ஃபயர் சினிமா விமர்சனம் : ‘ஃபயர்’ தீயவைகளை சுட்டெரிக்கும் மர்ம சுடர் | ரேட்டிங்: 3/5
ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஜேஎஸ்கே இயக்கியிருக்கும் படம் ‘ஃபயர்’.
இதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், ஜேஎஸ்கே சதீஸ், சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி, எஸ்.கே.ஜீவா, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை- டிகே, ஒளிப்பதிவு -சதீஷ் ஜி பாபு , வசனம் எஸ்.கே. ஜீவா,எடிட்டிங்- சி எஸ் பிரேம்குமார், சண்டை-தினேஷ் காசி, கலை-சுசி தேவராஜ், நடனம்-மனஸ், பாடல்கள்- மதுரகவி, ரா, பிஆர்ஒ- நிகில் முருகன்.
காசி என்ற இளைஞனின் ஏமாற்று காமலீலைகளின் உண்மைக்கதையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படம் ஃபயர். பிசியோதரபி கிளினிக் வைத்து நடத்தி வரும் மருத்துவர் காசி (பாலாஜி முருகதாஸ்) அனைவருக்கும் உதவி செய்து நல்ல பெயருடன் வலம் வருகிறார். ஒரு நாள் இவரின் தந்தை மகனை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கிறார். இதனை போலீஸ் அதிகாரி சரவணன் (ஜேஎஸ்கே) விசாரிக்க தொடங்குகிறார். அனைவரும் நல்லவர் என்று நற்சான்றிதழ் கொடுக்க, இதனிடையே பெரியவர் ஒருவர் காசியை கொன்றுவிட்டதாக காவல் நிலையத்தில் சரணடைகிறார். அதே நேரத்தில் தங்கள் மகன் உயிரோட இருப்பதாகவும் அவன் தங்களிடம் போனில் பேசியதாகவும் காசியின் பெற்றோர் போலீஸிடம் கூறுகின்றனர். அதன் பின் விசாரணை துரிதமடைகிறது. காசியை ஏன் கொல்ல வேண்டும்? அதற்கான காரணம் என்ன? காசிக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? நான்கு பெண்கள் தீட்டும் சதி திட்டம் என்ன? எதற்காக? காசி காணாமல் போனாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பதே படத்தை விறுவிறுப்பாக வைக்கும் அதிரடி க்ளைமேக்ஸ்.
பாலாஜி முருகதாஸ் காசி என்ற கதாபாத்திரத்தில் நம்பகத்தன்மையோடு இரு வேறு பரிமாணங்களில் பளிச்சிடுகிறார்.முதல் பாதி நல்ல மனம் படைத்த மருத்துவராகவும் இரண்டாம் பாதியில் காதல் மன்னனாக பல பெண்களை தன் காதல் வலையில் விழச் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் உல்லாச ஏமாற்று பேர்வழியாக கச்சிதமாக பொருந்தி வில்லனாக நடித்துள்ளார். இவரின் சுயரூபம் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் பெண்களை எப்படியெல்லாம் வசியம் செய்து சூறையாடி பணம் சம்பாதிக்கிறார் என்பதை பாலாஜி முருகதாஸ் தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் நடித்திருப்பதற்கு பாராட்டுக்கள்.
இவரின் காதல் வலையில் மாட்டிக் கொண்ட நான்கு பெண்களாக துர்காவாக சாந்தினி தமிழரசன் , பிரியாவாக சாக்ஷி அகர்வால் , மீனாட்சியாக ரச்சிதா மஹாலட்சுமி , அனிதாவாக காயத்ரி ஷான் கதைக்கேற்ப கவர்ச்சி தூக்கலாக முக்கிய திருப்புமனைக்கு சரியான பங்களிப்பு கொடுத்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
இவர்களுடன் இன்ஸ்பெக்டர் சரவணனாக ஜேஎஸ்கே படம் முழுவதும் மிடுக்கும், கம்பீரமாக படம் முழுவதும் தன் இருப்பை அமைதியான விசாரணையோடு நிலை நாட்டியுள்ளார்.
மற்றும் சிங்கம்புலி – திருமூர்த்தி, எஸ்.கே.ஜீவா – ஆறுமுகம், சுரேஷ் சக்ரவர்த்தி – கர்ணா,அனு விக்னேஷ் – தமிழ் ,குழந்தை மனோஜ் – விஜயகுமார் ஆகியோர் நேர்த்தியுடன் நடித்துள்ளனர்.
இசை- டிகே, ஒளிப்பதிவு -சதீஷ் ஜி பாபு, வசனம் எஸ்.கே. ஜீவா,எடிட்டிங்- சி எஸ் பிரேம்குமார், சண்டை-தினேஷ் காசி, கலை-சுசி தேவராஜ், நடனம்-மனஸ் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் படத்திற்கான தத்ரூபமான காட்சிகளுக்கு தங்களது முழு பங்களிப்பை கொடுத்து விறுவிறுப்பை கூட்டியுள்ளனர்.
2020ல் நாகர்கோவில் காசி என்று பரபரப்பாக பேசப்பட்டவர். அவரால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி. இவர் சமூகவலைத்தளம் மூலமாகப் பல பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாகப் படம் எடுத்து, மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டுக்கள் நிரூபனமாகி காசியின் லேப்டாப், மொபைலில் நாகர்கோவில் மட்டுமின்றி சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 120 பெண்களின் 400 ஆபாச வீடியோக்கள் மற்றும் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணை நடத்திய நாகர்கோவில் விரைவு நீதிமன்றம், காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இப்பொழுது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் காசியின் வாழ்க்கையை மையமாக வைத்துத் தான் படத்தை தயாரித்து, நடித்து இயக்கியிருக்கிறார் ஜேஎஸ்கே. பலவீனமான பெண்களை வீழ்த்தி காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டும் காம கொடூர ஆண்களிடம் தெரியாமல் சிக்கிக் கொண்டு அல்லல்படும் பலதரப்பட்ட பெண்களின் துன்பங்களையும், அவர்கள் படும் அவஸ்தைகளையும், மனஉளைச்சல்களையும் திறம்பட கொடுத்து இறுதியில் விசாரணை காட்சிகள், எதிர்பாராத திருப்பங்களுடன் சிறப்பாக கையாண்டு நயவஞ்சகர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையுடன் சமூக அக்கறையுடன் கவர்ச்சி தூக்கலுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் ஜேஎஸ்கே.
மொத்தத்தில் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜேஎஸ்கே தயாரித்திருக்கும் ‘ஃபயர்’ தீயவைகளை சுட்டெரிக்கும் மர்ம சுடர்.