லால் சலாம் சினிமா விமர்சனம் : லால் சலாம் மதம் கடந்த மனிதநேயத்திற்கு கொடுக்கும் சல்யூட் கலந்த ட்ரிப்யூட் | ரேட்டிங்: 3.5/5
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் லால் சலாம் படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இதில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ்(சிறப்புத் தோற்றம்), ஜீவிதா, அனந்திகா சனில்குமார், செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன், நிரோஷா, தம்பி ராமையா,ஆதித்ய மேனன், விவேக் பிரசன்னா, நந்தகுமார், தன்யா பாலகிருஷ்ணா, தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் : விஷ்ணு ரங்கசாமி, படத்தொகுப்பாளர் : பி.பிரவின் பாஸ்கர், கலை இயக்குனர் : ராமு தங்கராஜ், நடன இயக்குனர் : தினேஷ், சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் : ‘அனல்’ அரசு, ‘கிக்காஸ்’ காளி, ‘ஸ்டண்ட்’விக்கி, பாடலாசிரியர்கள் : யுகபாரதி, சினேகன், கபிலன், விவேக், ஏ.ஆர்.ரஹ்மான், மஷ_க் ரஹ்மான், கதை மற்றும் வசனகர்த்தா : விஷ்ணு ரங்கசாமி, ஆடை வடிவமைப்பாளர் : சத்யா என்.ஜே, ஒலி வடிவமைப்பாளர் : பிரதாப், ஒலிக்கலவை: எஸ்.சிவகுமார் (ஏ.எம் ஸ்டுடியோஸ்), படங்கள் : ஆர்.எஸ். ராஜா, விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன் செல்லையா, நிர்வாகத் தலைமை(லைகா புரொடக்ஷன்ஸ்) : ஜி.கே.எம். தமிழ் குமரன், நிர்வாகத் தயாரிப்பாளர் : சுப்ரமணியன் நாராயணன், மக்கள் தொடர்பு: ரியாஸ்.கே.அஹ்மத்
1990 காலகட்டத்தில் மூரார்பாத் என்ற ஊரில் லிவிங்ஸ்டன் – ஜீவிதா தம்பதிகளின் மகன் திருநாவுக்கரசு என்கிற திரு (விஷ்ணு விஷால்) மற்றும் மொய்தீன் பாய் (ரஜினிகாந்த்)- நிரோஷா மகன் சம்சுதீன் என்கிற ஷம்சு (விக்ராந்த்) ஆகியோர் தந்தைகளைப்போல் பால்ய நண்பர்கள். சிறு வயதில் திருவிற்கு ஏற்பட்ட மனக்கசப்பால் சம்சுதீன் மீது வெறுப்பு ஏற்பட்டு பகையாகிறது. ஆனால் லிவிங்ஸ்டன் – மொய்தீன் பாய் இருவரும் உயிர் நண்பர்களாக இருப்பதால், மகன்களும் வெறுப்புடன் பழகுகிறார்கள். இந்த பகை அவர்களின் கிராமத்திலும் கிரிக்கெட் மைதானத்திலும் பரவுகிறது. மொய்தீன் பாயால் தொடங்கப்பட்ட த்ரீ ஸ்டார் அணி, திரு மற்றும் ஷம்சு இருவரும் விளையாடி வெற்றி பெற்ற அணியாக இருக்கிறது, ஆனால் திருவின் வெற்றியைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் மற்றும் உள்நோக்கம் கொண்டவர்கள் அவரை அணியிலிருந்து வெளியேற்றுகின்றனர். திரு போட்டியாக எம்சிசி அணியை உருவாக்குகிறார், மேலும் இரு அணிகளும் கிராமத்தில் வௌ;வேறு மதங்களை (இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள்) பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட எம்சிசி அணி வெற்றி பெறுகின்றனர். முன்பு அமைதியான நல்லிணக்கத்துடன் வாழ்ந்த கிராமத்தில் இந்த கிரிக்கெட் அணியால் இந்து முஸ்லிம் என்று இரண்டாக பிரிகிற சூழல் உருவாகிறது. இந்நிலையில் மொய்தீன் பாய் மும்பையில் ஜவுளி வியாபாரம் செய்யும் பெரிய தொழிலதிபராக விளங்கி நன்மைகள் செய்யும் தாதாவாக உலா வருகிறார்.அவருடைய மகன் சம்சுதீன் பெரிய கிரிக்கெட் வீரராக திகழ்கிறார். இவரின் திறமைக்கு ரஞ்சி டிராபியில் இடம் கிடைக்கிறது. இதனால் பெரு மகிழ்ச்சியில் திளைக்கிறார் மொய்தீன் பாய். திருவின் தந்தை ஊரில் திடீரென்று இறக்க தாய் ஜீவிதாவிற்கு அண்ணன் போல் பாசம் காட்டி மொய்தீன் பாய் அவருடைய குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்.இதனிடையே கிரிக்கெட் போட்டியில் திருவையும் அவரது அணியையும் வீழ்த்த மும்பையிலிருந்து சம்சு வரவழைக்கப்படுகிறார். போட்டி இறுதியில் இரு அணிகளுக்கும் சண்டை ஏற்பட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல்வாதியான நந்தகுமார் மற்றும் மகன் விவேக் பிரசன்னாவின் சதியால், கிரிக்கெட் தொடரில் மதக்கலவரம் மூள்கிறது. இந்த கலவரத்தில் திரு, சம்சு கையை எதிர்பாராதவிதமாக வெட்ட போலீசில் சரணடைந்து சிறைக்குச் செல்கிறார்.ஒரு கையை இழந்த சம்சு திருவை பழிவாங்க காத்திருக்கிறார். இந்நிலையில் ஊரில் கோயில் திருவிழா நடைபெற வேலைகள் மும்முரமாக நடைபெற்று வர இந்த மதக்கலவரத்தால் தடைபெறுகிறது. இதனால் கோபமடையும் பொதுமக்கள் திரு தான் இதற்கு காரணம் என்று வசைபாடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பக்கத்து ஊர் தேரும் இவர்களுக்கு திருவிழாவிற்கு கிடைக்காமல் போகிறது. அமைதியான கிராமத்தில் அனைத்து நட்புறவும் உடைந்து, முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடைகிறது. சம்சுதீன் திருவை பழி வாங்கினாரா? மகன் போல் பாவித்த திருவை மொய்தீன் பாய் என்ன செய்தார்? போட்டி மற்றும் கிராமத்தின் இந்து-முஸ்லீம் மோதலுக்கு மொய்தீன் பாய் முற்றுப்புள்ளி வைத்தாரா? ஊரில் தேர் திருவிழா விமர்சையாக நடைப்பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ரஜினிகாந்த் தனது பவர் பேக் நடிப்பை வெளிக்கொண்டு வந்து முஸ்லீமாக மொய்தீன் பாய் கேரக்டரில்; நடை, உடை, பாவனை சுவாரஸ்யம். அவருக்கு வழங்கப்பட்ட சில உரையாடல்கள் அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளை தெளிவாக வெளிப்படுத்துகின்றன மற்றும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அர்த்தமுள்ளவையாகவும், உண்மையில் அவை மெய்சிலிர்க்க தூண்டும் தருணங்கள். அதுமட்டுமல்லாமல், தன் மகன் மேல் பாசத்தை பொழியும் அப்பாவாகவும், மதம், ஜாதி வேறுபாடின்றி அனைவரும் ஒன்று என்று நம்பும் சமூகத் தலைவர் என ரஜினிகாந்த் அழகாக தன் நடிப்பாலும் செயல்களாலும் உணர்த்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகள் கூட மிகைப்படுத்தப்படவில்லை. லால் சலாமின் முதுகெலும்பு ரஜினிகாந்த்.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை உள் வாங்கி கிரிக்கெட் வீரர்களாக மிகவும் இயல்பாக செய்திருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் கிரிக்கெட் வீரர்களாக இருந்தவர்கள் என்பதால் அவர்களால் எளிதாக செய்ய முடிந்துள்ளது. இருவரும் பகையையும், நட்பையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறப்பு தோற்த்தில் கிரிக்கெட் விரர் கபில்தேவ், மகன் விஷ்ணுவின் மீது அக்கறை கொண்டு நல்வழி செல்ல போராடும் தாயாக ஜீவிதா, அனந்திகா சனில்குமார், செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன், நிரோஷா, ;பி ராமையா,ஆதித்ய மேனன், விவேக் பிரசன்னா, நந்தகுமார், தன்யா பாலகிருஷ்ணா, தங்கதுரை ஆகியோர் படத்திற்கு பலம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு மதிப்பு சேர்க்கிறது, இரண்டு வௌ;வேறு மதங்களை வெளிப்படுத்த தந்திருக்கும் இசையும், பாடல்களும் கூடுதல் பலத்தோடு இரண்டையும் இணைத்துள்ளது.
கதை, வசனம், ஒளிப்பதிவு என்ற மூன்றையும் திறம்பட கையாண்டு 90 காலகட்டத்தின் சூழலுடன் கிராமத்தின் எழிலுடன், தேர் திருவிழா, கிரிக்கெட்டை மையப்படுத்தி தன் காட்சிக்கோணங்களால் அசத்தியுள்ளார் விஷ்ணு ரங்கசாமி.
பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பு சிறப்பாக உள்ளது இருந்தாலும் சில ப்ளாட் பாயின்ட்கள் தெளிவாக விளக்கப்படவில்லை மற்றும் சில காட்சிகள் படத்தின் மனநிலையை குறைக்கும் வகையில் எடிட் செய்திருக்கலாம்.
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்றைய அரசியல் மற்றும் சமூக சூழலுக்கு பொருத்தமான ஒரு படத்தை எடுத்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் ஒரு சமூக நல்லிணக்கம் கலந்த படம். பார்வையாளர்கள் ரஜினிகாந்தை மொய்தீன் பாயாக விரும்பும் அளவிற்கும் பேசும் வசனங்களும் நிச்சயம் அவர்களின் மனதில் பதியும். எல்லாவற்றிற்கும் மேலாக சாதிமத பேதமின்றி பழகவும், மனிதநேயம் ஒற்றுமை ஆகியவற்றைப் பற்றி அலசும் படம். இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி.
மொத்தத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் லால் சலாம் மதம் கடந்த மனிதநேயத்திற்கு கொடுக்கும் சல்யூட் கலந்த ட்ரிப்யூட்.