தென் சென்னை சினிமா விமர்சனம் : தென் சென்னை கிரிக்கெட் சூதாட்டம் கலந்த க்ரைம் த்ரில்லர் புதிய கோணத்தில் வசீகரிக்கும் | ரேட்டிங்: 2.5/5
ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரித்து, தென் சென்னை படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் ரங்கா.
இதில் ரங்கா – ஜேசன் (கதாநாயகன்), ரியா – மேகா (கதாநாயகி), இளங்கோ குமணன் – டோனி (கதாநாயகன் மாமா), சுமா – மரியா (கதாநாயகன் தாய்), தாரணி – தாரா (கதாநாயகன் அக்கா), நிதின் மேஹ்தா – ருத்ரா (வில்லன் 1) , திலீபன் – சிவக்குமார் (இன்ஸ்பெக்டர்), தன்ஷிவி, நித்யநாதன் – கிருஷ்ணா (குழந்தை), வத்ஷன் எம் நட்ராஜன் – எஸ் கே (வில்லன் 2) ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் :- ஒளிப்பதிவாளர் : சரத்குமார் எம், எடிட்டிங் தொகுப்பாளர் : இளங்கோவன் சி எம், பின்னணி இசை : ஜென் மார்டின், பாடல் இசை : சிவ பத்மயன், பாடல் : ரங்கா, பாடியவர் : நரேஷ் ஐயர், தயாரிப்பு ஒருங்கிணைப்பு : மாரிமுத்து, வண்ணம் – சிட்டகாங், மக்கள் தொடர்பு : ஹேமானந்த்2010ல் சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் தேவராஜன் தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் தன் திறமையால் உருவாக்குகிறார். மதுரையில் சந்திக்கும் அண்ணன், தங்கையை தன்னுடன் அழைத்து வந்து அவர்களையும் தன் குடும்பமாக பாவித்து தொழிலையும் சேர்த்து தன் வாரிசுகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறார். அவர் மறைவுக்கு பிறகு அந்த ஹோட்டலை நிர்வகிக்கிறார் அவரின் பேரன் நாயகன் ரங்கா. 2019-ல் அந்த உணவகத்தை நவீனப்படுத்த நினைத்து மதுபான கூடத்துடன் கூடிய உணவகமாக மாற்ற நாயகனின் மாமா முடிவு செய்து அதிகாரம், அரசியல் சக்திவாய்ந்த கோல்டன் செக்யூரிட்டி என்ற கும்பலிடம் ஓட்டலை அடமானம் வைத்து கடன் வாங்குகிறார்.எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறாததால் வட்டி கட்ட முடியாமல் கடன் சுமை அதிகமாகி அந்த பாரை கோல்டன் செக்யூரிட்டி நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து தங்களுடைய சட்டவிரோத காரியங்களுக்காக இந்த கும்பல் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் ரங்கா ஒரு குழந்தையை ரோட்டில் கண்டெடுக்க, அதன் மூலம் நாயகியை சந்திக்கிறார். நாயகியின் மறைந்த அக்காவின் குழந்தை என்பதை அறிய அதே நேரத்தில் அக்காவின் கணவன் இவர்களை மிரட்டுகிறார். இதனிடையே அந்த பாரில் நடைபெறும் சூதாட்டத்தின் மூலம் வரும் பணத்தை கொள்ளையடிக்க 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு வெற்றிகரமாக கொள்ளையடிக்கிறார்கள். இந்நிலையில் நாயகன் ரங்கா கோல்டன் செக்யூரிட்டி குழுவிற்கும், அடையாளம் தெரியாத கொள்ளை கும்பலுக்கும் இடையே ஏற்படும் மோதலில் சிக்கிக் கொள்கிறான். மறுபக்கம் பணம் பறிபோனதால் கோபமடையும் கோல்டன் செக்யூரிட்டி தலைவன் அந்த மர்ம கும்பலில் உள்ள கூட்டாளிகளை கண்டுபிடித்து வேட்டையாடி கொல்கிறான். இன்னொரு கொள்ளைக்கு பெரிய திட்டம் போடுகிறார்கள் என்பதையறியும் கோல்டன் செக்யூரிட்டி கும்பலின் தலைவன் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கிறான். இதற்கு மூளையாக செயல்பட்ட கொள்ளை கூட்டத்தின் தலைவன் யார்? ரங்கா கொள்ளையை தடுத்தாரா? கோல்டன் செக்யூரிட்டி தலைவன் இவர்களின் ஹோட்டலை திருப்பி தந்தாரா? நாயகியின் அக்கா கணவன் மிரட்டல் என்னானது? என்பதே தென் சென்னை படத்தின் க்ளைமேக்ஸ்.
மருத்துவராக நாயகி ரியா, கோல்டன் செக்யூரிட்டி ஏஜென்சி தலைவனாக நிதின் மேத்தா, நாயகியின் அக்காவாக சுபா , மாமா டோனியாக இளங்கோ குமணன், நாயகனின் அக்காவாக தாரணி, இன்ஸ்பெக்டராக திலீபன், வத்ஷன் எம் நட்ராஜன் உட்பட அனைவரும் பங்களிப்பு படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மெரைன் அதிகாரியாக பல சாகசங்களை உறுதியான கடினமான நீருக்கடியில் பயிற்சி செய்வது போன்ற காட்சிகளும், பாரில் நடக்கும் சம்பவங்களும், குடும்ப கதையை முதல் காட்சியில் படக்கதையாக விவரிக்கும் போதும், படகு காட்சிகள், கொள்ளை மற்றும் சண்டைக்காட்சிகள் என்று தனித்திறமையுடன் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரத்குமார்.
சிவ பத்மயன் இசை, ஜென் மார்டின் பின்னணி இசை, இளங்கோவன் சி எம் படத்தொகுப்பு என்றுஅனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பணி சிறப்பாக உள்ளது.
இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து, திரைக்கதை எழுதி தயாரித்து, இயக்கியிருக்கிறார் ரங்கா. அனைத்து துறைகளையும் ஒருவரே கவனித்தால் தன்னுடைய கதாபாத்திரத்தை கொஞ்சம் நிதானத்துடன் கையாண்டது போல் இருக்கிறது. மெதுவாக வசன உச்சரிப்பு, முக பாவனையில் எந்தவொரு உணர்ச்சிகளும் இல்லாமல் போன்று தெரிகிறது. சில கதாபாத்திரங்கள் கொஞ்சம் டைம் எடுத்து வசனம் பேசுவதை சரியாக கையாண்டிருக்கலாம்.சில குறைகள் இருந்தாலும் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் குழந்தை சென்டிமெண்ட் கலந்து தன்னால் முடிந்த அளவு பரபரப்பாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் ரங்காவிற்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ரங்கா ஃபிலிம் கம்பெனி தயாரித்திருக்கும் தென் சென்னை கிரிக்கெட் சூதாட்டம் கலந்த க்ரைம் த்ரில்லர் புதிய கோணத்தில் வசீகரிக்கும்.