின்னணி இசை, வினோத் கண்ணாவின் படத்தொகுப்பு, ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு, கணேஷின் ஆக்ஷன் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
பொறுப்பற்ற கிராமத்து இளைஞன் கிராம மக்களின் முன்னேற்றத்திற்காக மனிதாபிமானமுள்ள மனிதனாக மாறி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி விவசாயத்தை ஊக்குவிக்கும் கதைக்களமாக இயக்கியுள்ளார் கே.வி.நந்தா. மெதுவாக செல்லும் கதைக்களத்தில் நகைச்சுவை, காதல் கலந்து கிராமப்புற வாழ்வியலை சிந்தனையை தூண்டும் ‘கருவேலம்’ மரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதன் அச்சுறுத்தலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் கே.வி.நந்தா.
மொத்தத்தில், ஜே ஸ்டுடியோ இன்டர்நேஷனல் சார்பாக எம். ஜான் பீட்டர் தயாரித்த படவா கருவேல மரங்களால் ஏற்படும் அழிவை சமூக விழிப்புணர்வுடன் சொல்லும் படம்.