கெழப்பய திரைப்பட விமர்சனம் : கெழப்பய தளர்ந்த வயதிலும் தளராத மனம் படைத்தவன் என்றும் வெல்வான் | ரேட்டிங்: 3/5
சீசன் சினிமா சார்பில் யாழ் குணசேகரன் கெழப்பய படத்தை தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார்.
இதில் கெழப்பயவாக கதிரேசகுமார், கிருஷ்ணகுமார், விஜய ரண தீரன், கே.என்.ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, விஏஓவாக ‘உறியடி’ ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு – அஜித்குமார், எடிட்டர் – கே.என்.ராஜேஷ், இசை – கேபி, பிஆர்ஓ – நிகில் முருகன்.
தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார் முதியவர் கதிரேசகுமார். கிராமத்திலிருந்து பழைய மோரிஸ் காரில் கர்ப்பிணி பெண் உட்பட ஐந்து பேர் குறுகிய தார் ரோடில் வந்து கொண்டிருக்கின்றனர். இருபுறமும் முள் செடிகள் நிறைந்திருக்க, ஆரவாரம் இல்லாத ரோடில் கார் பயணிக்கிறது. அந்த சமயத்தில் காருக்கு முன்னால் சைக்கிளில் மெதுவாக சென்று கொண்டிருக்கிறார் கதிரேசகுமார். காரில் இருந்தவர்கள் பொறுமையிழந்து ஹாரன் அடித்தும், உறக்க கூப்பிட்டும் எதற்கும் செவி சாய்க்காமல் சென்று கொண்டிருக்கிறார் முதியவர் கதிரேசகுமார். இதனால் ஆத்தரமடைந்து காரிலிருந்து இறங்கி முதியவரிடம் சண்டை போட்டு சைக்கிளை கிழே தள்ளி விடுகின்றனர். ஆனாலும் முதியவர் அவர்களை முறைத்துக் கொண்டே மீண்டும் சைக்கிளை எடுத்து நடுரோடில் நிறுத்தி பழுது பார்க்கிறார். இதனால் காரில் வந்தவர்கள் ஆத்திரமடைந்து முதிவருக்கு தர்ம அடி கொடுக்கின்றனர். இந்த சமயத்தில் அங்கே வரும் விஏஓ உறியடி ஆனந்தராஜ் அவர்களை தடுத்து முதியவரை காப்பாற்றுகிறார். அடி பலமாக வாங்கியும் எதற்கும் அசைந்து கொடுக்காத முதியவர் நடுரோட்டில் சைக்கிளோடு உட்கார்ந்து கொண்டு எழுந்து வர மறுக்கிறார். இதனால் காரில் வந்தவர்கள் சைக்கிளை தூக்கி வீச முதியவர் அவர்கள் வந்த காரின் சாவியை எடுத்து புல்வெளியில் எறிந்து விடுகிறார். அதன் பின்னர் காரின் டயரை பஞ்சர் செய்து விடுகிறார். இவர்களை ஏன் போக விடாமல் தடுக்கிறார் என்பது புரியாமல் விஏஒ திகைக்கிறார். முதியவர் தன் செல்போனில் குறுந்தகவல் ஒன்றை அனுப்ப, அந்த இடத்திற்கு போலீசார் வருகின்றனர். இதனிடையே இந்த சண்டையை பார்க்கும் ஊர் மக்கள் முதியவரின் வீட்டில் தெரிவிக்கின்றனர். முதயவரின் மகனும், மருமகளும் அங்கு வந்து சேர்க்கிறார்கள். அனைவருக்கும் முதியவரின் செயல் வியப்பை ஏற்படுத்துகிறது. இறுதியில் முதியவர் ஏன் அவ்வாறு தடங்கல் செய்தார்? போலீசாரை வரவழைக்க காரணம் என்ன? காரில் வந்தவர்கள் என்ன ஆனார்கள்? போலீசார் கண்டுபிடித்த ரகசியம் என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.
முதியவராக தயாரிப்பாளர் கதிரேசகுமார் தொண்ணூற்றைந்து சதவீதம் வசனம் பேசாமல் முறைத்துக் கொண்டும், தன் சைக்கிளை மட்டுமே சரி செய்து அடியும் வாங்கி கொண்டு ரத்தம் வழிய பொறுமையாக முதியவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்குமோ அதை சரியாக செய்து நடித்திருக்கிறார். அந்த பொறுமை இடைவேளை வரை செல்கிறது, அதன் பின் தான் கொஞ்சம் வசனத்துடன் அவருடைய நோக்கமும் பிளானும் மக்களை காப்பாற்ற எடுக்கிற முடிவும், எவ்வளவு பெரிய ஆபத்தை தடுத்திருக்கிறார் என்பதை பொறுமையாக தன் செயல்களில் காட்டியிருக்கிறார் என்பது புரிகின்றது.
கிருஷ்ணகுமார், விஜய ரண தீரன், கே.என்.ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, விஏஓவாக ‘உறியடி’ ஆனந்தராஜ் அனைவருமே கோபத்தையும், பொறுமையையும் இழந்த ஊர் மக்கள் என்ன பேசுவார்களோ, அதை உடல் மொழியில் நன்றாக வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒளிப்பதிவு – அஜித்குமார் கதைக்கேற்ற காட்சிக்கோணங்களை திறம்பட கையாண்டுள்ளார்.
இசை – கேபி சில இடங்களில் முதியவரை காண்பிக்கும் போது காதை பிளக்கும் ஒலியை குறைத்து இசையை சிறப்பாக கையாண்டிருக்கலாம்.
மெதுவாக நகரும் கதைக்களத்தை இன்னும் சுறுசுறுப்பாக்கியிருக்கலாம் எடிட்டர் கே.என்.ராஜேஷ்.
பெரியவர்களை மரியாதை குறைவாக திட்டும் போது பயன்படுத்தும் பெயர் கெழப்பய. ஆனால் இந்த படத்தில் முதியவர் நல்லது தான் செய்கிறார். முதியவர்களை அவமதிக்காமல் அதற்கேற்ற டைட்டிலை போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதே சமயம் முதியவரை வைத்து படம் முழுவதும் ஒரு வித்தியாசமான அணுகுமுறையோடு கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் யாழ் குணசேகரனுக்கு பாராட்டுக்கள். மெதுவாக நகர்ந்தாலும் என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள இடைவேளை வரை உட்கார வைத்திருப்பதில் பாதி வெற்றி பெற்று விடுகிறார் இயக்குனர் யாழ் குணசேகரன். தெனாலிராமன் போல் சாதுர்யமாக செயல்பட நினைக்கும் முதியவரின் செயல்பாடுகளை இன்னும் சுவாரஸ்யம் கலந்து விறுவிறுப்புடன் கொடுத்திருந்தால் அழுத்தமான கதைக்களமாக பதிவாகியிருக்கும். இருந்தாலும், யாழ் குணசேகரனின் புதிய கோணத்தின் முயற்சிக்கும், உழைப்புக்கும் பாராட்டுக்கள்.
மொத்தத்தில் சீசன் சினிமா சார்பில் யாழ் குணசேகரன் தயாரித்திருக்கும் கெழப்பய தளர்ந்த வயதிலும் தளராத மனம் படைத்தவன் என்றும் வெல்வான்.