மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வரவேற்பு… உலக இளம் சாம்பியன் குகேஷுக்கு பாராட்டு விழா!

0
143

மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வரவேற்பு… உலக இளம் சாம்பியன் குகேஷுக்கு பாராட்டு விழா!

உலக அளவிலான செஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இந்திய வீரர்கள் இருந்து வரும் நிலையில், இதில் தமிழ்நாடு மிக சிற்பபு வாய்ந்ததாக இருக்கிறது. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாத ஆனந்திற்கு பிறகு, இந்தியாவில் யாரும் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை.

செஸ் அரசன் விஸ்வநாத ஆனந்த் சுமார் 4 முறை சாம்பியன் பட்டம் வநேர நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்வது என்பது மட்டும் நீண்டகால காத்திருப்பாக இருந்தது. இதற்காக பலரும் தங்களை தயார் செய்து வந்த நிலையில், தற்போது இந்த பட்டத்தை மீண்டும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் குகேஷ் பட்டத்தை வென்றுள்ளார்.

18-வது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியானது சிங்கப்பூரில் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி கடந்த டிச.12-ம் தேதி நிறைவடைந்தது. 14 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டித் தொடரில், தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் குகேஷும், சீன வீரர் டிங் லிரனும் நேருக்கு நேர் போட்டியிட்டனர். இதில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் வெற்றி பெற்று, முதல் இளம் உலக சாம்பியன் என்ற பட்டத்தை வென்றார்.

உலகின் இளம் செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை தட்டி சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷுக்கு இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இந்த சூழலில் குகேஷை மேலும் ஊக்கப்படுத்துவதற்கு ரூ.5 கோடி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் செஸ் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், குகேஷின் சாதனையை போற்றும் விதமாகவும், குகேஷுக்கு இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு செஸ் சாம்பியன் குகேஷை வரவேற்கும் விதமாக சென்னை அரசினர் தோட்டத்தில் இருந்து, கலைவாணர் அரங்கம் வரை அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக மயிலாட்டம், சிலம்பம், பொய்கால் குதிரை, நய்யாண்டி மேளம், தாரை தப்பட்டை உள்ளிட்டவைகளுடன் ஊர்வலமாக குகேஷ் விழா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாத ஆனந்த், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளம் செஸ் சாம்பியன் குகேஷுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அவருக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையும் வழங்கினார்.

இந்தியாவின் 81 கிராண்ட்மாஸ்டர்களில் 31 கிராண்ட்மாஸ்டர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.