பணி சினிமா விமர்சனம் :  பணி  சிறந்த தொழில்நுட்ப கலைஞர்;கள், தேர்ந்த நடிகர்கள், சுவாரஸ்யமான திரைக்கதையுடன் பழி வாங்கும் இளம் வில்லன்களின் வன்முறை கலந்த மிரட்டல் சரவெடி.| ரேட்டிங்: 3.5/5

0
169

பணி சினிமா விமர்சனம் :  பணி  சிறந்த தொழில்நுட்ப கலைஞர்;கள், தேர்ந்த நடிகர்கள், சுவாரஸ்யமான திரைக்கதையுடன் பழி வாங்கும் இளம் வில்லன்களின் வன்முறை கலந்த மிரட்டல் சரவெடி.| ரேட்டிங்: 3.5/5

பணி சினிமா விமர்சனம் :
அப்பு பது பப்பு, ஸ்ரீ கோகுலம் மூவிஸ், அட்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் எம் ரியாஸ் ஆடம் மற்றும் சிஜோ வடக்கன் ஆகியோர் தயாரித்திருக்கும் பணி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்.

இதில் கிரி – ஜோஜு ஜார்ஜ், கௌரி – அபிநயா ஆனந்த் , டான் செபாஸ்டியன் – சாகர் சூர்யா, சிஜு கே. டி. – ஜுனாயஸ் வி.பி, மங்கலாத் தேவகி அம்மா – சீமா ஐ வி சசி, குருவில்லா – பிரசாந்த் அலெக்சாண்டர், சஜி – சுஜித் சங்கர்,தேவி அந்தோணி – பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதன் – ரஞ்சித் வேலாயுதன், கல்யாணி பிரகாஷ் – சாந்தினி ஸ்ரீதரன், லயா – அபாயா ஹிரண்மயி, கார்த்திகா – சோனா மரியா ஆபிரகாம்,லட்சுமி – லங்கா லக்ஷ்மி ,சுலோச்சனன் – பிரிட்டோ டேவிஸ் ,செபாஸ்டியன் – ஜெயசங்கர் , பலேட்டன் – அஷ்ரப் மல்லிசேரி ,சினேகா – டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு – வேணு – ஜின்டோ ஜார்ஜ், இசை – விஷ்ணு விஜய் – சாம் சி எஸ் , ஒலி வடிவமைப்பு – அஜயன் அடாட் ,தயாரிப்பு வடிவமைப்பு – சந்தோஷ் ராமன், படத்தொகுப்பு – மனு ஆண்டனி ,மக்கள் தொடர்பு – யுவராஜ்

திருச்சூரில் டான் (சாகர் சூர்யா) மற்றும் சிஜு (ஜுனைஸ் விபி) என்ற இரண்டு இளம் மெக்கானிக்குகள் பணத்தாசையால் விரைவாக ₹10 லட்சத்தை சம்பாதிக்க ஒப்பந்த கொலை வேலையை மேற்கொள்கிறார்கள். அவர்கள் பிசியான மையத்தெருவில் உள்ள ஏடிஎம்மில் ஒருவரைக் கொன்று விட இது தலைப்புச் செய்தியாகிறது. நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த திருச்சூர் நகரம் இப்போது அதிரடியாக வெடிக்க, இந்த கொலைக்கு யார் காரணம் என்று போலீசார் உட்பட அனைவரும் அதிர்ச்சியாகி குற்றவாளி யார் என்று தேடுகிறார்கள். டான் மற்றும் சிஜு பணம் கையில் கிடைத்தவுடன் அவர்களுக்குள் பெரிய தாதாவாக உருவாகவேண்டும் என்ற வெறியும், பணம் சம்பாதிக்கும் வழியையும் கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் பாதைகள் நகரத்தின் மிகவும் பிரபலமான டான்களில் ஒருவரான கிரி (ஜோஜு ஜார்ஜ்) மற்றும் அவரது மனைவி கௌரி (அபிநயா) ஆகியோரை சந்திக்கும் வரை நல்லவிதமாகதான் செல்கிறது. திருச்சூரில் கிரியின் குடும்பம்; கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி ஆள் பலம், அதிகார பலம் பொருந்திய பெரிய மாஃபியா கும்பலாக வலம் வருபவர்கள். ஆனால் போலீஸ் வலையில் மாட்டாமல் மறைமுகமாக நெட்வொர்கை நடத்துபவர்கள். இந்நிலையில் ஒரு நாள் கிரி மனைவி கௌரியிடம் குற்றவாளி இளைஞன் டான் சில்மிஷம் செய்யும் போது தாதா கிரி அவர்களை அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் டான் தன் நண்பனுடன் சேர்ந்து தனியாக இருந்த கௌரியை பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறான். இதனை கேள்விப்படும் கிரியும் அவரது நண்பர்களும் இந்த இருவரையும் பழி வாங்க வலை வீசி தேடுகின்றனர். இந்த இரு இளம் குற்றவாளி இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் போலீஸ் மற்றும் கிரியிடம் மாட்டுவது அல்லது அவர்களை எதிர்ப்பது. இதில் இருவரும் கிரியையும், அவரது கூட்டாளிகளையும் ஒழித்து கட்டும் முடிவை எடுக்கிறார்கள். இந்நிலையில் விஷயங்கள் மோசமான திருப்பத்தை எடுக்கின்றன. இந்த இரண்டு இளைஞர்களுக்கும் கிரிக்கும் இடையே என்ன மோதல் நடக்கிறது? டான், சிஜு பெரிய தாதாவான கிரியின் கூட்டாளிகளை எப்படி பழி வாங்குகின்றனர்? அதன் பின் கிரியும் அவனது குடும்ப ஆட்களும் டான் மற்றும் சிஜுவை எப்படி வேட்டையாடுகிறார்கள்? என்பதே விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.

தாதாவாக இருந்தாலும் அன்பான குடும்ப தலைவராக, அரவணைத்து போகும் குணம், நட்புக்கு முக்கியத்துவம், தன் மனைவிக்கு நேர்ந்த கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் உள்ளுக்குள்ளே தவிப்பது, நண்பர்களின இழப்பு பேரடியாக விழுவது, பழி வாங்குவதை நேர்த்தியாக செய்வது என்று அக்மார்க் தாதா களத்துடன் நேர்த்தியாக செய்துள்ளார். இவருடைய இருப்பு அந்த கதாபாத்திரத்தை மென்மேலும் வலு சேர்த்துள்ளது. வெல்டன்.

கௌரியாக அபிநயா ஆனந்த் இவரின் இருப்பின் முக்கிய மையப்புள்ளியிலிருந்து தான் கதைக்களம் வேறு பாதையில் பயணிக்கிறது. தன்னுடைய பங்களிப்பை அழகாக, அமைதியாக அர்ப்பணிப்புடன் கையாலும் விதம் படத்திற்கு ப்ளஸ்.

இரு இளம் குற்றவாளிகளாக டான் செபாஸ்டியன் சாகர் சூர்யா, சிஜு கே. டி. ஜுனாயஸ் வி.பி செய்யும் அராஜகங்கள் பார்ப்பவர்களை வெறுக்கும் அளவிற்கு நேர்த்தியாக செய்துள்ளனர். இவர்களின் இருமாப்புடன் நடத்தை, அகங்காரத்துடன் சிரிப்பது, எதற்கும் அஞ்சாத மனோபாவத்துடன் நடந்து கொள்வது, நினைத்ததை செய்து முடிப்பது என்று வில்லன்களுக்கே பெரிய சவால் விடும் தோற்றத்தில் அழுத்தமாக மிரட்டலாக பதிவு செய்துள்ளனர். இவர்களை படத்தில் புதிய கோணத்தில் காட்டிய விதம் கச்சிதம். அதுமட்டுமில்லாமல் இறுதிக் காட்சியில் இருமாப்புடன் திமிராக சிரித்துக் கொண்டிருக்க தன் நண்பனின் சாவை பார்த்த நொடி கண்ணில் தெரியும் பயத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் சாகர் சூர்யா.

மங்கலாத் தேவகி அம்மாவாக சீமா சசி தன் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை அமைதியாக உள்வாங்கி தைரியத்தை கொடுத்து தன் மகனிடம் எதிரியை கண்டவுடன் சிதைச்சிடு என்று உறுதியாக சொல்வதும், லிப்ட்டில் வில்லன்களை கண்டு பயப்படாமல் எதிர்கொள்ளும் நேரத்தில் அனுபவ நடிப்பு தூணாக தெரிகிறது.

குருவில்லா – பிரசாந்த் அலெக்சாண்டர், சஜி – சுஜித் சங்கர்,தேவி அந்தோணி – பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதன் – ரஞ்சித் வேலாயுதன், கல்யாணி பிரகாஷ் – சாந்தினி ஸ்ரீதரன், லயா – அபாயா ஹிரண்மயி, கார்த்திகா – சோனா மரியா ஆபிரகாம்,லட்சுமி – லங்கா லக்ஷ்மி ,சுலோச்சனன் – பிரிட்டோ டேவிஸ் ,செபாஸ்டியன் – ஜெயசங்கர் , பலேட்டன் – அஷ்ரப் மல்லிசேரி ,சினேகா – டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளத்துடன் படம் முழுவதும் நிறைந்து அனைவருக்குமான பங்களிப்பு படத்தில் முழுமையாக தெரியும் வண்ணம் அசத்தியுள்ளனர்.

திருச்சூர் நகரத்தின் நுணுக்கங்களும் நகர வாழ்க்கையும், தாதாக்களின் வாழ்வியலையும், கதைக்கு மேலும் நம்பகத்தன்மையுடன் வேணு ஐஎஸ்சி மற்றும் ஜின்டோ ஜார்ஜ் ஆகியோரின் ஒளிப்பதிவில் கொடுத்துள்ளனர்.

மனு ஆண்டனியின் படத்தொகுப்பு இந்தப் படத்தில் தனித்து நின்று பலம் சேர்த்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக, ஆக்‌ஷன் காட்சிகள், துரத்தல் காட்சிகள் உலகத்தரத்தில் மெய் சிலிர்க்க வைத்து திரைப்படத்தில் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடுநிலையான திரைக்கதைக்கு விஷ்ணு விஜய் மற்றும் சாம் சிஎஸ் ஆகியோரின் இசையும், ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளின் துரத்தல் மற்றும் தீவிரத்தின் வேகத்தை பார்வையாளர்கள் உணர்வதை பின்னணி இசையில் உறுதி செய்திருக்கின்றனர்.

‘பணி’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக முதல் அடியெடுத்து வைக்கிறார் பன்முக மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இயக்குனராக அவரது முயற்சி தன்னம்பிக்கையுடன் இருக்கிறது.இது ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட ஒரு பழிவாங்கும் தாதாக்களின் கதையாக இருந்தாலும் எளிமையாக புதிய களத்துடன் ஆக்ஷன் மற்றும் வன்முறையை உட்செலுத்தி முதல் பாதி எதிர்பார்க்கும் வழக்கமான பாதையில் செல்ல இரண்டாம் பாதியில் தான் ஜோஜு ஜார்ஜ் விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யமாக சிறப்பாக இயக்கியுள்ளார். தாதா தனக்கு சவாலாக இருக்கும் புதிய இளம் வில்லன்களை எப்படி தண்டனை கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை சரியாக செய்து பழி வாங்கும் இடத்தில் படத்தின் வெற்றி பளிச்சிடுகிறது. படத்தின் வெற்றி வில்லன்களின் பங்களிப்பு சரியாக இருந்தால் பேசப்படும் அந்த வகையில் புதுவித இளமை மிரட்டலை களமிறக்கி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜோஜு ஜார்ஜ்.

மொத்தத்தில் அப்பு பது பப்பு, ஸ்ரீ கோகுலம் மூவிஸ், அட்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் எம் ரியாஸ் ஆடம் மற்றும் சிஜோ வடக்கன் ஆகியோர் தயாரித்திருக்கும் பணி  சிறந்த தொழில்நுட்ப கலைஞர்;கள், தேர்ந்த நடிகர்கள், சுவாரஸ்யமான திரைக்கதையுடன் பழி வாங்கும் இளம் வில்லன்களின் வன்முறை கலந்த மிரட்டல் சரவெடி.