சப்தம் சினிமா விமர்சனம் : சப்தம் ஹாரர் த்ரில்லர் காதுகளில் ரீங்காரமிடும் ஒலி கலவையில் சிதற வைத்து புதிய அனுபவத்தில் அதிர வைக்கும் | ரேட்டிங்: 3.5/5

0
602

சப்தம் சினிமா விமர்சனம் : சப்தம் ஹாரர் த்ரில்லர் காதுகளில் ரீங்காரமிடும் ஒலி கலவையில் சிதற வைத்து புதிய அனுபவத்தில் அதிர வைக்கும் | ரேட்டிங்: 3.5/5

 

7ஜி பிலிம்ஸ் சார்பில் 7ஜி சிவா, ஆல்பா பிரேம்களுடன் இணைந்து ரெவான்சா குளோபல் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், டி3 ஸ்ட்ரீமிங் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் சப்தம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிவழகன்.

இதில் ரூபனாக ஆதி, அவந்திகாவாக லட்சுமி மேனன், டயானாவாக சிம்ரன், நான்சி டேனியல் ஆக லைலா, ஆரோக்கியமாக ரெடின் கிங்ஸ்லி, ஆன்டனியாக எம்.எஸ். பாஸ்கர், டேனியலாக ராஜீவ் மேனன், தீபக்காக விவேக் பிரசன்னா, அம்மாவாக அபிநயா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – தமன், ஒளிப்பதிவு – அருண் பத்மனாபன்,எடிட்டிங் – சாபு ஜோசப், கலை இயக்கம் – மனோஜ்குமார், ஸ்டண்ட் – ஸ்டன்னர் சாம், இணை தயாரிப்பாளர்: எஸ்.பானுப்ரியா சிவா, பாடலாசிரியர் – விவேகா, மிக்சிங் -உதய் குமார், டிஐ: பிக்சல் லைட் ஸ்டுடியோ, வண்ணவியலாளர்: ரங்கா, உடை வடிவமைப்பாளர்கள்: சோனிகா குரோவர்ஃ பிரதீபா, ஒப்பனை: சண்முகம், மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் (எஸ்2 மீடியா)

மூணாரில் புகழ்மிக்க செயிண்ட் ஏஞ்சல்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஒரு ஆண், பெண் இரண்டு மருத்துவர்கள் ம​ர்மமான முறையில் தற்கொலைகள் செய்து கொள்கின்றனர். இறப்பதற்கு முன்னர் அவர்கள் வித்தியாசமாக நடந்து கொண்டனர் என்பதும், காதுகளில் இறைச்சலான சத்தத்தையும் உணர்ந்து தாங்க முடியாமல் இறந்தனர் என்பதை டீன் உண்மையான காரணத்தை மறைத்து அமானுஷ்ய வதந்திகளை பரப்பி அனைவரையும் நம்ப வைக்க முயற்சி செய்கிறார். பத்திரிகைகளின் கவனத்தை திசை திருப்ப, நிறுவனத்தின் நற்பெயரைப் பாதுகாக்க 10 நாட்களில் அறிக்கையை வழங்க கேட்கப்படாத ஒலிகளை கண்டறிந்து ஆவிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் வழக்குகளை தீர்ப்பதில் பெயர் பெற்ற மும்பையைச் சேர்ந்த அமானுஷ்ய புலனாய்வாளர் ரூபன் (ஆதி) மருத்துவக் கல்லூரியில் மர்மமான தற்கொலைகள் விசாரிக்க டீனால் பணியமர்த்தப்படுகிறார். இதற்கான முயற்சியில் ரூபன் கல்லூரியில் பல இடங்களில் ஒலி அலைகள் செயல்பாட்டின் கருவிகளை பொருத்தி ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வில் நரம்பியல் உளவியல் பிஎச்.டி மாணவியும் பேராசிரியருமான அவந்திகாவின் (லட்சுமி மேனன்) நடைமுறைகள் முரண்பட்ட மாறுபாடுகளையும், ஒலி அலைகளின் வித்தியாசத்தையும் கண்டறிந்து அவரை விசாரிக்க தொடங்குகிறார். முன்பு ஒரு தேவாலயமாக இருந்த ஒரு பழைய நூலகத்தில் உள்ள விசித்திரமான தொடர்புகளைக் கண்டறியும் போது கல்லூரியை வேட்டையாடுவது 42 மாற்றுத்திறனாளி ஆவிகள் என்ற ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை அவந்திகா மூலம் கண்டுபிடிக்கிறார். 34 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் டேனியலின் (ராஜீவ் மேனன்) மனைவி டயானாவுடன் (சிம்ரன்) தொடர்புடைய 42 ஆவிகள் என்பதை அறிகிறார். எதற்காக இந்த 42 ஆவிகள் கல்லூரியில் மரணத்தை ஏற்படுத்துகின்றன? டயானாவிற்கும் 42 ஆவிகளுக்கும் என்ன தொடர்பு? டயானாவின் ஃபிளாஸ்பேக் என்ன? ரூபன் கண்டுபிடித்த உண்மையால் அங்கே நடக்கும் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா? உண்மையான காரணம் என்ன? என்பதே படத்தின் சப்தங்களுடன் ஐக்கியமாகும் க்ளைமேக்ஸ்.

அமானுஷ்ய புலனாய்வாளராக ரூபன் கதாபாத்திரத்தில் ஆதி மருத்துவ கல்லூரியில் நடக்கும் ஆய்வுகள், கண்டுபிடிக்கும் உண்மைகள், ஒலி அலைவரிசையின் மாற்றங்கள் என்று ஆராய்ச்சிகளில் தனித்திறமையுடன் செயல்பட்டு திடுக்கிடும் உண்மைகளை கண்டறியும் ஆற்றல் மிகுந்த இளைஞராகவும், இசை புலமை மிகுந்தவராகயும், தன் தாயின் மீது கொண்டு அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தி நெகிழும் மகனாகவும் படத்தில் நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார்.

டாக்டர் அவந்திகாவாக லட்சுமி மேனன் புரியாத புதிரான மருத்துவ ஆய்வாளராக, ஆவிகளிடம் மாட்டிக் கொண்டு தவித்து கதறும் போதும், அங்கே நடக்கும் சம்பவங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் முழு பங்களிப்பை கொடுத்துள்ளார்.

முன்னாள் கல்லூரி முதல்வர் டயானாவாக சிம்ரன் மனிதநேய மிக்க பெண்மணியாக, கோமாவில் சுயநினைவு இழந்து தவறான சிகிச்சை முறையில் சிக்கிக் கொள்ளும் போதும் உணர்ச்சிகரமான நடிப்பில் மிளிர்கிறார். சிறப்பு தோற்றத்தில் நான்சி டேனியலாக லைலா, கல்லூரி நிறுவனர் டேனியல் (ராஜீவ் மேனன்), தீபக் (விவேக் பிரசன்னா), ஆரோக்கியம் (ரெடின் கிங்ஸ்லி), அம்மாவாக அபிநயா மற்றும் ஆண்டனி (எம்.எஸ்.பாஸ்கர்) மற்றும் பலர் படத்தின் அனைத்து காட்சிகளுக்கும் வலுவான பங்களிப்பை கொடுத்து அசத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாதன், இசையமைப்பாளர் தமன் எஸ், கலை இயக்குனர் மனோஜ் குமார் மற்றும் ஒலி வடிவமைப்பாளர் ஆகிய திறமைமிக்க தொழில்நுட்ப கலைஞர்;களின் உழைப்பும், காட்சிகளை செதுக்கிய விதமும் ஒலி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு கூடுதல் பலத்தை கொடுத்து படத்தை தாங்கி பிடித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, சப்தம் ஒரு உணர்ச்சிபூர்வமான திகில் கலந்த பழிவாங்கும் அமானுஷ்யம் கலந்த ஒலி கலவைகளின் சங்கமமாக முக்கிய பார்வையாளர்களை ஈர்க்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிவழகன். ஈரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”.சில இடங்களில் படத்தில் தோய்வாக செல்லும் திரைக்கதை மற்றும் முக்கியமான தருணங்களில் தாக்கத்தை பெரிதாக ஏற்படுத்தாமல் தடுமாறுகிறது. திகில் ஆர்வலர்கள் சில அம்சங்களைப் பாராட்டக்கூடும் என்றாலும், படம் தொடர்ந்து பரபரப்பான அனுபவத்தை வழங்குவதில் பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இசையைப் பயன்படுத்தும் நல்ல சக்திகளுக்கும் இருண்ட அறிவியலால் அதிகாரம் பெற்ற தீய சக்திகளுக்கும் சத்தத்தின் குழப்பத்திற்கும் இடையே உடலுக்கு வெளியே அனுபவங்கள், ஆழ் உணர்வு மற்றும் பிற்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை இணைக்கும் சுவாரஸ்யமான தருணங்கள், ஒலி மற்றும் அதன் வடிவங்கள், இசை மற்றும் சத்தம் போன்றவை, இறக்காதவர்கள் இயற்பியல் உலகத்துடன் தொடர்புகொள்வதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுவது, பல கருப்பொருள் விளக்கங்களுக்கு இந்தப் படத்தில் தெளிவாக ஃபிளாஷ்பேக் காட்சிகளில் விவரிக்கப்பட்டிருப்பதில் போதிய வெற்றியை பெற்றுள்ளார் இயக்குனர் அறிவழகன்.

மொத்தத்தில் 7ஜி சிவா தயாரித்துள்ள சப்தம் ஹாரர் த்ரில்லர் காதுகளில் ரீங்காரமிடும் ஒலி கலவையில் சிதற வைத்து புதிய அனுபவத்தில் அதிர வைக்கும்.