நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் சினிமா விமர்சனம் : நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இளசுகளின் இளமை துள்ளும் யூ டர்ன் காதலின் ரிங்டோன் | ரேட்டிங்: 4/5
வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா இணைந்து தயாரித்திருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மகன் தனுஷ்.
இதில் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பி.வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்தா ஷங்கர், ராபியா கதூன், ஆர்.சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை : ஜி.வி பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு : லியான் பிரிட்டோ, படத்தொகுப்பு : பிரசன்னா ஜி.கே, கலை இயக்கம் : ஜாக்கி, நடன இயக்கம் : பாபா பாஸ்கர், ஆடை வடிவமைப்பு : காவ்யா ஸ்ரீராம், ஆடைகள் : நாகு, ஒப்பனை : பி ராஜா, ஒலி வடிவமைப்பு : ஸிங்க் சினிமா, தயாரிப்பு நிர்வாகி : டி. ரமேஷ் குச்சிராயர், நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் ஸ்ரீனிவாசன், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ்
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் நரேன் மற்றும் சரண்யா பொன்வண்ணன் அவர்களது மகன் பிரபு( பவிஷ் நாராயண்). சமையற்கலை படிப்பை படித்துக் கொண்டிருக்கும் பிரபு காதல் தோல்வியால் துவண்டிருக்க, மகனின் மனதை மாற்ற அவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அவருக்கு இன்பத்திலும், துன்பத்திலும் பக்கபலமாக இருக்கும் அவரது சிறந்த நண்பர் ராஜேஷ் (மேத்யூ தாமஸ்). இதனிடையே பெற்றோர்கள் பிரபுவை வற்புறுத்தி பெண் பார்க்க அழைத்துச் செல்லும் இடத்தில் தன்னுடன் படித்த ப்ரீத்தி (பிரியா வாரியர்) தான் மணப்பெண் என்பதை அறிகிறார். பள்ளி நண்பர்கள் என்பதால் சில நாட்கள் பழகி இருவரும் புரிந்து கொண்டு திருமணம் செய்வதை பற்றி யோசிக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். இவர்களின் பழக்கம் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு செல்ல, அந்த நேரத்தில் பிரபுவிற்கு தன் முன்னாள் காதலியின் திருமண அழைப்பிதழ் வருகிறது. அதைப் பார்த்தவுடன் சோகமாகும் பிரபுவை சந்திக்கும் ப்ரீத்தி பழைய காதலி நிலாவின் பிரேக் அப் பற்றி கேட்கிறார். அதன; பின் பிரபு தன் சோக காதல் கதையை விவரிக்கிறார். பிரபுவின் நண்பன் வெங்கடேஷ் மேனன் மற்றும் அவனுடைய மனைவி ரபியா காதூனின் விருந்திற்கு செல்லும் போது நிலா(அனிகா சுரேந்திரன்)வை சந்திக்கிறார். சாப்பாட்டு பிரியையான நிலா பிரபுவின் சமையல் நிபுணத்துவத்தை புகழ்ந்து சாப்பிடுகிறார். இதனால் இருவருக்குள்ளும் நட்பாக ஆரம்பித்து பின்னர் காதலாக முடிகிறது. இந்நிலையில் தங்கள் காதலை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த முடிவு செய்கின்றனர். பிரபுவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க, நிலாவின் தந்தை பெரும் பணக்கார தொழிலதிபர் சரத்குமார் எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிரபுவை அவமானப்படுத்தி அனுப்புகிறார். பின்னர் நிலாவின் பிடிவாதத்தால் பிரபுவிடம் சில நாட்கள் பழகி பார்த்து விட்டு தன்னுடைய சம்மதத்தை சொல்கிறேன் என்று சரத்குமார் சொல்கிறார். அதன் பிறகு பிரபு, சரத்குமார் இருவருக்குள்ளும் வெறுப்பே பிரதானமாக இருக்கும் நேரத்தில், சரத்குமாருக்கு கேன்சர் என்பதையறிந்து கொள்ளும் பிரபு அதிர்ச்சியாகிறார். சரத்குமாரின் விருப்பப்படி நிலாவை விட்டு பிரிந்து செல்கிறார். நிலாவும் காரணம் தெரியாமல் பிரபுவிடம் சண்டையிட்டு பிரிந்து செல்கிறார். அதன் பின் நிலாவிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது. இதனை கேள்விப்படும் ப்ரீத்தி பிரபுவின் முன்னால் காதலி திருமணத்திற்கு சென்று வந்த பிறகு திருணத்தை பற்றி முடிவு எடுக்கலாம் என்று சொல்லி அனுப்புகிறார். பிரபுவும் தன் உயிர் நண்பரான சுரேஷ{டன் நிலாவின் திருமணத்தில் கலந்து கொள்ள கோவா செல்கிறார். இறுதியில் பிரபுவின் முன்னாள் காதலி திருமணம் நடைபெற்றதா? பிரபு பழைய காதலை மறந்து புதிய காதலியுடன் இணைந்தாரா? அதன் பின் கல்யாண கலாட்டாவில் என்ன நடந்தது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
தனுஷின் அக்கா மகனான பவிஷ் நாராயண் புதுமுகம் என்றாலும் அறிமுக நடிகர் போல் தெரியாமல் அனைத்து காட்சிகளிலும் குறும்பு, நய்யாண்டி, இளமை துள்ளலுடன் காதலில் தோல்வியடைந்தாலும் அதை மறைத்து இன்முகம் காட்டி பின்னர் அழும் சூழலில் யதார்த்தமாக செய்துள்ளார். நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி என்ன செய்தாலும் தனுஷை பார்த்த மாதிரியே அச்சு அசலாக தெரிகிறார். அதனால் வரும் காலங்களில் கூடுதல் முயற்சி செய்தால் தன் அடையாளத்தை மாற்றி நிலைநாட்டலாம்.
நண்பர் ராஜேஷாக வரும் மேத்யூ தாமஸ் சிறந்த தேர்வு. படத்தின் அனைத்து காட்சிகளிலும் புன்னகை மாறாமல் இருக்கும் வண்ணம் வெகுளித்தனம், மனதில் உள்ளதை மறைத்து வெளியே சொல்ல தெரியாமல் தவிக்கும் இடங்களில் தன் தனி திறமையால் சிரிப்புக்கு கியாரண்டி கொடுத்து ஜொலிக்கிறார். பிரபு மற்றும் ராஜேஷ் காம்பினேஷனில் வரும் காட்களில் இருவரின் புரிதலும், டயலாக டெலிவரி, ஒன் லைன் பதில், நண்பர்களின் குறும்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கலக்கியுள்ளனர்.
காதலி நிலாவாக அனிகா சுரேந்திரன் சாப்பாட்டு பிரியையாக, காதல் காட்சிகளிலும், தந்தை மற்றும் காதலன் ஆகிய இருவருக்கும் நடக்கும் வாக்குவாதத்தை தடுத்து சமாதானம் செய்து வைப்பதிலும், காதலனை பிரிந்து சென்று திருமணம் செய்து கொள்ள சென்றாலும், இறுதிக் காட்சியில் உண்மை காரணத்தை அறிந்து உடைந்து அழும் போதும் நச்சென்று செய்துள்ளார்.
இவர்களுடன் தந்தையாக சரத்குமார் மிடுக்கும் பணக்கார திமிருடன் பேசும் தோரணை பின்னர் தன் இறுதி காலங்களில் மகளை விட்டு செல்வதை நினைத்து கலங்கும் காட்சிகளில் கண் கலங்க வைத்துவிடுகிறார். நரேன், சரண்யா பொன்வண்ணன் அனுபவ நடிப்பில் அசத்துகிறார்கள்.
நிலாவின் தோழியாக ரபியா காதூன், திருமண ஒருங்கிணைப்பாளராகவும், காதலர்களை சேர்த்து வைக்க எடுக்க முயற்சி செய்யும் பெண்ணாக ரம்யா ரங்கநாதன், நண்பராக வெங்கடேஷ் மேனன், பிரபுவின் எண்ணங்களை புரிந்து கொள்ளும் வருங்கால மனைவியாகப் போகும் பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் நிலாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் நல்ல மனிதராக சித்தார்தா ஷங்கர் மற்றும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் புதுமுகங்களாக இருந்தாலும் படத்திற்கு ப்ளஸ். ஒரு ஹிட் பாடலுக்கு நடனமாடி அசத்தும் பிரியங்கா மோகனன்.
ஜி.வி.பிரகாஷ் ஒரு அற்புதமான வேலையைச் செய்து பாடல்களிலும், பின்னணி இசையிலும் மேம்பட்ட திறமையை ரசிக்கும் வண்ணம் கொடுத்துள்ளார்.
லியோன் பிரிட்டோவின் புத்துணர்ச்சிய+ட்டும் காட்சிக்கோணங்கள் படத்திற்கு இளமையையும் இனிமையையும் கலந்து வண்ணமயமான பளபளப்பைச் சேர்க்கிறது.
படத்தொகுப்பு : பிரசன்னா ஜி.கே, கலை இயக்கம் : ஜாக்கி, நடன இயக்கம் : பாபா பாஸ்கர், ஆடை வடிவமைப்பு : காவ்யா ஸ்ரீராம், ஆடைகள் : நாகு, ஒப்பனை : பி ராஜா, ஒலி வடிவமைப்பு : ஸிங்க் சினிமா ஆகியோர் படத்தின் காட்சிகளுக்கு ஃபிரஷ் ஃபீலிங்கை கொடுத்து வித்தியாசமான அனுபவத்தை உணர செய்துள்ளனர்.
தனுஷ் இயக்கியிருக்கும் மூன்றாவது படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் வழக்கமாக காதல் கதை என்று சொல்லியிருந்தாலும், காதலை புதிய கோணத்தில் இளசுகளின் நாடி துடிப்பை துல்லியமாக கணித்து நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளார். குறிப்பிட்ட சிலரைத் தவிர அனேகமாக அனைத்து நடிகர்களும் புதுமுகங்களாக நட்பு, காதல், பிரிவு, சண்டை, இணைவது என்று தோய்வில்லாமல் முதல் பாதி காதல் கலந்தும் இரண்டாம் பாதி நகைச்சுவையுடனும் காதலின் வலியை சிறப்பாக கையாண்டு இயக்கியுள்ளார் தனுஷ். காதலின் மாறுபட்ட கோணத்தையும், அணுகுமுறையும் இன்றைய காதல் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியும், இரண்டாவது பாகத்திற்கான லீடுடன் முடித்து மேலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார்.
மொத்தத்தில் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா இணைந்து தயாரித்திருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இளசுகளின் இளமை துள்ளும் யூ டர்ன் காதலின் ரிங்டோன்.