மெய்யழகன் விமர்சனம் : மெய்யழகன் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் நினைவுகளின் மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணங்களின் சொந்தக்காரன் | ரேட்டிங்: 4/5
2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்து மெய்யழகன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சி.பிரேம்குமார்.
இதில் கார்த்தி – மெய்யழகன், அரவிந்த் சுவாமி – அருள்மொழி ,ராஜ் கிரண் – சொக்கலிங்கம், ஸ்ரீ திவ்யா – நந்தினி, ஸ்வதி காண்டே – புவனா, தேவதர்சினி – ஹேமா, ஜெயபிரகாஷ் – அறிவுடை நம்பி, ஸ்ரீPரஞ்சனி – வள்ளியம்மாள், இளவரசு – ஏகாம்பரம், கருணாகரன் – ஜெகதீசன், சரண் சக்தி 18 வயது அருள்மொழி, ராச்சல் ரெபேகா -பூக்காரம்மா, ஆண்டனி – சந்தானம் , ராஜசேகர் பாண்டியன் – பாஸ் ( ராஜசேகர் ), இந்துமதி – லதா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இணை-தயாரிப்பாளர் – ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், டிஓபி – மகேந்திரன் ஜெயராஜூ, இசை – கோவிந்த் வசந்தா , எடிட்டிங் – ஆர்.கோவிந்தராஜ், தயாரிப்பு மேற்பார்வை – ராஜீவன், ஆடை வடிவமைப்பாளர் – சுபஸ்ரீ கார்த்திக் விஜய், பாடல்கள்-கார்த்திக் நேதா, உமா தேவி, ஸ்டில்ஸ் – ஆகாஷ் பிஆர்ஒ – ஜான்சன்
1996ல் நடக்கும் கதைக்களத்தில் பல தலைமுறைகளாக தஞ்சாவூரில் ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்து சொந்தங்களோடு ஒன்றாக ஆசிரியர் அறிவுடை நம்பி (ஜெயபிரகாஷ்) , வள்ளியம்மாள் (ஸ்ரீPரஞ்சனி) தம்பதியின் 18 வயது நிரம்பிய அருள்மொழி (இளம் வயது அரவிந்த்சாமி சரண் சக்தி) ஆகியோர் கூட்டு குடும்பமாக பெரிய வீட்டில் வாழ்கின்றனர். பின்னர் அண்ணன் தம்பிகளுக்கு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டு பாகபிரிவினையால் அறிவுடைநம்பி தன் குடும்பத்துடன் சென்னைக்கு செல்கிறார். அவர்களுடன் தஞ்சாவூர் வீட்டை விட்டு செல்ல மனமில்லாமல் வேதனையுடன் அருள்மொழி செல்ல அதன் பின் சொந்த பந்தங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு ஊர் பக்கமே வராமல் இருக்கின்றனர். அருள்மொழி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூரில் நடக்கும் சித்தி மகள் புவனாவின் (ஸ்வதி காண்டே) திருமணத்திற்கு செல்ல முடிவு செய்கிறார். மனைவி தேவதர்ஷினி (ஹேமா) மற்றும் மகளிடம் திருமண வரவேற்பில் மட்டும் கலந்து கொண்டு அன்றிரவே சென்னை திரும்பிவிடுவதாக சொல்லிவிட்டுச் செல்கிறார். திருமணத்தில் தெரிந்த சொந்தங்கள் ஒரு சிலரில் சொக்கலிங்கம் மாமாவை (ராஜ்கிரண்) தவிர அவருக்கு பாசமாக இருக்கும் ஒரே உறவினர் சித்தி மகள் புவனா மட்டுமே. தஞ்சாவூரில் நீடாமங்கலத்திற்கு சென்று திருமண வரவேற்பில் கலந்து கொள்ளும் அருள்மொழிக்கு சொந்தக்காரராக கார்த்தி பரிச்சயமாகிறார். அருள்மொழியுடன் கூடவே இருக்கும் கார்த்தி அவரைப்பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்தவராக பேசுகிறார். ஆனால் அருள்மொழிக்கு கார்த்தி யார் என்றே தெரியாத குழப்பத்தில் அவரிடம் சமாளித்து பேசி வருகிறார். திருமண வரவேற்பு முடிந்து சாப்பிட்டு எழுந்தவுடன் அருள்மொழியை சென்னைக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு அழைத்து வரும் கார்த்தி கடைசி பேருந்தை தவற விடுகிறார். இதனால் வேறு வழியின்றி கார்த்தியின் வீட்டில் அன்றிரவு அருள்மொழி தங்க நேரிடுகிறது. கார்த்தியின் மனைவி நந்தினியும் (ஸ்ரீ திவ்யா) அருள்மொழியை பற்றி தெரிந்தவராக இருக்க, பெறும் குழப்பத்தில் ஆழ்கிறார் அருள்மொழி. அதன் பின் அருள்மொழி கார்த்தியின் வீட்டில் தங்கினாரா? கார்த்தியின் குணாதிசயங்களை கண்டு வியந்தாரா? அருள்மொழியால் கார்த்தியின் அன்பை புரிந்து கொள்ள முடிந்ததா? இருவருக்கும் என்ன உறவுமுறை? இறுதியில் அருள்மொழி கார்த்தியின் பெயர் மெய்யழகன் என்பதை உணர்ந்த தருணம் எது என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
அருள்மொழியாக அரவிந்த்சாமி தான் நேசித்த ஊரை விட்டு பிரிந்து செல்லும் போதும், சொந்தங்களிடமிருந்து விலகி இருப்பதும், பின்னர் திரும்பி வரும் போது அசை போடும் ஞாபகங்கள், தங்கையிடம் திருமண பரிசை கொடுத்து அதை அணிய வைக்கும் அழகான நெகிழ வைக்கும் தருணங்கள், திருமணத்தில் சந்திக்கும் கார்த்தி தன்னை பற்றி பெருமையாக பேசுவதை ரசித்தாலும் உள்ளுக்குள் கார்த்தியின் பெயரை கண்டு பிடிக்க எடுக்கும் முயற்சிகள், மது அருந்திக்கொண்டு நினைவுகளின் திளைப்பது, அன்பு பாசத்தால் திக்குமுக்காடும் நேரத்திலும், குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு, அவர்களுக்கு தெரியாமல் பிரிந்து செல்லும் நேரத்திலும், பிரிய மனமில்லாமல் மனஉளைச்சலோடு ஊரை விட்டுச் செல்லும் போதும் தெருவில் ஒட்டம் பிடிப்பதும், சந்திக்கும் பஸ் கண்டக்டர் முதல் இறுதியில் மனதில் நிற்கும் பூக்காரம்மா வரையிலும், மனைவியிடம் தன் ஆற்றாமையை சொல்லி புலம்பும் போதும், கார்த்தியிடம் இறுதியில் பேசும் தொலைபேசி உரையாடல்கள் படிப்படியாக பெயரை ஞாபகப்படுத்தும் இடங்களில் பொடேடோ என்று சொல்லி ரசித்து ரசித்து உணர்ச்சிகளின் குவியலாக தன் முகபாவனையில் உணர்த்தி இயல்பாக செய்துள்ளார். நடுத்தர வயது அரவிந்த்சாமியாக அளவோடு சுருக்கமாக பேசி மற்ற நேரத்தில் தன் நினைவுகளில் ஆழ்ந்திடும் நேரத்திலும், ஆரம்பத்தில் கார்த்தியிடமிருந்து தப்பிக்க நினைப்பவர் பின்னர் சூழ்நிலை கைதியாக மாறி அவரை ரசிக்கும் நபராக மாறுவது, பாட்டுப் பாடி மைக்கேல் ஜாக்சன் மூன் வாக் நடனம் வரை திறம்பட தன் கதாபாத்திரத்தை நச்சென்று செய்துள்ளார்.
கார்த்தி மெய்யழகனாக தஞ்சாவூர் சொந்தக்காரராக பரோபகாரம், பகுத்தறிவு, ஆன்மீகம், அப்பாவித்தனம், வீரம், கிண்டல், பெருமை, மனிதநேயம் ஆகியவற்றின் பிம்பமாக படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தன் பேச்சு திறமையாலேயே படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். அருள்மொழியுடன் விளையாடிய தருணம், சைக்கிள் மகிமை, ஜல்லிக்காட்டு காளையின் பெருமை, பண்டைய தமிழர்களின் போர், ஆட்சிகாலங்களின் விவரிப்பு, குலதெய்வ வழிபாடு, பழைய வீட்டின் மகிமை, நல்ல பாம்பு வளர்ப்பு, மனைவி மீது அன்பு, மது வாங்க செய்யும் அளப்பறை என்று அழுத்தமாகவும், அப்பாவித்தனம் கலந்த வசீகர கலகலவென்ற பேச்சாலும் படம் முழுவதும் கார்த்தி படத்தை தன் தோளில் சுமந்து இது போன்ற சொந்தம் கிடைக்காதா என்ற வகையில் ஏங்க வைத்து விடுகிறார். இவரின் துறுதுறு செய்கை, நடவடிக்கை பார்ப்பவர்களை மிரள வைத்து ரசிக்க வைத்து விடுகிறது. படபடவென்று வசன உச்சரிப்பு படத்திற்கு பெரும் பலம். வெளிப்படுத்துவதற்கு கடினமான உணர்ச்சிகள் நிறைந்த படத்திற்கு கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் தங்கள் நிறைவான நடிப்புடன் திரைப்படத்தை சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார்கள்.
ராஜ் கிரண் பாசக்கார மாமா சொக்கலிங்கமாக அருள்மொழி மற்றும் அவருடைய அப்பா அறிவுடைநம்பியிடம் பேசும் போது ஏற்படும் பாச நெகிழ்ச்சி , ஸ்ரீ திவ்யா மெய்யழகனின் மனைவி நந்தினியாக கணவனின் சொல்லுக்கு மறு பேச்சு பேசாத, அண்ணா அண்ணா என்று அருள்மொழியை வாய் நிறைய கூப்பிடும் போது சில காட்சிகள் வந்தாலும் ரசிக்குப்படி செய்துள்ளார். ஸ்வதி காண்டே தங்கை புவனாவாக திருமண மேடையில் பரிசை திறக்கச் செய்து அதை அணிந்து மகிழ்ந்து அண்ணனிடம் உருகும் போது அனைவருக்கும் இன்ப தருணத்தை ஞாபகப்படுத்திவிடுகிறார், தேவதர்சினி அருள்மொழியின் மனைவியாக ஹேமா கணவனுக்கு வழிகாட்டியாக ஒவ்வொரு இடத்திலும் குறிப்பறிந்து பேசுவதிலும், சுட்டிக் காட்டுவதிலும் சிறப்பாக செய்துள்ளார்.
மற்றும் இவர்களுடன் ஜெயபிரகாஷ் – அறிவுடை நம்பி, ஸ்ரீPரஞ்சனி – வள்ளியம்மாள், இளவரசு – ஏகாம்பரம், கருணாகரன் – ஜெகதீசன், சரண் சக்தி 18 வயது அருள்மொழி, ராச்சல் ரெபேகா -பூக்காரம்மா, ஆண்டனி – சந்தானம் , ராஜசேகர் பாண்டியன் – பாஸ் ( ராஜசேகர் ), இந்துமதி – லதா என்று அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து மெல்லிய தருணத்தை தங்களின் பங்களிப்பால் நினைவுபடுத்துவதில் சாதித்துள்ளனர்.
பல கதைகளை உள்ளடக்கிய காட்சிகளின் விவரிப்பு, நம்பத்தன்மையான கோணங்களில் விரியும் கதைக்களத்தை தன்னுடைய திறமையால் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜூ சிறப்பாக கொடுத்துள்ளார்.
மூன்று பாடல்களை ரசித்து கேட்கும் வண்ணம் தன் இசையால் நிரப்பியுள்ளார் கோவிந்த் வசந்தா. டெல்டா கல்யாணம் மற்றும் குறிப்பாக கமலஹாசன் குரலில் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் கண் கலங்க செய்து விடுகிறது.
எடிட்டர் ஆர்.கோவிந்தராஜ் இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொகுத்திருந்தால் இன்னும் கிரிப்பாக படம் இருக்கும்.
அறிமுகத்தை மறந்த சொந்தங்கள் இருவரின் சந்திப்பு ஒரே இரவில் இருபத்திரண்டு கால இடைவேளியை அழகாக சம்பவங்களை அசை போட வைத்து, குடும்ப பாசப்பிணைப்புடன், உணர்ச்சிகளின் நெகிழ்ச்சியோடு ஞாபகத்தை மீட்டு எடுக்கும் தருணத்துடன் 96 படத்தின் இயக்குனர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். 1996 என்று தன் முதல் படத்தின் சென்டிமெண்ட்டோடு ஆரம்பித்து ஃபிளாஷ்பேக் காட்சிகளை அழகாக வெளிக்கொணர்ந்து படத்தினிடையே தோனி காளை, சைக்கிள் மற்றும் கோயில்கள் வீர வரலாறு, வீழ்ந்த வரலாறு என்று நடந்து முடிந்த அத்தனை சம்பவங்களையும் தன் பார்வையில் விவரிக்கும் அழகுடன் நேர்த்தியாக கொடுத்து கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் சி.பிரேம்குமார். படம் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஒரு மனிதனுக்கு இடையேயான பிணைப்பைப் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊருக்குத் திரும்பி, தனது இளமைப் பருவத்தில் சந்தித்த நபர் யார் என்பதை நினைவு படுத்த எடுக்கும் முயற்சியின் கணிப்பே இப்படம். படம் பார்க்கும் அனைவரும் தாங்கள் மறந்த சொந்தங்களை நினைவு கூறும் வகையில் அழகாக பூமாலையாக தொடுத்து கொடுத்துள்ளார் இயக்குனர் சி.பிரேம்குமார். வெல்டன்.
மொத்தத்தில் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்திருக்கும் மெய்யழகன் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் நினைவுகளின் மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணங்களின் சொந்தக்காரன்.