சுழல் 2 வோர்டெக்ஸ் வலைத் தொடர் விமர்சனம் : சுழல் சீசன் 2 க்ரைம் சூறாவளியால் அஷ்ட திக்கையும் புரட்டி போடும் த்ரில்லிங் அனுபவம் | ரேட்டிங்: 3.5/5
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் சார்பில் எழுத்து – உருவாக்கம் புஷ்கர் – காயத்ரி, சுழல் வோர்டெக்ஸ் சீசன் 2வின் எட்டு தொடரை இயக்கியவர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம். இது தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினலில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இதில் கதிர் – சக்கரை, ஐஸ்வர்யா ராஜேஷ் – நந்தினி, லால் – செல்லப்பா, சரவணன் – மூர்த்தி, மஞ்சிமா மோகன் – நாகம்மா, கயல் சந்திரன் – ரவி, கௌரி கிஷன் – முத்து, சம்யுக்தா விஸ்வநாதன் – நாச்சி, மோனிஷா பிளெஸ்சி – முப்பி, ஷிரிஷா-வீரா, அபிராமி போஸ் – செண்பகம், நிகிலா சங்கர் – சந்தனம், ரினி – காந்தாரி, கலைவாணி பாஸ்கர் – உலகு, சாந்தினி தமிழரசன் – பிரியம்வதா, அஸ்வினி நம்பியார் – மாலதி, அர்ஷ்ய லக்ஷ்மன் – சரோஜா, ஓ.ஏ.கே.சுந்தர் – திருவேங்கடம், பாண்டி ரவி – எம்எல்ஏ அரசு ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு :-இசை : சாம் சி எஸ், ஒளிப்பதிவு : ஆபிரகாம் ஜோசப், படத் தொகுப்பு : ரிச்சர்ட் கெவின், சண்டை பயிற்சி : தினேஷ் சுப்பராயன் – திலீப் சுப்பராயன் – மிரக்கிள் மைக்கேல், ஆடை வடிவமைப்பு : சுபஸ்ரீ கார்த்திக் விஜய், மக்கள் தொடர்பு- யுவராஜ்.
சுழல் முதல் பாகத்தில் சாம்பலூர் கிராமத்தில் நந்தினியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) தங்கைக்கு உறவினராலேயே பாலியில் வன்கொடுமை நடக்க, அதன் பின் தங்கை இறக்க காரணமான அந்த உறவினரை சுட்டுக் கொலை செய்யும் நந்தினி சாட்டையூர் சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் எடுத்துச் சென்று கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி நண்பர் எஸ்ஐ சக்கரவர்த்தியுடையது (கதிர்). சுழல் 2ம் பாகத்தில் இந்த விசாரணை சாம்பலூரிலிருந்து காளிப்பட்டணத்தில் நடந்தப்படுகிறது. இருவரது வழக்கையும் வழக்கறிஞர் செல்லப்பா (லால்) எடுத்து நடத்துகிறார். அங்கே அந்த சமயத்தில் அஷ்ட காளி திருவிழா ஏற்பாடுகள் தடபுடலாக செல்லப்பா தலைமையில் நடைபெறுகிறது. ஏற்கனவே செல்லப்பா வளர்ப்பு தந்தை என்பதால் சக்கரை அவர்; வீட்டில் தங்குகிறார். இதனிடையே எதிர்பாராத விதமாக செல்லப்பா தன்னுடைய கெஸ்ட் ஹவுஸ் பங்களாவில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறார். இந்த கொலையை விசாரிக்க சக்கரை வழக்கு விசாரணையில் இருந்தாலும் செல்லப்பாவிற்கு நெருங்கியவர் என்பதால் இன்ஸ்வெஸ்டிகேஷன் ஆபிசராக நியமிக்கப்படுகிறார். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மூர்த்தி (சரவணன்) இறந்த செல்லப்பாவிடம் மோதலில் இருந்ததால் இந்த வழக்கை விசாரிக்கும் சக்கரைக்கு வழக்கில் இணைந்து வேண்டிய உதவிகளை செய்ய உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அந்த கெஸ்ட் ஹவுஸ் பங்களாவில் பூட்டிய மர அலமாரி அறையில் முத்து(கௌரி கிஷன்) துப்பாக்கியுடன் இருப்பதை கண்டுபிடித்து கைது செய்யப்படுகிறார். இவரின் கைது ஊடகங்கள் மூலம் வெளியே தெரிய வர இவரைப் போன்று வௌ;வேறு ஊர்களிலிருந்து காவல் நிலையத்தில் ஏழு பேர் தனித்தனியாக செல்லப்பாவை தாங்கள் தான் கொன்றோம் என்று வாக்குமூலம் கொடுத்து சரணடைகின்றனர். மொத்தமாக எட்டு பெண்களையும் சாட்டையூர் சிறைச்சாலையில் நந்தினி இருக்கும் சிறையிலேயே அடைக்கப்படுகின்றனர். இவர்கள் எட்டு பேரும் யார்? இவர்கள் ஏன் ஒரே மாதிரி செல்லப்பாவை கொன்றதாக ஒப்புக் கொள்கிறார்கள்? இவர்களின் நோக்கம் என்ன? இவர்களுக்கும், செல்லப்பாவிற்கும் நாகம்மா என்ற பெண்ணிற்கும் உள்ள தொடர்பு என்ன? நாகம்மா யார்? நந்தினி இந்த பெண்களுக்கு உதவி செய்தாரா? இவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை நந்தினி கண்டுபிடித்தாரா? மூர்த்தி சக்கரைக்கு ஒத்துழைப்பு இந்த வழக்கில் கொடுத்தாரா? அந்த எட்டு பெண்களும் தேடிக் கொண்டிருக்கும் அரக்கனை கண்டுபிடித்து அழித்தார்களா? யார் உண்மையான குற்றவாளி? என்பதே எட்டு வலை தொடர்களின் விடைக்கான விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.
சுழல் இரண்டாவது பாகத்திலும் கதிர் சக்கரை என்கிற சக்கரவர்த்தியாக விசாரணை காவல் அதிகாரியாக படம் முழுவதும் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தான் எடுக்கும் முடிவு மாறுபட, அதற்கான விடையை தேடி ஒடும் இளைஞனாக, செல்லப்பா என்ற உயர்ந்த மனிதனின் வாழ்க்கையும், அவரின் சமூக அக்கறை கலந்த நோக்கத்தையும், கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள், எட்டு பெண்களிடமிருந்து தனக்கு வேண்டிய தகவல்களை பெற முடியாமல் தவிக்கும் தவிப்பு, இறுதியில் குற்றவாளியை சாமர்த்தியமாக கண்டுபிடிப்பது என்று அழுத்தமான தன்னுடைய மேம்பட்ட நடிப்பால் கவர்கிறார்.
வக்கீல், சமூக ஆர்வலர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் சிறந்த மனிதராக லால். அவரின் திரையிருப்பு முதலில் மாறுபட்ட கண்ணோட்டத்தில் செல்லும் கதைக்களம் பின்னர் இவரின் செயல்கள் தெரியவரும் போது ஏற்படும் நிம்மதி பெருமூச்சு படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுப்பதோடு, தொடர் முழுவதும் இவரின் கொலையை மையப்படுத்தி வரும் காட்சிகளில் தனித்து நின்று பெருமை சேர்க்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நந்தினியாக இரண்டாவது பாகத்திலும் தண்டனை பெற்ற கைதியாக வருகிறார். இவரின் மூலம் தான் எட்டு பெண்களைப் பற்றிய தகவலும், முக்கிய குற்றவாளி நெருங்கும் மையப்புள்ளியாக படத்தில் வந்து தன்னுடைய முழு பங்களிப்பை கொடுத்து அசத்தியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் மூர்த்தியாக நய்யாண்டி, நக்கல் கலந்து பேசி சக்கரையை வெறுப்பேற்றுவதும், பின்னர் வழக்கில் உதவுவது போல் அனைத்தையும் தெரிந்து கொண்டு விசாரணையை கைவிட வற்புறுத்துவதும், படத்தில் இயல்பான நடிப்பின் மூலம் அனைவரும் எதிர்பாராத திருப்பத்திற்கு முன்னோடியாக வந்து படத்திற்கு ப்ளஸ்சாக அமைந்திருப்பது படத்திற்கு உயிர்நாடி.
முத்தாரம்மன் (முத்து), வீரகாளியம்மன் (வீரா), முப்பிடாரி (முப்பி), உலகநாயகி (உலகு), அரியநாச்சி (நாச்சி), செண்பகவள்ளி (செண்பகம்), சந்தனமாரி (சந்தனம்), காந்தாரி என 8 பெண்களுக்கு அஷ்ட காளிகளை அடையாளப்படுத்தும் 8 பெண்களாக கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா வயோலா விஸ்வநாதன், ரினி, ஸ்ரீஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
மஞ்சிமா மோகன் நாகம்மாவாகவும், கயல் சந்திரன் ரவியாக மீனவ தம்பதிகளாக ஒற்றுமையாக அன்போடு வாழ்வதும், அவர்கள் வாழ்வில் ஏற்படும் சம்பவம் எப்படி நாகம்மாவை மாற்றி எட்டு பெண்களிடம் கொண்டு சேர்கிறது என்பது தொடரின் முக்கியப்புள்ளியாக அமைந்துள்ளது. சாந்தினி தமிழரசன் – பிரியம்வதா, அஸ்வினி நம்பியார் – மாலதி, அர்ஷ்ய லக்ஷ்மன் – சரோஜா, ஓ.ஏ.கே.சுந்தர் – திருவேங்கடம், பாண்டி ரவி – எம்எல்ஏ அரசு ஆகியோர் கதைக்களத்திற்கு தேவையான முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
சாம் சி எஸ் தன்னுடைய பின்னணி இசையால் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை திருவிழா மற்றும் க்ரைம் சம்பந்தபட்ட படபடவைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து அசத்தியுள்ளார்.
சிறைச்சாலை, பங்களா, காவல் நிலையம், எட்டு பெண்களின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் என்று ஒரு பக்கம் கிரைம் மிஸ்டரி கதை விறுவிறுப்பாக செல்ல, இன்னொரு பக்கம் மக்கள் திரண்டு கொண்டாடும் அஷ்டகாளி வடிவங்கள் கொண்ட திருவிழா காட்சிகள் கண்கொள்ளா காட்சிகளாக கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப்.
சுழல் சீசன் 1ல் மயானகொள்ளை திருவிழாவின் பல்வேறு அம்சங்களையும் உள்@ர் கலாச்சாரத்தின் கூறுகளையும் காண்பிக்கும் ஒரு அழகான சூழ்நிலையை உருவாக்கி தந்தது. சுழல் சீசன் 2 தொடரின் அத்தியாயங்களை இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம். இயக்கியுள்ளனர். மேலும் கொலை, மர்மம், சிறைச்சாலை காவல் நிலையம் மற்றும் பல அம்சங்களில் கவனம் செலுத்தி போலீஸ் விசாரணை தொடராக அமைந்துள்ளது. சுழல் சீசன் 2 அஷ்டகாளி திருவிழாவை மையப்படுத்தியதால் தொடரில் எட்டு பெண்கள் என்று சித்தரித்து காளிப்பட்டணத்தில் மையப்படுத்தி தீய அரக்கனைக் கொல்ல எட்டு அஷ்டகாளிகள் ஒன்றுகூடி அழிக்கும் திருவிழா என்பதை எட்டு தொடரில் கொடுத்துள்ளனர் இயக்குனர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம். சில தொடர்கள் விறுவிறுப்பாக சென்றாலும் எட்டு பெண்களைப் பற்றிய விசாரணைகள் மந்தமாக காட்டப்பட்டுள்ளன, அதிலும் சிறைச்சாலைக்குள் அனைவரும் சுதந்திரமாக இஷ்டம் போல் எந்நேரமும் சுற்றித் திரிந்து கொண்டிருப்பது போல் காட்டியிருப்பது மைனஸ். இறுதியில் க்ரைம் கலந்த திருவிழா கொண்டாட்டத்தை பிரம்மாண்டமாக கண்களுக்கு அற்புத விருந்தாக படைப்பை கொடுத்திருக்கும் புஷ்கர் – காயத்ரி இருவருக்கும் பாராட்டுக்கள்.
மொத்தத்தில் வால்வாட்சர் ஃபிலிம்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் சார்பில் சுழல் சீசன் 2 க்ரைம் சூறாவளியால் அஷ்ட திக்கையும் புரட்டி போடும் த்ரில்லிங் அனுபவம்.