செங்கல்பட்டில் உடனடியாக தடுப்பூசி உற்பத்தியை தொடங்கிடுக: ஆய்வு நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
செங்கல்பட்டு HLL Biotech நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்து உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (25.5.2021) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் HLL Biotech நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் நிறுவனமான HLL Biotech நிறுவனத்திற்கு உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், HLL Biotech நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விஜயன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.