பொதுமக்களுக்காக சிறப்பாக சேவையாற்றிய அரசு அலுவலர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பாராட்டு!

0
86

பொதுமக்களுக்காக சிறப்பாக சேவையாற்றிய அரசு அலுவலர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பாராட்டு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் (6.12.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், கலைஞர் கனவு இல்லத் திட்டம், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திடீராய்வு மேற்கொண்டு, வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மனுதாரர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களது கோரிக்கை விவரங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இதற்காகத்தான் முதமைச்சரின் முகவரி என்ற தனித்துறையையே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கினார்கள். இன்றைய தினம் மனுதாரர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டது போன்று தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு வரும் மனுக்கள்மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில்தான் திட்டங்களை தீட்டுகிறோம். அவை முறையாக பொதுமக்களுக்கு சென்று சேர்வது அலுவலர்களின் கைகளில்தான் இருக்கிறது. அதை நீங்கள்தான் உறுதிபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அலுவலர்கள் வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மக்களுக்கு அரசுத்திட்டங்களின் கீழ் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அலுவலர்களுக்கு துணை முதலமைச்சர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதற்காக வேலூர் வட்டாட்சியர் அலுவலத்தை பாராட்டி வட்டாட்சியர் தே.முரளிதரன் அவர்களுக்கும், சிறப்பாக மருத்துவ சேவை வழங்கிய திருவலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக மருத்துவ நல அலுவலர் திருமதி.எம்.ராணி அவர்களுக்கும், அணைக்கட்டு வட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஆசனாம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.சரவணன் அவர்களுக்கும் நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக தேர்ச்சி விகிதத்தை அளித்த அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், மின்னல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை பாராட்டி தலைமையாசிரியர் திருமதி.வ.கு.சாரதா அவர்களுக்கும், சிறப்பாக மருத்துவ சேவை வழங்கிய கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக மருத்துவ நல அலுவலர் கு.கோபிநாத் அவர்களுக்கும், சிறப்பாக சேவை வழங்கிய சுமைதாங்கி நகர கூட்டுறவு கடன் சங்கத்தை பாராட்டி செயலாளர் கண்ணன், தனி அலுவலர் தயாளன் ஆகியோருக்கும், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூ.சரவணகுமார் ஆகியோருக்கும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைவர் எஸ்.ஜெகத்ரட்சகன், டி.எம். கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன், திருமதி அமுலு விஜயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அ.செ.வில்வநாதன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் மு.பாபு, துணை மேயர் மா.சுனில் குமார், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர்கள் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி,இ.ஆ.ப.,(வேலூர்), முனைவர்.ஜெ.யு. சந்திரகலா,இ.ஆ.ப. (ராணிப்பேட்டை), சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை துணைச்செயலாளர் மு.பிரதாப் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.