நெடுஞ்சாலைகளில் அவசர சிகிச்சை சேவைகள்
பொதுப் போக்குவரத்தில் சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துதல் குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு பயிலரங்கையும், பயிற்சித் திட்டத்தையும் மத்திய அரசு நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த மூன்று நிதியாண்டுகளில் 7,713 அலுவலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலைப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை நிர்வகிக்கவும் பல்வேறு முகமைகளுக்கு நிதி உதவி அளிக்க அரசு சாலைப் பாதுகாப்பு ஆதரவு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
சென்னை, ஐஐடி-யில் உள்ள சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம், தமிழ்நாடு, ஹரியானா, ஜார்க்கண்ட் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் 497 காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவியல் ரீதியான விபத்து விசாரணை, ஆய்வுகள் குறித்து பயிற்சி அளித்துள்ளது.
காயங்கள் மற்றும் விபத்து சிகிச்சை தடுப்பு மற்றும் மேலாண்மை தேசிய திட்டத்தின் கீழ், 11.11.2024 முதல் புதுதில்லியில் உள்ள டாக்டர் ஆர்எம்எல் மருத்துவமனையில் பல்வேறு மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 53 செவிலியர்கள், மருத்துவர்களுக்கு அவசர மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து மேலாண்மை சேவைகளை வலுப்படுத்துவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2018 மார்ச் 20 அன்று கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் மீட்பு ஆம்புலன்ஸ், ரோந்து வாகனங்களுக்கான கட்டாய நடைமுறைகளின் பட்டியலை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன. மேலும், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், அவசர கால ஊர்தி பணிகளில் பணிபுரியும் பணியாளர்களின் தகுதி, அனுபவம் ஆகியவற்றை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடுகின்றன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.