ராமம் ராகவம் சினிமா விமர்சனம் : ராமம் ராகவம் பாசமிகு தந்தையின் தியாகம் மெய் சிலிர்த்து உருக வைத்து மனதை தொடும் | ரேட்டிங்: 2.5/5
ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் சார்பில் ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படத்தில் ‘ராமம் ராகவம்’. இப்படத்தை ஜிஆர்ஆர் மூவிஸ் சார்பில் ரகு தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
இதில் சமுத்திரக்கனி, பிரமோதினி, தன்ராஜ் கொரனானி, மோக்ஷா, சுனில், ஹரிஷ் உத்தமன், சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை : அருண்சிலுவேறு,ஒளிப்பதிவு : துர்கா கொல்லிபிரசாத், பாடல்கள் : யுகபாரதி, முருகன்மந்திரம், திரைக்கதை இயக்கம் : தன்ராஜ் கொரனானி, மக்கய் தொடர்பு : குணா
கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அனுபவமிக்க அதிகாரியான தசரத ராமன் (சமுத்திரகனி) நேர்மைக்கு பெயர் பெற்றவர். அவரது மகன் ராகவன் (தன்ராஜ்) பள்ளி பருவத்திலிருந்தே புகை பிடிப்பது, சொல் பேச்சை மதிக்காமல் வளர்கிறார். சம்பாதிக்கும் வயதில் வேலைக்கு செல்லாமல் கெட்ட பழக்கவழக்கங்கள், சீட்டாடுவது, நண்பனுடன் சேர்ந்து பிசினஸ் செய்ய வீட்டில் பணம் வாங்கி சூதாட்டத்தில் தொலைத்து விட்டு வருவது என்று குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவே ஆசைப்படுகிறான். தந்தைக்கு மகனை நல்லவனாக மாற்ற முயற்சி செய்து பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்கிறார். அங்கேயும் தன் குறுக்கு புத்தியை காட்டி பெட்ரோலை திருட வழிகளை சொல்லி விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்கிறான். அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க சுனிலிடம் பத்து லட்சம் கடன் வாங்கி அதை அடைக்க தன் தந்தையிடம் ஒரு நிலத்தை மாற்றித் தர கையெழுத்து வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுக்கிறான்.சுனிலிடம் சொன்னபடி போலி கையெழுத்தை போட்டு தர, இதை கண்டுபிடிக்கும் தந்தை தசரதராமன், மகன் ராகவனை போலீசிடம் ஒப்படைத்து எச்சரித்து விட்டுவிடுமாறு கோரிக்கை விடுக்கிறார். இதனால் கடும் கோபத்தில் இருக்கும் ராகவன் வெளியே வந்த பிறகு தன் தந்தையை கொல்ல தனது நண்பரான லாரி ஓட்டுநர் தேவா (ஹரிஷ் உத்தமன்) உதவியை நாடுகிறான். தந்தையை விபத்தை ஏற்படுத்தி கொன்றால் தனக்கு தந்தையின் வேலையும், இன்சூரன்ஸ் பணமும் வரும் அதில் தேவாவுக்கு சொந்தமாக லாரி வாங்க பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை காட்டி தந்தையை கொல்ல சம்மதம் வாங்குகிறான். அதன் பிறகு நல்ல மகன் போல நடித்து பாண்டிச்சேரிக்கு தனியாக செல்லும் தந்தையை தீர்த்துக்கட்ட தேவாவிற்கு திட்டம் வகுத்து கொடுக்கிறான். அதன் பின் தந்தை தசரதராமனை தேவா திட்டம் தீட்டியது போல் கொலை செய்தாரா? ராகவனின் எண்ணம் நிறைவேறியதா? மகனின் திட்டத்தை அறிந்த தந்தை தசரத ராமர் என்ன செய்தார்? தந்தையின் பாசம் வென்றதா? மகனின் தீய எண்ணம் நிறைவேறியதா? என்பதே படத்தின் கனமான க்ளைமேக்ஸ்.
நல்ல தந்தையாக சமுத்திரகனி தசரத ராமனாக மிளிர்கிறார். தன் மகனை திருத்த முயலும் காட்சியில் இயல்பாக நடித்து, இறுதிக் காட்சியில் அவரின் பன்பட்ட நடிப்பு சிறப்பு. நேர்மையான தசரத ராமரைப் பார்க்கும்போது, அவர் அந்தக் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு கச்சிதமாகப் பொருந்துகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
நெகடிவ் கதாபாத்திரத்தில் மகன் ராகவனாக நடித்திருக்கும் இயக்குனர் தன்ராஜ், கதைக்கேற்ப பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளார். ஒரு தந்தைக்கு மகனாக இப்படி யாரும் இருக்கக்கூடாது என்று நினைக்கும் அளவிற்கு கல் நெஞ்சம் நிறைந்த மகனாக கடைசி வரை இருந்து, பச்சோந்தியாக நடித்து, இறுதியில் தந்தையின் டைரியை படித்த பின் ஏற்படும் மாற்றம் அதன் பின் எடுக்கும் முடிவு படத்தின் கதைக்கு ப்ளஸ்.
அன்பான மனைவி, பாசக்கார தாயாக பிரமோதினி கணவன் மற்றும் மகன் இருவருக்கிடையே மாட்டிக் கொண்டு முழித்து, மகனுக்காக உருகுவது, கணவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருப்பது, இறுதி காட்சியில் கதறித் துடிக்கும் இடங்களில் கண் கலங்க வைத்து விடுகிறார். மகனின் குணத்தை அறியாத அப்பாவி தாயாக காட்டியிருப்பது சிறப்பு.
ஹரிஷ் உத்தமன் லாரி டிரைவர் தேவாவாக நண்பன் தன்ராஜிற்கு ஆதரவு கரமாக உறுதுணையாக இருப்பதும், சிறு சபலத்தில் கொலை செய்ய அளவிற்கு செல்லும் துணிச்சலும், அதன் பின் இவர் ஏற்படுத்தும் திருப்பம் தான் படத்திற்கு முக்கியமான திருப்புமுனை.
மோக்ஷா, சுனில், சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் சில காட்சிகள் என்றாலும் பரவாயில்லை ரகம்.
இது தன்ராஜின் முதல் படம் என்பதால் முழுப் பொறுப்பையும் தொழில்நுட்பக் குழுவான சிவ பிரசாத்தின் கதை, மார்த்தாண்ட் கே வெங்கடேஷின் படத்தொகுப்பு, துர்கா கொல்லி பிரசாத்தின் ஒளிப்பதிவு, அருண் சிலுவேருவின் இசை, யுகபாரதி, முருகன்மந்திரம் பாடல்கள் என்று படத்தை தாங்கி பிடித்து இயக்குனர் தன்ராஜிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதில் தன்ராஜ் நடித்தும் இயக்கியிருக்கும் ராமம் ராகவம் படத்தில் கதைதான் நாயகன். இது வழக்கமான படங்களைப் போல சண்டைகள், பாடல்கள் நிறைந்த கதைக்களம் அல்ல. கதைக்குத் தேவையில்லாத எந்த ஒரு அம்சத்தையும் இயக்குனர் தன்ராஜ் திணிக்கவில்லை. இயக்குனரின் திறமையே ஒரு வழக்கமான கதையை புதிய கோணத்தில் புதிய முறையில் முன்வைப்பதில்தான் இருக்கிறது. தந்தைக்கு மகன் மீதுள்ள பாசத்தையும்;, மகன் அதை வெறுப்பாக மாற்றியதையும், இறுதியில் அது எப்படி மனதை மாற்றியது என்பதையும் இயக்குனர் தனராஜ் கொரானி திருப்பங்களுடன் உணர்வுபூர்வமாக சித்தரித்துள்ளார். ‘உன்னைப் போல ஒரு அப்பா யாருக்கும் இல்லை.. என்னைப் போல ஒரு மகன் யாருக்கும் இருக்கக்கூடாது’ என்பது தான் படத்தின் மனதைத் தொடும் ஒற்றை வசனம். படத்தின் முழு மைய உணர்ச்சியும் இந்த உரையாடலைச் சுற்றியே சுழல்கிறது. தசரதரின் வார்த்தைகளைக் கேட்டு, ராமர் காட்டுக்குச் சென்றார்.. அதுதான் ராமாயணம். ராகவாவின் வார்த்தைகளைக் கேட்டு ராமர் எவ்வளவு தூரம் சென்றார் என்பதுதான் ‘ராமம் ராகவம்’ திரைப்படம். ‘ராமம் ராகவம்’ என்பது ராமனைப் போன்ற ஒரு தந்தைக்குப் பிறந்த ஒரு மூர்க்கனின் கதை. தந்தை-மகன் பிணைப்பை ஒரு புதிய முறையில் சித்தரிக்க தன்ராஜ் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. இறுதியில் மகனை கொலையாளியாக பார்க்க கூடாது என்று தந்தை எடுக்கும் முடிவு, சாகும் வரை மனஉளைச்சல், உறுத்தலுடன் மகனுக்கு கொடுக்கும் தண்டனை தான் படத்தின் ஹைலைட்ஸ்.
மொத்தத்தில் ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் சார்பில் ப்ருத்வி போலவரபு தயாரித்திருக்கும் ராமம் ராகவம் பாசமிகு தந்தையின் தியாகம் மெய் சிலிர்த்து உருக வைத்து மனதை தொடும்.