ஜமா திரை விமர்சனம் : ஜமா மறைந்து கொண்டிருக்கும் உன்னத தெருக்கூத்துக்கலையை மீட்டெடுத்து வித்தியாசத்துடன் சுவாரஸ்யத்துடன் வாழ்வியல் நிஜத்துடன் கலந்து பேசி சகாப்தம் படைத்திருக்கிறது | ரேட்டிங்: 4/5
லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாய் தேவானந்த் எஸ், சசிகலா எஸ், சாய் வெங்கடேஸ்வரன் எஸ் தயாரித்து பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்சாண்டர் வெளியிடும் ஜமா படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கிறார் பாரி இளவழகன்.
இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், ‘வடசென்னை’ புகழ் மணிமேகலை, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு- கோபி கிருஷ்ணா, பிஆர்ஒ-டிஒன் சுரேஷ்சந்திரா.
திருவண்ணாமலையில் ராமச்சந்திரா நாடக சபாவில் நாட்டுப்புற கலையான தெருக்கூத்தில் பதினாறு கலைஞர்களை வைத்து மகாபாரதம், வள்ளி திருமணம், அரிச்சந்திரா போன்ற இதிகாசங்களை மையப்படுத்தி தாண்டவம் (சேத்தன் கடம்பி) ஜமாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதில் இளம் கூத்து கலைஞரான கல்யாணம் (பாரி இளவழகன்) பெண் வேடங்களான திரௌபதி, குந்தி தேவி மற்றும் பல பெண்கள் கதாபாத்திரத்தில் நடிப்பவர். முன்பு கல்யாணத்தின் தந்தை இளவரசு(ஸ்ரீ கிருஷ்ண தயாள்) அம்பலவானன் நாடக சபா என்ற ஜமாவை தொடங்கி முதன் முதலில் வழி நடத்தியவர் என்ற பெருமையுடன் தன் கூட்டாளியாக தாண்டவத்தையும் சேர்த்து கொண்டு அந்த கிராமத்தில் ஜமாவை நடத்தியவர்கள். ஜமாவில் இளவரசுவின் ஆதிக்கத்தையும் வளர்ச்சியையும் பிடிக்காமல் போக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்று தனியாக ஜமாவை நடத்துகிறார் தாண்டவம். இளவரசு தன்னை ஏமாற்றிய தாண்டவனை நினைத்து மதுவுக்கு அடிமையாகி மனஉளைச்சலில் இறந்து விடுகிறார். இருந்தாலும் கல்யாணம் கூத்துக் கலையின் மேல் இருக்கும் ஈர்ப்பால் விரோதி என்றாலும் தாண்டவனின் ஜமாவில் சேர்ந்து நடித்து வருகிறார். இளமை பருவத்திலிருந்தே கல்யாணம் தாண்டவனின் மகளான ஜகதாம்பாளை (அம்மு அபிராமியை) விரும்புகிறார். ஜகாவின் படிப்பிற்காக கல்யாணம் தாண்டவனின் ஜமாவில் பெண் வேடமிட்டு நடித்து பணத்தை அனுப்பி வருகிறார். கல்யாணத்திற்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படும் தாய் (கேவிஎன் மணிமேகலை) தாண்டவத்திடம் பெண் கேட்டு போய் அவமானப்பட்டு திரும்புகிறார். இதனால் தாண்டவத்தின் மகள் ஜகாவை நிராகரிக்கும் கல்யாணம், எப்படியாவது தெருக்கூத்தில் தன் தந்தை இளவரசு ஏற்ற அர்ஜூனன் வேடம் கட்டி நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசைவும், தனியாக ஜமா நடத்தி தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்கிறார். ஆனால் தாண்டவம் தொடர்ந்து கல்யாணத்தை அவமானப்படுத்தி, பெண் வேடங்களையே தருகிறார். இதனால் கல்யாணம் நிலத்தை விற்று புதிய ஜமாவை தொடங்க ஏற்பாடுகள் செய்ய அதற்கு உடனிருக்கும் தெருக்கூத்து கலைஞர்கள் ஒத்துழைப்பு தராமல் போக, பணம் பறிபோக, கல்யாணத்தின் தாயும் அதிர்ச்சியில் இறந்து விடுகிறார். அதன் பின் கல்யாணம் தனி நபராக இருந்து தன் லட்சியத்தை நிறைவேற்றினாரா? அவமானங்களை கடந்து அர்ஜுனன் வேடம் போட்டு தன் திறமையை நிரூபித்தாரா? என்பதே அதிர வைக்கும் ஆர்ப்பாட்ட கூத்துக்கலையின் க்ளைமேக்ஸ்.
கல்யாணம் இளம் கூத்து கலைஞராக, பெண்களின் நளினத்தன்மையுடன் பேசுவது, நடப்பது, பழகுவது அள்ளி முடித்த கூந்தலுடன் விபூதி பட்டையுடன், சிரித்த முகத்துடன் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று பாரி இளவழகன் அதகளம் செய்துள்ளார். தாயின் விவரிப்பில் பெண் பார்க்கும் படலத்தில் அவர் செய்யும் செயல்கள், திருமண தடைகள், பெண்களிடம் சகஜமாக நடந்து கொள்வது,தன் சக வயது ஆண்களின் கேலி கிண்டல்களுக்கு பயந்து ஒதுங்கி செல்வது, தாண்டவத்தின் அவமானத்தையும், அலட்சியத்தையும் கண்டு கொள்ளாமல் வெள்ளேந்தியாக இருப்பது, தன் சக நடிகர் பூனையின் வழிகாட்டுதல்களுடன் படிப்படியாக தைரியமாக களமிறங்கி நினைத்ததை சாதிக்க துடிப்பது என்று மனதை அசர வைக்கும் ஆர்ப்பாட்ட நடிப்பு. கொஞ்சம் பிசகினாலும் பழி வாங்கும் குணத்திற்கு மாறும் கதைக்களம், ஆனால் படம் முழுவதும் அதை வெளிக்கொணராமல் பொறுமையாக தன் திறமையால் சாதித்து காட்டும் காட்சிகள் அற்புதம். இறுதிக் காட்சியில் கர்ணனான தாண்டவமும், குந்தி தேவியாக கல்யாணமும் நடிக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கும் தருணத்திற்கு உத்திரவாதம். அதன் பின் அவரின் திறமையை உணர்ந்து தவறை நினைத்து தாண்டவம் கல்யாணத்தின் கால்களில் விழுவதும், அர்ஜுனன் வேடமிட்டு ஆடும் நடனம் சிலிர்க்க வைத்து விடுகிறது. இதனிடையே இளமை பருவத்து கல்யாணமாக சாதாரண தோற்றத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் வித்தியாசத்தை காட்டி நடித்துள்ளார். பல விருதுகள் காத்திருக்கிறது உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் பாரி இளவழகன்.
சின்ன திரையில் சாதித்த சேத்தன், பெரிய திரையில் தன்னுடைய சாதனையை நிலைநிறுத்த பல போராட்டங்களை சந்தித்து விடுதலை படத்தில் நல்ல பெயரெடுத்து அதன் பின் இந்த படத்தில் படம் முழுவதும் தன் யதார்த்த நடிப்பு, வசன உச்சரிப்பு, நாட்டிய அசைவு என்று பன்முகங்களை காட்டி தாண்டவம் என்ற முக்கிய வில்லத்தனத்தில் பேசப்படும் கதாபாத்திரத்தில் நடிப்பில் தாண்டவமாடியிருக்கிறார் எனலாம். ஒவ்வொரு காட்சியிலேயும் அவரின் பங்களிப்பு, வெறுப்பை தன் கண்களிலும், வஞ்சகத்தை தன் செயலில் காட்டும் விதத்தில் அசாத்திய நடிப்பு திறனால் கவர்கிறார். இறுதியில் இறக்கும் தருவாயில் கண்களை மூடிக் கொண்டு இருக்கும் காட்சியில் கல்யாணத்தின் நடிப்பை பார்த்து அசந்து கண்களை திறந்து கண்ணீர் விடும் காட்சி சிறப்பு. வெல்டன்.
கல்யாணத்தின் காதலியாக அம்மு அபிராமி தைரியமிக்க கூத்து கலைஞரின் மகளாக, நினைத்ததை சடாரென்று பேசி விட்டு செல்வதும், நிராகரிப்பை ஏற்று கொள்ள முடியாமல் சண்டையிட்டு செல்லும் காட்சியிலும் கொடுத்த வேலையை அழுத்தமாக செய்துள்ளார்.
பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் இளவரசாக கல்யாணத்தின் தந்தையாக ஸ்ரீகிருஷ்ண தயாள் குறிப்பிட்ட சில காட்சிகள் என்றாலும் மனதை விட்டு அகலாத கதாபாத்திரத்தில் சுயம்புவாக கற்றுக் கொண்டு தேர்ச்சி பெற்று நடித்து புகழடைய, இறுதியில் விரக்தியில் அர்ஜுனன் வேடமிட்டு இறக்கும் காட்சிகளில் ஜொலிக்கிறார்.
இவர்களுடன் மணிமேகலை தாயின் கவலையையும், ஆதாங்கத்தையும், புலம்பலையும் ஒரு சேர கொடுத்து கண் முன்னே கலங்க வைத்து விடுகிறார் இவர்களுடன் வசந்த் மாரிமுத்து மற்றும் பிற கிராமத்து முகங்களின்; பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு பலம்.
இசைஞானி இளையராஜா இசை படத்தில் பங்களிப்பு, அனைத்து காட்சிகளிக்கும் உயிர் கொடுத்து மெருகேற்றி பின்னணி இசையிலும் தனித்தன்மையோடு மிளிரச்செய்துள்ளது படத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது.
கோபி கிருஷ்ணனின் காட்சிக் கோணங்கள் அசத்தல் ரகம். காலத்திற்கேற்ற வண்ண கலவையில் வேறுபடுத்தி நாடக கலைஞர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் விதமும், மகாபாரதத்தின் நாடகக் காட்சிகள் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
கலை இயக்குனரின் பங்களிப்பு படத்திற்கு முக்கிய பலமாக இருப்பதோடு, மற்ற தொழில் நுட்ப கலைஞர்களின் அளப்பரிய பணி குறிப்பிடத்தக்கது.
தனது தந்தையின் பாரம்பரிய நாட்டுப்புற கலையை நிலைநிறுத்த போராடும் மகனின் போராட்ட வாழ்க்கையே படத்தின் திரைக்கதையாக அமைத்து எழுதி,நடித்து இயக்கியும் இருக்கிறார் பாரி இளவழகன். முதல் காட்சியில் பெண் வேடமிட்டு ஒப்பனை முடிந்து நடனமாடுவதில் தொடங்கும் காட்சி இறுதியில் அர்ஜுனன் வேடமிட்டு ஒப்பனை முடிந்து நடனமாடுவதில் முடித்திருப்பதிலேயே படத்தின் கதையை புரிய வைத்துவிடுகிறார் இயக்குனர் பாரி இளவழகன். நாடகக் குழுக் கலைஞர்களின் வாழ்க்கையை நன்றாக கோர்வையாக சுவாரஸ்யமாக கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் உள்ள காதல், துரோகம், ஏக்கம், துயரம், பரிதாபம், பொறாமை, பழி வாங்குதலுடன் அசத்தலான திரைக்கதை, யதார்த்தமான நடிப்பு, அற்புதமான நடிகர்கள், வியத்தகு தருணங்கள் வித்தியாசமான தெருக்கூத்து கலைஞர்களின் உலகத்தை நம் கண் முன்னே படைத்திருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன். இவரின் கடின உழைப்பிற்கு ஒரு ராயல் சல்யூட். விருதுகளுடன் பல வெற்றிகளை நிச்சயம் தடம் பதிக்கும் இந்த ஜமா.
மொத்தத்தில் லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாய் தேவானந்த் எஸ், சசிகலா எஸ், சாய் வெங்கடேஸ்வரன் எஸ் தயாரித்து பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்சாண்டர் வெளியிட்டிக்கும் ஜமா மறைந்து கொண்டிருக்கும் உன்னத தெருக்கூத்துக்கலையை மீட்டெடுத்து வித்தியாசத்துடன் சுவாரஸ்யத்துடன் வாழ்வியல் நிஜத்துடன் கலந்து பேசி சகாப்தம் படைத்திருக்கிறது.