செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்தாண்டு திறக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!
சென்னை: குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருப்பதாகவும், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று கட்டுமானத்துறை தொடர்பான கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாநில மக்கள் தொகையில், 48 சதவீதம் மக்கள் நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். இதனால் நாம் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறோம். இது வரும் ஆண்டுகளில் மேலும் உயரும். இதனால், நீடித்து நிலைக்கக்கூடிய வீட்டு வசதிக்கான தேவைகள் அதிகரிக்கும். அதனால் புதுமையான நகரமைப்புத் திட்டங்களை தீட்டவேண்டும்.
சென்னைக்கான மூன்றாவது முழுமைத் திட்டம் திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம்தான் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர பகுதியின் வளர்ச்சியை வழிநடத்தப் போகிறது. அதேபோல்,தமிழகம் முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டலத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.·கோயம்புத்தூர், மதுரை, ஒசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருநெல்வேலியை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
·ஓசூருக்கான முழுமைத் திட்டமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்துக்குள் வெளியிடப்படும்.
·சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய 9 வளர்ச்சி மையங்களான மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், திருப்பெரும்புதூர் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக, புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சுயசான்றிதழ் திட்டம் மூலம் 2500 சதுர அடி கொண்ட மனையிடத்தில் 3500 சதுர அடி கட்டிடப்பரப்பு வரை குடியிருப்புக் கட்டிடங்களுக்கு அனுமதி பெற வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதுநாள் வரை 51 ஆயிரம் கட்டட அனுமதிகள் பெறப்பட்டிருக்கிறது. குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
சென்னை பெருநகர மண்டல போக்குவரத்து தேவைகளை கருத்தில்கொண்டு, தமிழகத்தின் நீண்டகால வளர்ச்சிக்கான இலக்கை அடையும் வகையில் செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கிறது.
சென்னை நீர்முனைய வளர்ச்சி திட்ட நிறுவனம் முதற்கட்டமாக, சென்னை மாநகரில் அமைந்திருக்கும் 12 ஏரிகள் மற்றும் 4 கடற்கரைப் பகுதிகளைத் தேர்வு செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த ரூ.250 கோடி செலவில் திட்டம் தயாரித்திருக்கிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
சென்ட்ரல் கோபுர கட்டிடத்துக்கு அடிக்கல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சமவீத பங்களிப்புடன், கூட்டு முயற்சி அடிப்படையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டுமான பணிகளைச் செயல்படுத்த உள்ளது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் காணொலிகாட்சி வாயிலாக, சென்னை சென்ட்ரல் பகுதியிலுள்ள மத்திய சதுக்க வளாகத்தில் தரை தளம் மற்றும் 27 அடுக்குமாடியுடன் ரூ.350 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள சென்ட்ரல் கோபுரக் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.