எமகாதகி சினிமா விமர்சனம் : எமகாதகி சிலிர்க்க வைக்கும் திகில், த்ரில் அனுபவத்தை மறைந்தும் தரும் சண்டிராணி | ரேட்டிங்: 4/5

0
421

எமகாதகி சினிமா விமர்சனம் : எமகாதகி சிலிர்க்க வைக்கும் திகில், த்ரில் அனுபவத்தை மறைந்தும் தரும் சண்டிராணி | ரேட்டிங்: 4/5

நைசாட் மீடியா வொர்க்ஸ் சார்பில் சீனிவாசராவ் ஜலகம் தயாரித்திருக்கும் எமகாதகி படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்.

 

இதில் லீலா – ரூபா கோடுவாயூர் , நரேந்திர பிரசாத் -அன்பு, கீதா கைலாசம் – சந்திரா, ராஜு ராஜப்பன் – செல்வராஜ்,சுபாஷ் ராமசாமி – முத்து, ஹரிதா பிரேமா மற்றும் பலர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இணை தயாரிப்பாளர்: கணபதி ரெட்டி, ஓளிப்பதிவு: சுஜித் சாரங், எடிட்டர் மற்றும் கலரிஸ்ட் :ஸ்ரீஜித் சரங்,இசை : ஜெசின் ஜார்ஜ் ,வசனங்கள்: எஸ் ராஜேந்திரன் , கலை இயக்குனர்: பி ஜோசப் பாபின்,ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா, ஒலி கலவை: அரவிந்த் மேனன் ,டிஐ: சாரங்ஸ் டிஐ, ஸ்டண்ட் இயக்குனர்: முரளி ஜி, கேஸ்டிங் இயக்குனர்: ரெஜின் ரோஸ், பாடல்: ஞானகராவெல், எஸ் ராஜேந்திரன், தஞ்சய் செல்வி, தயாரிப்பு நிர்வாகி: மணவை லோகு, கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: சுஜித் சாரங், விளம்பர வடிவமைப்பாளர்: அனந்து எஸ் குமார், நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கட்டா ராகுல், விநியோகஸ்தர் -யேஷ்வா பிக்சர்ஸ், பிஆர்ஒ: சதிஷ், சிவா (ஏய்ம்)

செல்வாக்குமிக்க ஊர் தர்மகர்த்தா செல்வராஜ் (ராஜு ராஜப்பன்) -சந்திரா தம்பதிகள் (கீதா கைலாசம்) மகன் முத்து, நிறைமாத கர்ப்பிணி மருமகள் பிரேமா(ஹரிதா) மற்றும் மகள் லீலா (ரூபா கொடுவாயூர்) செல்வராஜின் தாயார் ஆகியோருடன் தஞ்சாவூரில் உள்ள கிராமத்தில் ஒற்றுமையாக வாழ்கின்றனர். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் லீலாவிற்கு சிறு வயதிலிருந்தே அதிகமாக உணர்ச்சிவசப்பட்டாலோ, கோபப்பட்டாலோ சுவாச பிரச்சனை ஏற்படும் அதனால் வீட்டிலுள்ளவர்கள் லீலா பா​திக்கப்பட்டால் அதற்கான இன்ஹேலர் மருந்தை உடனடியாக கொடுத்து சரி செய்து விடுவர். லீலா பிடிவாதக்காரி நினைத்ததை சாதிக்க நினைக்கும் பெண். இந்நிலையில் அந்த ஊர் மக்கள் திருவிழா கொண்டாட முடிவு செய்கின்றனர். இதை கேள்விப்படும் லீலாவின் அண்ணன் முத்து மற்றும் அவரது நண்பர்கள் கலக்கமடைகின்றனர். ஊர் தர்மகர்த்தா மகன் முத்து என்பதால் கோயிலில் லாக்கரில் உள்ள தங்க கிரீடத்தை திருடி அடகு வைத்து நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்ய நஷ்டமடைகின்றார். அந்த தங்க கீரிடத்தை கோயில் திருவிழாவிற்கு முன் மீட்டு கோயில் லாக்கரில் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருக்கடியில் தவிக்கின்றார்.  இந்த சமயத்தில் லீலா வீட்டில் ஒரு அறை திறக்கப்படாமல் வருடக்கணக்கில் இருக்க, அதை திறக்கவிடாமல் செல்வராஜின் தாயார் தடுத்து வருகிறார். ஒரு நாள் லீலாவின் வற்புறுத்தலின் பேரில் அறை கதவு திறக்கப்பட ஏதாவது அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று செல்வராஜின் தாயார் புலம்ப ஆரம்பிக்கிறார். அதற்கேற்றார்போல் ஒரு நாள் செல்வராஜ் கோபமாக வீட்டிற்கு வருகிறார். காரணம் கேட்கும் மனைவி சந்திராவையும், அதட்டி கேட்கும் லீலாவையும் அடித்து விட கோபித்துக் கொண்டு மாடிக்கு செல்லும் லீலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இந்த விஷயம் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரிய வர முத்துவிற்கும் தகவல் சொல்கின்றனர். இதனை கேள்விப்படும் முத்து தன் நண்பர்களுடன் சேர்ந்து குடும்ப கௌரவம் போய்விடும் அதனால் தற்கொலை என்று சொல்லாமல் சுவாச நோயால் இறந்து விட்டார் என்று பொய் சொல்லி ஊர் மக்கள் அனைவரையும் நம்ப வைக்க நினைக்கிறார்.இதற்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்க  ஊர் மக்களும், சொந்தங்களும் அனைத்து சடங்குகளும் நிறைவேற்றி இறந்த உடலை தூக்க வரும் நேரத்தில் இளைஞர்களால் அவ்வளவு எளிதாக லீலா உடலை தூக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் உடல் கனமாக இருப்பதால்  எவ்வளவு முயற்சி செய்தாலும் யாராலும் தூக்க முடியாததாலும், உடல் அசைவது போல் உணர்வதால் பயந்து போய் அனைவரும் வெளியே வந்து விடுகின்றனர். ஏதாவது தெய்வ குற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்பி பூஜைகள் செய்தாலும் தடங்கல்கள் ஏற்படுகிறது. அதன் பின் கண்கள் மூடியபடியே பிணம் கட்டிலுடன் எழுந்து சுவரோடு ஒட்டி நிற்க கிராம மக்கள் பீதியடைகின்றனர்.பின்னர் மனக்குறை ஏற்படுகிற வண்ணம் ஏதாவது மற்றவர்கள் செய்திருந்தால் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கும்படி சொல்ல, தாய்மாமன், முன்னாள் ஊர் தர்மகர்த்தா, பாட்டி, தந்தை என்று ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள மனஸ்தாபங்களை ஒப்புக்கொண்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றனர். இறுதியில் லீலாவின் உடலை எடுத்து சென்று புதைக்க முடிந்ததா? லீலா ஏன் இறந்த பின்னும் ஊர் மக்களை பயமுறுத்துகிறார்? எதற்காக? லீலா என்ன சொல்ல வருகிறார்? லீலாவின் காதல் என்னவானது? அண்ணன் முத்து கிரீடத்தை மறுபடியும் கோயிலில் வைத்தானா? என்பதே படத்தின் கதை.

எமகாதகி லீலாவாக புதுமுகம் ரூபா கொடுவாயூர் எளிய கிராமத்து முகம், பிடிவாத குணம், தவறு செய்பவர்களை மன்னிக்க மறுக்கும் சுபாவம், சுவாச பிரச்சனை நிறைந்த காட்சிகளில் இயல்புடனும், திடீரென்று தற்கொலை செய்து கொண்டு பிணமாக நடிக்கும் காட்சிகளில் முதலில் சாதாரணமாக தோன்றினாலும், பின்னர் அந்த உடலைப் பார்த்து ஏற்படும் பயம் இறுதி வரை நீடிக்கிறது. இறந்ததற்கான காரணத்தையும், எப்படி இறந்தார் என்பதையும் மறைத்து சொல்லும் குடும்பத்தினரையும் அவர்களின் உண்மை முகத்தையும் ஊர் மக்களிடம் காட்டி விட்டு அமைதி ஆகும் நொடியில் தன் உடல் மொழியாலும், அமைதியான நடிப்பால் மெய் சிலிர்க்க வைக்கிறார்.

அம்மா சந்திராவாக கீதா கைலாசம் படபடவென்று மகளை கண்டிப்பதாகட்டும், மகளின் இறப்பை தாங்க முடியாமல் திக் பிரமை பிடித்து புலம்புவதாகட்டும், இறுதியில் மகளின் விருப்பத்தை அறியாமல் போய் தவறு செய்துவிட்டோமே என்று புலம்ப, மகளின் சடலம் அவரது கையில் விழும் நொடி தாயின் பாசத்தில் நெகிழ வைத்துவிடுகிறார்.

ஊர் தர்மகர்த்தா மற்றும் தந்தை செல்வராஜாக ராஜு ராஜப்பன் புதுமுகம் என்றாலும் அவரின் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு முக்கிய தருணங்களில் கை கொடுத்துள்ளது.

மகன் முத்துவாக சுபாஷ் ராமசாமி இரட்டை வேடம் போட்டு குள்ளநரி தந்திரத்துடன் நடித்திருப்பது சிறப்பு.

அப்பாவி நிறைமாத கர்ப்பிணி மருமகள் பிரேமாவாக ஹரிதா, லீலாவின் காதலன் அன்புவாக நரேந்திர பிரசாத் இறுதிக் காட்சியில் வந்தாலும் காதலியின் இறப்பை தாங்க முடியாமல் தவிக்கும் இடங்களில் சிறப்பு.

முத்துவின் நண்பர்கள், ஊர் மக்கள், காதலர் குடும்பத்தினர் என காட்சிகள் விரிவடையும் போது அனைவரும் கிராமத்து நேர்த்தியுடன் அசாத்திய நடிப்புத்திறனை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

அசம்பாவிதம் நடந்த வீடு, வயல்வெளி, கோயில், மற்றும் கிராமத்து தெருக்கள் என்று குறுகிய வட்டத்திற்குள் கதைக்களம் பயணித்தாலும் அசர வைக்கும் காட்சிக் கோணங்களும் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளுக்கு கூடுதல் மெருகு சேர்த்துள்ளது.

ஜெசின் ஜார்ஜ் இசை கதைக்கு புதுவித அனுபவத்தை கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஸ்ரீஜித் சரங்கின் எடிட்டிங் மற்றும் கலரிங் படத்தின் தத்ரூபமான காட்சிகளை புரியும்படி கொடுத்திருப்பது படத்திற்கு பெரும் பலம். கலை இயக்குனர்: பி ஜோசப் பாபின், ஸ்டண்ட் இயக்குனர்: முரளி ஜி ஆகியோரின் பணி கவனிக்க வைத்துள்ளது.

எஸ் ராஜேந்திரன் வசனங்களில் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். ஆணவக் கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தை எந்த வகையில் சுவாரஸ்யமாக கொடுக்கலாம் என்பதை தன்னுடைய புதிய அணுகுமுறை திரைக்கதையால் மெய்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். இறப்பில் இருக்கும் மர்மத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர எடுக்கும் முயற்சியில் எத்தனை பேரின் சூழ்ச்சியும், துரோகமும் நிறைந்திருக்கிறது என்பதை யோசித்து உணர்ச்சிகளின் போராட்டங்களை திறம்பட வகுத்து, ஊர் மக்களின் பேச்சையும், எண்ணத்தையும் பிரதிபலித்து, மெல்லிய நகைச்சுவைக்கு நடுவே குடிகாரன் வந்து கிண்டலடித்து விட்டு செல்வது, பின்னர் இருக்கும் ஒரு தலைக்காதல், உண்மையான காதல், காதலை குடும்பத்தாரிடம் தெரிவிக்க முடியாமல் தவிப்பது என்று ஏகப்பட்ட கிராமத்து மக்களுடன் திகிலாக, அசத்தலாக, விறுவிறுப்பாக கொடுத்து கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். தேர்ந்த புதுமுக நடிகர்கள், சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள், புதிய கோணத்தில் திரைக்கதையை அமைத்து பெண்களுக்கு நடக்கும் அநீதி, சாதி பாகுபாடு கலந்து பல திருப்பங்களை கொடுத்து அசத்தியுள்ளார் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். பாராட்டுக்கள்.

தந்தையின் ஆசையை நிறைவேற்றவும், தந்தை பெயரால் தயாரித்திருக்கும் மகனின் பாசமும் நேசமும் பெருபெற்றியை பெற்றுத்தரும் படம் எமகாதகி.

மொத்தத்தில் நைசாட் மீடியா வொர்க்ஸ் சார்பில் சீனிவாசராவ் ஜலகம் தயாரித்திருக்கும் எமகாதகி சிலிர்க்க வைக்கும் திகில், த்ரில் அனுபவத்தை மறைந்தும் தரும் சண்டிராணி.