‘தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு உரிய நிதி வேண்டும்!’ : டெல்லி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன்!
டெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் – 2016-ன் கீழ் அமைக்கப்பட்ட ஒன்றிய ஆலோசனை வாரியத்தின் 7-வது கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மா.மதிவேந்தன் கலந்துகொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.
இச்சட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், ஒன்றிய அரசிற்கு உரிய ஆலோசனை வழங்கவும், ஒன்றிய ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு, கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஒன்றிய ஆலோசனை வாரியத்தின் 7-வது குழுக்கூட்டம் புதுடெல்லி டாக்டர்.அம்பேத்கர் சர்வதேச மைய வளாகத்தில் இன்று (15.12.2024) காலை 11 மணி அளவில் மாண்புமிகு ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்களுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இயக்குநர்/அரசு கூடுதல் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை திருமதி.எம்.லஷ்மி.,இ.ஆ.ப, கலந்து கொண்டனர்.
கடந்த கூட்டத்தின் தீர்மானங்களின் மீது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-ன் அமலாக்க நிலை குறித்தும் மனநல இல்லங்கள் குறித்த தரவுகள் “மனோஷ்ரயா” இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படும் அரசு சாரா நிறுவனங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு குறித்தும் மாற்றுத்திறனாளி மருத்துவ சான்றிதழ் மற்றும் தனித்துவ அடையாள அட்டைகளை மின்மயமாக்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்களின் நிலையினை அமைச்சர் மா.மதிவேந்தன் எடுத்துரைத்தார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படுவது என்பது மாற்றுத்திறனாளிகள் நலன் பேணும் இவ்வரசின் அசைக்க முடியாத அர்பணிப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு என அமைச்சர் அவர்கள் வாரிய உறுப்பினர்களிடையே எடுத்துரைத்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கண்டறிய மேற்கொள்ளப்பட்ட மாநிலம் தளுவிய கள கணக்கெடுப்பு பற்றியும், புற உலக சிந்தனை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உயர்தனிச் சிறப்பு மையம் உருவாக்கியது பற்றியும், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தினை முழுமையாக அமலாக்க மேற்கொண்ட நடவடிக்கைககளை விளக்கியும் மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதை அமைச்சர் விளக்கினார்.
ஒன்றிய அரசின் தனித்துவ அடையாள அட்டையின் தரவுத்தளத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்த இருவழி மின்னிசைவு கோரியும் மாநில ஆணையர் அலுவலக உருவாக்கத்திற்கு 2.21 கோடி ரூபாய் நிதி வழங்கவும் புற உலக சிந்தனை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உயர்தனிச் சிறப்பு மையத்தினை மேலும் வலுப்படுத்த 25 கோடி ரூபாய் நிதி வழங்கவும் ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை விடுவிப்பு நிலை குறித்த ஆண்டறிக்கையை மாநில அரசுகளுக்கு ஆண்டு தோறும் வழங்கவும் தடையற்ற சூழல் அமைக்க ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.29 கோடியினை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
63,000 பயனாளிகளுக்கு மட்டும் ஒன்றிய அரசால் வழங்கப்படும் இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையான தலா ரூ.300/- ஐ மேலும் 5.29 இலட்சம் பயனாளிகளுக்கும் நீட்டிக்கவும், தமிழ்நாடு அரசு வருவாய் துறை மூலம் தற்போது வழங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500/- ஐ முழுவதும் ஒன்றிய அரசு ஏற்று வழங்கவும், தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிற்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கான நிதியினை விரைவாக விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக அமைச்சர் மா.மதிவேந்தன் ஒன்றிய அமைச்சரிடம் கடிதம் வழங்கினார்.